மத்திய அரசு அறிவிப்பினைத் தொடர்ந்து பெட்ரோல் , டீசல் விலையைக் குறைக்கும் ஆறு மாநிலங்கள் 

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பினைத் தொடர்ந்து ஆறு மாநிலங்களும் விலைகுறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளன. 
மத்திய அரசு அறிவிப்பினைத் தொடர்ந்து பெட்ரோல் , டீசல் விலையைக் குறைக்கும் ஆறு மாநிலங்கள் 

புது தில்லி: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பினைத் தொடர்ந்து ஆறு மாநிலங்களும் விலைகுறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளன. 

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சரக்கு வாகனங்களுக்கான வாடகை அதிகரித்து, அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கடுமையான துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் தில்லியில் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி வியாழனன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மத்திய அரசானது, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான தனது கலால் வரியில் இருந்து ரூ. 1.50 குறைத்துக் கொள்வது என்று முடிவு செய்துள்ளது. 

அதேபோல் எண்ணெய் நிறுவனங்களும் தங்களது லாபத்திலிருந்து ரூ. 1 குறைத்துக் கொள்வதென்று முடிவு செய்துள்ளன. இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது லிட்டருக்கு ரூ. 2.50 குறையும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.  பிரதமர் மோடியின் தலையீட்டின் பெயரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.  

மத்திய அரசின் இந்த முயற்சியின் காரணமாக பெட்ரோல் டீசல் விலையானது வியாழன் நள்ளிரவு முதல் ரூ. 2.50 குறைகிறது. இது போலவே மாநில அரசுகளும் பெட்ரோல் டீசல் மீதான மாநில அரசின் வரிகளை ரூ.2.50 அளவில் குறைக்குமானால், விலை ரூ. 5 குறையும். இதன் மூலம் லட்சக்கணக்கானோர் பயன்பெறுவார்கள்.  அத்தகைய நடவடிக்கையை மாநில அரசு எடுக்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. 

இந்நிலையில் மத்திய அரசின் அறிவிப்பினைத் தொடர்ந்து ஆறு மாநிலங்களும் பெட்ரோல், டீசல் விலைகுறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளன. 

மஹாராஷ்ட்ரா மற்றும் குஜராத் மாநில அரசுகள் முதலில் விலை குறைப்பு அறிவிப்பினை  வெளியிட்டன. தொடர்ந்து உத்தர பிரதேசம், சட்டீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் திரிபுரா மாநிலங்களும் பெட்ரோல், டீசல் விலைகள் குறைகப்படுவதாக அறிவித்தன. 

மாநில அரசுகளும் மத்திய அரசு அளவிலேயே ரூ.2.50 விலை குறைந்துள்ளதால் இம்மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ. 5 குறைய உள்ளது. இந்த விலைகுறைப்பானது வியாழன் நள்ளிரவு முதல்  அமலுக்கு வர உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com