7 ரோஹிங்கயாக்களை நாடுகடத்துகிறது இந்தியா

அஸ்ஸாம் மாநிலத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த ரோஹிங்கயாக்கள் 7 பேரை வியாழக்கிழமை(அக்.4) மியான்மர் நாட்டுக்கு திருப்பி அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது. இந்தியாவில் தங்கியுள்ள ரோஹிங்கயா முஸ்லிம்களை

அஸ்ஸாம் மாநிலத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த ரோஹிங்கயாக்கள் 7 பேரை வியாழக்கிழமை(அக்.4) மியான்மர் நாட்டுக்கு திருப்பி அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது. இந்தியாவில் தங்கியுள்ள ரோஹிங்கயா முஸ்லிம்களை மியான்மருக்கு திருப்பி அனுப்புவது இதுவே முதல்முறையாகும்.
இதுகுறித்து தில்லியில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சட்ட விரோதமாக இந்தியாவில் தங்கியிருந்த ரோஹிங்கயாக்கள் 7 பேரை போலீஸார் கடந்த 2012}ஆம் ஆண்டு கைது செய்தனர். அதன் பின்னர் அவர்கள் அஸ்ஸாம் மாநிலத்தின் சில்சார் பகுதியில் உள்ள தடுப்பு காவல் மையத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் குறித்து இந்தியாவில் உள்ள மியான்மர் தூதரகத்தில் உள்ள வெளியுறவு தூதர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த 7 பேரும் மியான்மரின் ராகைன் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அதிகாரிகள் உறுதிபடுத்தினர். அதையடுத்து அவர்கள் மியான்மருக்கு திரும்பி அனுப்பப்படுகின்றனர் என்று அந்த அதிகாரி கூறினார்.
முன்னதாக, ரோஹிங்கயாக்களை நாடு கடத்தும் விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த நீதிபதிகள், ரோஹிங்கயா விவகாரத்துக்கு இதுவரை எந்த வரையறையும் முடிவு செய்யப்படவில்லை. அதனால் அதை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று  தெரிவித்திருந்தனர். இந்நிலையில்,  ரோஹிங்கயாக்களை நாடு கடத்த கூடாதென்று உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
ஐ.நா அகதிகள் அமைப்பில் பதிவு செய்யப்பட்ட 14,000 ரோஹிங்கயா அகதிகள் இந்தியாவில் தங்கியுள்ளதாக நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு அரசு தெரிவித்திருந்தது. எனினும் சுமார் 40,000 }க்கும் மேற்பட்ட ரோஹிங்கயாக்கள் இந்தியாவில் தங்கியுள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மியான்மரின் ராகைன் மாவட்டத்தில் ராணுவத்தினர் ரோஹிங்கயா பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து அந்த பகுதியில் இருந்த மக்கள் நாட்டை விட்டு வங்கதேசம், இந்தியா போன்ற நாடுகளில் அகதிகளாக 
தஞ்சமடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com