எதிர்க்கட்சிகள் சந்திக்கும் கூட்டம் ஒத்திவைப்பு: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

பாஜகவுக்கு எதிரான முன்னணியை அமைப்பது குறித்து, எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி கலந்தாலோசிக்க, வரும் 22-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக ஆந்திர பிரதேச முதல்வரும், தெலுங்கு தேசம்
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள நாபன்னா பகுதிக்கு  திங்கள்கிழமை வந்த சந்திரபாபு நாயுடுவுக்கு மலர்க்கொத்து கொடுத்து  வரவேற்கும் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள நாபன்னா பகுதிக்கு  திங்கள்கிழமை வந்த சந்திரபாபு நாயுடுவுக்கு மலர்க்கொத்து கொடுத்து  வரவேற்கும் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி.

பாஜகவுக்கு எதிரான முன்னணியை அமைப்பது குறித்து, எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி கலந்தாலோசிக்க, வரும் 22-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக ஆந்திர பிரதேச முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு திங்கள்கிழமை அறிவித்தார்.
இந்த அறிவிப்பை, மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜியை சந்தித்த பிறகு அவர் வெளியிட்டார்.
பாஜகவுக்கு எதிரான மாபெரும் கூட்டணியை உருவாக்கும் முயற்சியை சந்திரபாபு நாயுடு முன்னெடுத்துள்ளார். அதுதொடர்பாக, பாஜக சாராத எதிர்க்கட்சிகளின் தலைவர்களை சந்தித்து அதற்கான ஆதரவு கோரி வருகிறார். அந்த வரிசையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை அவர் திங்கள்கிழமை நேரில் சந்தித்தார். 
இருவரும் சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு, மம்தாவுடன் சேர்ந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு கூறியதாவது:
பாஜகவுக்கு எதிரான மாபெரும் கூட்டணி அமைப்பது தொடர்பாக எதிர்க்கட்சிகள் வரும் 22-ஆம் தேதி தில்லியில் கூடி ஆலோசிப்பதாக இருந்தது. தற்போது சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறுவதால் அந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. கூட்டம் நடைபெறும் மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும். 
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்கு முன்பாக அந்தக் கூட்டம் நடைபெறும். குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 11 முதல் ஜனவரி 8-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. 
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியில் சிபிஐ, அமலாக்க இயக்குநரகம், வருமான வரித்துறை, ரிசர்வ் வங்கி, மத்திய தலைமை கணக்குத் தணிக்கை ஆகிய அமைப்புகள் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. தேசம், ஜனநாயகம், அரசு அமைப்புகள் ஆகியவற்றை காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.
கொல்கத்தாவில் ஜனவரி 19-ஆம் தேதி மம்தா பானர்ஜி நடத்தும் பொதுக் கூட்டத்தில் நான் பங்கேற்பேன் என்று சந்திரபாபு நாயுடு கூறினார்.
அப்போது செய்தியாளர்கள், "பாஜகவுக்கு எதிரான இந்த முன்னணியின் பிரதான தலைவராக யார் முன்னிறுத்தப்படுவார்கள்?' என்று கேள்வி எழுப்பினர். 
அதற்கு சந்திரபாபு நாயுடு, "நரேந்திர மோடியுடன் ஒப்பிடுகையில் நாங்கள் அனைவருமே மூத்த தலைவர்கள்' என்றார். மம்தா பானர்ஜி பதிலளிக்கையில், "இந்தக் கூட்டணியில் அனைவருமே முக்கியமான தலைவர்களே' என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com