அமிர்தசரஸ் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு 

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தசரா கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்
அமிர்தசரஸ் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு 

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தசரா கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். 

வட மாநிலங்களில் வெள்ளியன்று தசரா பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தசரா பண்டிகை கொண்டாட்டத்திற்காக மக்கள் ஒரு தண்டவாளப் பகுதி அருகே கூடியிருந்தனர். அப்போது, பட்டாசு சத்தத்தினால் ரயில் வரும் சத்தம் கேட்காமல் தண்டவாளத்திலேயே பலர் நின்று கொண்டுள்ளனர். அப்போது எதிர்பாரதவிதமாக தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது ரயில் மோதியது. 

இந்த விபத்தில் 50 முதல் 60 பேர் வரை உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. ஆனால், சம்பவ இடத்தில் ஏராளமானோர் இருந்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-க்கும் மேல் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. விபத்து மீட்பு ரயில் சம்பவ இடத்துக்கு விரைந்தது. மத்திய ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா சம்பவ இடத்துக்கு விரைந்துகொண்டிருக்கிறார். 

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்தார். மேலும் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனையிலும் அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com