பாலியல் குற்றச்சாட்டு எதிரொலி: இந்திய தேசிய மாணவர் சங்க தலைவர் ராஜிநாமா

பாலியல் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டதன் எதிரொலியாக, காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய


பாலியல் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டதன் எதிரொலியாக, காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் (என்எஸ்யுஐ) தலைவர் பதவியிலிருந்து பிரோஸ் கான் ராஜிநாமா செய்தார். அவரது ராஜிநாமாவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் ஏற்றுக் கொண்டார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பிரோஸ் கான், திங்கள்கிழமை மாலை தனது ராஜிநாமா கடிதத்தை கட்சியிடம் அளித்தார். அந்தக் கடிதத்தில், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள், கட்சியின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தலாம் என்று கருதி, ராஜிநாமா முடிவை எடுத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், தன் மீது தெரிவிக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகளில் உண்மை கிடையாது எனவும் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
அவரது ராஜிநாமாவை ராகுல் காந்தி ஏற்றுக் கொண்டார். மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதற்கு, 3 பேர் கொண்ட குழுவை கட்சி அமைத்துள்ளது. இந்த குழு, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரோஸ் கானுக்கு எதிராக சத்தீஸ்கரை சேர்ந்த காங்கிரஸ் பெண் நிர்வாகி ஒருவர் கடந்த ஜூன் மாதம் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் பிற மூத்த தலைவர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து புகார் மனுவும் அளித்திருந்தார். அதில் அவர், பிரோஸ் கானால் தாமும், தமது சகோதரி, மேலும் சில பெண்கள், பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக தெரிவித்திருந்தார். தில்லி நாடாளுமன்ற வீதியிலுள்ள காவல்நிலையத்திலும் பிரோஸ் கானுக்கு எதிராக அவர் புகார் அளித்தார்.
இந்நிலையில், சமூகவலைதளத்தில் மீ டு பதிவின்மூலம் பெண்கள் தாங்கள் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த தகவலை பகிர தொடங்கியதையடுத்து, அந்த பெண்ணும் தமக்கு நேரிட்ட துன்புறுத்தலை மீண்டும் எழுப்பினார். இதேபோன்ற விவகாரத்தில் சிக்கியுள்ள மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய பாஜக அரசை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. இதனால் பிரோஸ் கான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com