ரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை

ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், இரு நாள் பயணமாக இந்தியாவுக்கு வியாழக்கிழமை வர இருக்கிறார். இருநாட்டுத் தலைவர்கள் இடையே நடைபெறும் இந்திய -ரஷிய வருடாந்திர சந்திப்பில் பங்கேற்பதற்காக வருகை
ரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை

ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், இரு நாள் பயணமாக இந்தியாவுக்கு வியாழக்கிழமை வர இருக்கிறார். இருநாட்டுத் தலைவர்கள் இடையே நடைபெறும் இந்திய -ரஷிய வருடாந்திர சந்திப்பில் பங்கேற்பதற்காக வருகை தரும் அவர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசவுள்ளார். இப்போது 19-ஆவது ஆண்டாக இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது.
புதினின் இந்தப் பயணத்தின்போது ரஷியாவிடம் இருந்து எஸ்-400 விமான எதிர்ப்பு ஏவுகணைகள் வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் மதிப்பு ரூ.36,792 கோடியாகும். இந்த ஏவுகணை வாங்கப்பட்டால், சீன எல்லையில் இந்தியாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு வலுவடையும். ஏனெனில், இது ரஷியாவின் அதிநவீன ஏவுகணையாகும். இதனை வாங்க சீனா கடந்த 2014-ஆம் ஆண்டே ரஷியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுவிட்டது. 
இது தவிர, பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்து முக்கியமாக, ரஷியாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள்; ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க இருக்கின்றனர். பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்பட இருதரப்பு உறவுகளை பலப்படுத்தும் விதமாக புதினின் இந்தப் பயணம் அமையும் என்று தெரிவிக்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை புதின் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேச இருக்கிறார். இந்திய-ரஷிய தொழிலதிபர்கள் கூட்டத்திலும் புதின் பங்கேற்கிறார்.
இதற்கிடையே, இந்தியாவும், ரஷியாவும் இணைந்து நவம்பர் 18 முதல் 28 வரையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ரஷிய ராணுவத்தின் கிழக்கு மாவட்டப் பிரிவு சார்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், அந்தப் படைப் பிரிவைச் சேர்ந்த 250 வீரர்கள் இந்தியாவுடனான பயிற்சியில் பங்கேற்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், பாபினா நகருக்கு அருகேயுள்ள பயிற்சி மைதானத்தில் இருநாட்டு கூட்டு ஒத்திகை நடைபெறவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com