இன்று சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: நிலக்கல்லில் பதற்றம்; பெண் பக்தர்கள் நிறுத்தம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு,
கேரள மாநிலம், நிலக்கல் பகுதியில் செவ்வாய்க்கிழமை பம்பை நோக்கிச் சென்ற பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட ஐயப்ப சேவா சங்க பெண் உறுப்பினர்கள்.
கேரள மாநிலம், நிலக்கல் பகுதியில் செவ்வாய்க்கிழமை பம்பை நோக்கிச் சென்ற பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட ஐயப்ப சேவா சங்க பெண் உறுப்பினர்கள்.


சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, கோயில் நடை மாதாந்திர பூஜைக்காக புதன்கிழமை முதல்முறையாக திறக்கப்படுகிறது. இதனிடையே, சபரிமலைக்கு பக்தர்கள் செல்லும் பிரதான வழியான நிலக்கல்லில், செவ்வாய்க்கிழமை கூடிய ஐயப்ப பக்தர்கள் அங்கு வரும் வாகனங்களை சோதனையிட்டு, 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் வந்தால் அவர்களை தடுத்து நிறுத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரச்னைக்குத் தீர்வுகாண்பது குறித்து ஐயப்பன் கோயிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, சபரிமலை தந்திரி, பந்தள ராஜ குடும்பத்தினர், ஐயப்ப சேவா சமாஜம் உள்ளிட்டோர் இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை. இதனால், புதன்கிழமை நடை திறப்பின்போது நடைபெறும் பூஜையில் தந்திரி பங்கேற்பது சந்தேகம் என்று தெரிகிறது.
தொடர்ந்து பேசுவோம்: பேச்சுவார்த்தைக்குப் பிறகு தேவஸ்வம் போர்டு தலைவர் ஏ.பத்மகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், பேச்சுவார்த்தை தோல்வி அடையவில்லை. இந்த பிரச்னைக்கு சுமுகமான தீர்வுகாண தேவஸ்வம் விரும்புகிறது. எனவே, தொடர்ந்து பேச்சு நடத்தப்படும். சபரிமலையில் ஏற்கெனவே உள்ள நிலையே (10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி இல்லை என்பது) நீடிக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி தேவஸ்வம் போர்டு என்ன செய்துவிட முடியும்? எனவே, தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறோம் என்றார்.
எங்களை குறை கூற வேண்டாம்: சபரிமலைக்கு செல்லும் பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்படும் விஷயத்தில் எங்களைக் குறை கூற வேண்டாம் என்று பந்தள ராஜா அரண்மனையின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் சசிகுமார் வர்மா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தேவஸ்வம் போர்டுடன் நடைபெற்ற கூட்டம் தீர்வு கிடைக்காமல் தோல்வியடைந்துவிட்டது. பக்தர்கள் எழுப்பும் கோரிக்கைகளை ஏற்க போர்டு தயாராக இல்லை. அனைத்து வயது பெண்களையும் சபரிமலையில் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக உடனடியாக மறுஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்பதே பிரதான கோரிக்கை. இப்போது, சபரிமலைக்கு செல்லும் 10 முதல் 50 வயதிலான பெண்கள் வழியிலேயே தடுத்து நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பந்தள ராஜா குடும்பத்தினரை யாரும் குறை கூறக் கூடாது என்றார்.
தீர்ப்புக்கு எதிராக அவசரச் சட்டம் - காங்கிரஸ் எம்பி: சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபாடு செய்ய அனுமதி அளித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அவசரச்சட்டத்தை இயற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு, காங்கிரஸ் எம்.பி. ஆன்டோ அந்தோணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சபரிமலை தீர்ப்புக்கு எதிராகவும், மாநில அரசுக்கு எதிராகவும் மாநில மகளிர் காங்கிரஸ், இந்திய முஸ்லிம் லீக் அமைப்பு ஆகியோர் சார்பில் எருமேலி பகுதியில், செவ்வாய்க்கிழமை தர்ணாவைத் தொடங்கி வைத்த அந்தோணி தெரிவித்ததாவது:
சபரிமலை கோயில் நடை புதன்கிழமை மாலை திறக்கப்படவுள்ளது. ஆனால், முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் நடைபெற்று வருகின்றன. சபரிமலை தீர்ப்புக்கு ஹிந்து பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டா பகுதியின் மக்களவை உறுப்பினர் என்ற முறையில், சபரிமலை தீர்ப்புக்கு எதிராக அவசரச்சட்டத்தை இயற்ற மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளேன். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளேன். ஆனால், அது தொடர்பாக எந்தவித பதிலும் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை.
ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மத்திய அரசு அதனை எதிர்த்து, அவசரச்சட்டத்தை இயற்றியது. பின்னர், நாடாளுமன்றத்தில் தனிச்சட்டத்தைக் கொண்டுவந்தது. அதேபோல், தற்போதும் சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு அவசரச்சட்டத்தை இயற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

அனைத்து மதத்தினர் தர்ணா
சபரிமலை ஐயப்பனின் நண்பராகக் கருதப்படும் வாவரின் மசூதி அமைந்துள்ள எருமேலி பகுதியில், ஹிந்து, கிறிஸ்தவம், முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறு மதங்களைச் சேர்ந்த பெண்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். தீர்ப்புக்கு எதிராக கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டனப் பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன. முக்கியமாக, பாஜக சார்பில் மாபெரும் பேரணி, பந்தளத்திலிருந்து திருவனந்தபுரம் வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பெண்களை யாராலும் தடுக்க முடியாது
உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்ட நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடுவதை யாராலும் தடுக்க முடியாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
இதுகுறித்து, திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: மாநிலத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை. சபரிமலை கோயிலை வைத்து மாநிலத்தில் வன்முறையை ஏற்படுவதை மாநில அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
சபரிமலைக்கு செல்லும் பக்தர்களை யாரும் தடுத்து நிறுத்தினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றபோது பெண்களை கோயிலுக்குள் அனுமதிப்பதற்கு காங்கிரஸும், பாஜகவும் ஆதரவு தெரிவித்தன. ஆனால், தற்போது அக்கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றன. அதிலும், காங்கிரஸைப் பொருத்தவரை, ஆர்எஸ்எஸ் பின்னணியில் நடைபெறும் போராட்டங்களில் பங்கேற்று வருகிறது. இது அக்கட்சிக்குள் வலதுசாரி (ஆர்எஸ்எஸ்) மனோபாவம் மேலோங்கிவிட்டதையே உணர்த்துகிறது என்றார் அவர்.

திருவனந்தபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்ற திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் ஏ.பத்மகுமார் (வலது), ஆணையர் என்.வாசு (இடது), பந்தள ராஜ அரண்மனையின் பிரதிநிதி சசிகுமார் வர்மா உள்ளிட்டோர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com