குவாலியரில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு செவ்வாய்க்கிழமை சென்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு வாளை நினைவு பரிசாக அளிக்கும் குருத்வாரா தலைமை குரு.
குவாலியரில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு செவ்வாய்க்கிழமை சென்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு வாளை நினைவு பரிசாக அளிக்கும் குருத்வாரா தலைமை குரு.

எம்.ஜே. அக்பர் விவகாரத்தில் மௌனம் காக்கும் பிரதமர் மோடி: ராகுல் தாக்கு

மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ள விவகாரத்தில், பிரதமர்


மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ள விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தி தொடர்ந்து 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சுற்றுப்பயணம் செய்தார். ஜோரா, சியோபூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி, பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வி போதிப்போம் என்று தெரிவிக்கிறார். அதேநேரத்தில் தனது அமைச்சரவை சகாவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு தெரிவிக்கப்படும்போது, அவர் மௌனம் ஆகிவிடுகிறார்.
உத்தரப் பிரதேசத்தில் பெண் ஒருவரை பாஜக எம்எல்ஏ பாலியல் வன்கொடுமை செய்தபோது, அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மௌனம் காத்தார்; பிரதமர் மோடியும் மௌனம் காத்தார். எனவே, பாஜக எம்எல்ஏ, மந்திரி ஆகியோரிடம் இருந்து நமது பெண் குழந்தைகளை காப்போம் என்று புதிய கோஷம் எழுப்புவோம்.
நாட்டின் பாதுகாவலராக இருக்க விரும்புவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். ஆனால் இதற்கு மாறாக, பிரபல தொழிலதிபர்கள் அனில் அம்பானி, மெஹூல் சோக்ஸி, நீரவ் மோடியின் உண்மையான பாதுகாவலர் தாம் என்பதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக அவர்களுக்காகவே பிரதமர் மோடி பணியாற்றினார்.
பெட்ரோல் விலை மிக கடுமையாக அதிகரித்துள்ளது. வரிகளின் மூலம் மக்களின் பணத்தை அவர்கள் எடுக்கின்றனர். பின்னர் அந்த பணத்தை 15-20 தொழிலதிபர்களுக்கு அளிக்கின்றனர். 
பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதற்கு நான் இங்கு வரவில்லை. பிரதமர் மோடி, மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான் ஆகியோரின் பொய்யான வாக்குறுதிகளை கேட்டு மக்கள் பழக்கப்பட்டிருப்பர். 
ஆனால், நான் நிச்சயம் பொய் தெரிவிக்க மாட்டேன். உண்மையான வாக்குறுதிகளை மட்டுமே அளிப்பேன். அதை பூர்த்தி செய்வேன்.
ஊட்டச்சத்து குறைபாடு, விவசாயிகள் பிரச்னை, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றால் மத்தியப் பிரதேசம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்தியப் பிரதேசத்தை ஆளும் சிவ்ராஜ் சிங் சௌஹான் தலைமையிலான பாஜக அரசு, இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை. ஊட்டச்சத்து குறைபாடால் குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடக்கும் நிலையில், மத்தியப் பிரதேசத்தை ஆளும் பாஜக அரசு, தன்னையும், முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹானையும் விளம்பரப்படுத்தும் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி செய்ய காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஒரு வாய்ப்பு தர வேண்டும். மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும். விவசாய நிலங்கள் அருகே உணவுபதப்படுத்துதல் ஆலைகள் அமைக்கப்படும். காங்கிரஸ் சார்பில் முதல்வராக பதவியேற்கும் நபர், நாளொன்றுக்கு 24 மணி நேரத்தில் 18 மணி நேரம் இளைஞர் நலப்பணியில் ஈடுபடுவார் என்றார் ராகுல் காந்தி.
இதையடுத்து, ஜோரா முதல் மோரெனா வரையிலும் திறந்த வாகனத்தில் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார்.
சீக்கிய குருத்வாராவில் பிரார்த்தனை: முன்னதாக, குவாலியரில் உள்ள பிரபல சீக்கிய குருத்வாராவுக்கு ராகுல் காந்தி சென்று பிரார்த்தனை நடத்தினார். அப்போது ராகுலுக்கு நினைவு பரிசாக வாளை, சீக்கிய குருத்வாரா தலைமை குரு அளித்தார்.
ராகுல் கலந்து கொண்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கமல்நாத், ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் உடனிருந்தனர்.முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மற்றோர் மூத்த தலைவருமான திக்விஜய் சிங் கலந்து கொள்ளவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com