மிஸோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் மும்முனைப்போட்டி

கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மிஸோரம் மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ், மிஸோ தேசிய முன்னணி, பாஜக ஆகிய கட்சிகளிடையே மும்

கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மிஸோரம் மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ், மிஸோ தேசிய முன்னணி, பாஜக ஆகிய கட்சிகளிடையே மும்
முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.
40 தொகுதிகளைக் கொண்ட மிஸோரம் சட்டப்பேரவைக்கு வரும் 28-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஆளும் காங்கிரஸ் கட்சியும், மிஸோ தேசிய முன்னணி கட்சியும் முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாகத் திகழ்கின்றன. 
அதே வேளையில், கடந்த 1972-ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது சட்டப்பேரவைத் தேர்தல் முதல் கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் வரை, இன்னமும் ஒரு சட்டப்பேரவைத் தொகுதியைக் கூட கைப்பற்றாத பாஜக-வும் இந்தத் தேர்தலில் வெற்றி பெற தீவிரமாகப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் ஆட்சியிலுள்ள பாஜக, மிஸோரத்திலும் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டால், அதன் காங்கிரஸ் இல்லா வடகிழக்கு என்ற இலக்கு நிறைவாகிவிடும்.
மிஸோ தேசிய முன்னணி கட்சியானது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்தாலும், பாஜக 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.
காங்கிரஸ் மற்றும் தேசிய முன்னணி கட்சிகள் மாநில மக்களுக்காக எதுவும் செய்யவில்லை எனவும், கிறிஸ்தவ தேவாலயங்களை அக்கட்சிகள் மதிப்பதில்லை எனவும் கூறி பாஜக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதன் தேசிய தலைவர் அமித் ஷா, இந்த ஆண்டு மிஸோரம் மக்கள், பாஜக ஆட்சியின் கீழ்தான் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவார்கள் என்று சூளுரைத்துள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் மிஸோ தேசிய முன்னணி கட்சிகள் ஒன்றையொன்று மாறி மாறிக் குற்றம் சாட்டி வருகின்றன. கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி, பாஜகவும், மிஸோ தேசிய முன்னணியும் மறைமுகமாகக் கூட்டணி வைத்துள்ளன என்று வீடு வீடாகத் துண்டுப் பிரசுரங்களுடன் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
காங்கிரஸின் இந்தக் குற்றச்சாட்டை மறுத்து வரும் மிஸோ தேசிய முன்னணி, பழைய ஆவணங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை ஆதாரமாக வைத்து காங்கிரஸ் கட்சியின் மீது குற்றம் சாட்டி வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com