நீதிபதிகளிடையே நிலவும் தவறான புரிதல்களை ரஞ்சன் கோகோய் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்

உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடையே நிலவும் தவறான புரிதல்களை புதிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி என். சந்தோஷ் ஹெக்டே வேண்டுகோள்
நீதிபதிகளிடையே நிலவும் தவறான புரிதல்களை ரஞ்சன் கோகோய் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்

உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடையே நிலவும் தவறான புரிதல்களை புதிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி என். சந்தோஷ் ஹெக்டே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவி வகித்தபோது, வழக்குகளை நீதிபதிகள் அமர்வுக்கு ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக 4 மூத்த நீதிபதிகள் வெளிப்படையாக கடந்த ஜனவரி மாதம் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். அவர்களில் உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக தற்போது பதவியேற்றுள்ள மூத்த நீதிபதி ரஞ்சன் கோகோயும் ஒருவராவார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஒருவருக்கு எதிராக சக நீதிபதிகள் குற்றச்சாட்டுகளை தெரிவித்தது இந்திய நீதித்துறை வரலாற்றில் அதுவே முதல்முறையாகும். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும், தீபக் மிஸ்ரா மற்றும் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தெரிவித்த 4 மூத்த நீதிபதிகள் இடையே பின்னர் சமரசம் ஏற்பட்டது. இதனால் பிரச்னை முடிவுக்கு வந்தது. இதனிடையே, தீபக் மிஸ்ரா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியிலிருந்து அண்மையில் ஓய்வு பெற்றார். புதிய தலைமை நீதிபதியாக கோகோய் புதன்கிழமை பதவியேற்றார். இந்நிலையில், ஹைதராபாதில் பிடிஐ செய்தியாளருக்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நீதித்துறை நடவடிக்கைகளில் மேலும் வெளிப்படைத்தன்மையை கோகோய் ஏற்படுத்த வேண்டும். நீதித்துறை அலுவல்களை விடியோ பதிவு செய்யவும், நேரிடையாக ஒளிபரப்பவும் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கு முன்பு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் இடையே தவறான புரிதல்கள் நிலவியது. இந்த தவறான புரிதல்கள், ஏராளமான சம்பவங்கள் நடைபெற காரணமாகிவிட்டது. இதனால் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை குறைந்து விட்டது.
நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை எப்போது முழுவதும் போகிறதோ, அப்போது ஜனநாயகமும் முடிவுக்கு வந்துவிடும். சக நீதிபதிகளுடன் தலைமை நீதிபதி பேசி நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அந்த நடைமுறை இல்லாத காரணத்தினால்தான், முன்பு நீதிபதிகளிடையே தவறான புரிதல்கள் ஏற்பட்டு, பொது பிரச்னையாக உருவெடுத்தது. அதை வைத்து பல்வேறு சம்பவங்களும் அரங்கேறின. இதேபோல் மீண்டும் நடக்கக் கூடாது.
காலியாக இருக்கும் நீதிபதிகள் பணியிடங்களில் உடனடியாக புதியவர்களை நியமிக்க வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டால், வழக்குகள் தேக்கமடையும். தனது பதவிக்காலத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளுக்கு கோகோய் தீர்வு கண்டால், அது மிகப்பெரிய சாதனையாகும் என்றார் சந்தோஷ் ஹெக்டே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com