வறுமையை ஒழிப்பதில் தீவிரமான நடவடிக்கை எடுக்காத காங்கிரஸ்: பிரதமர் மோடி சாடல் 

நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ் வறுமையை ஒழிப்பதில் தீவிரமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 
வறுமையை ஒழிப்பதில் தீவிரமான நடவடிக்கை எடுக்காத காங்கிரஸ்: பிரதமர் மோடி சாடல் 

ஷீரடி: நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ் வறுமையை ஒழிப்பதில் தீவிரமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலம், அகமது  நகர் மாவட்டம், ஷீரடியில் அமைந்துள்ள சாய்பாபா கோயிலில் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி வெள்ளியன்று ஷீரடி நகருக்குச் சென்றார். அங்குள்ள சாய்பாபா கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் அவர் கலந்து கொண்டார். பின்னர் சாய்பாபா அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று சாய்பாபா உருவம் பொறித்த வெள்ளி நாணயத்தை அவர் வெளியிட்டார்.

அதன்பின் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நலத்திட்ட நிகழ்ச்சியில் ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் , பிரதமர் மோடி பேசியதாவது:

'நாட்டில் இதற்கு முன் ஆண்ட அரசுகள் ஏழைகளின் நலனில் அக்கறை கொள்ளவில்லை. வறுமையை ஒழிப்பதிலும் தீவிரமான நடவடிக்கை எதனையும் அவர்கள் எடுக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை உயர்த்திக் கொள்ளவே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டனர்.

மக்கள் நலப்பணிகளை விரைந்து செயல்படுத்துவதே தற்போது பாஜக தலைமையில் மத்தியில் நடைபெறும் ஆட்சிக்கும், இதற்குமுன் இருந்த ஆட்சிக்கும் இருக்கும் முக்கிய வேறுபாடாகும்.

மகாராஷ்டிரா மண் ஏராளமான சமூக சீர்திருத்தவாதிகளை நாட்டுக்கு உருவாக்கிக் கொடுத்துள்ளது. அவர்கள் நாட்டின் ஒற்றுமை சீர்குலையாமல் பாதுகாக்க உழைத்துள்ளனர். ஆனால், இன்று சிலர் அரசியல் ஆதாயத்துக்காகச் சமூகத்தை பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

வறுமையில் வாடும் ஏழை மக்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக முறையான குடியிருப்புகளைக் கட்டிக்கொடுக்க பாஜக அரசு மிகவும் அர்ப்பணிப்போடு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த காலங்களிலும் இதுபோல் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் கூட, துரிதிர்ஷ்டவசமாக ஏழைகளின் நிலையை உயர்த்துவதற்குப் பதிலாக ஒரு குடும்பத்தின் பெயரை உயர்த்திக்கொள்வதே குறிக்கோளாக அப்போதைய ஆட்சியாளர்கள் செயல்பட்டனர். எப்போதுமே அவர்களின் முக்கிய இலக்கு வாக்கு வங்கிதான்.

நாடு தனது 75-வது சுதந்திரதின விழா கொண்டாடும் போது, 2022-ம் ஆண்டுக்குள் நாட்டில் வீடு இல்லாத ஒருவரும் இருக்கக்கூடாது என்பதுதான் எங்களுடைய இலக்கு,  கடந்த ஆட்சியில் ஏழைகளுக்காக 4 ஆண்டுகளில் 25 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பின் கடந்த 4ஆண்டுகளில் 1.25 கோடி வீடுகள்  கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் அரசுகு இந்த எண்ணிக்கையினை எட்டுவதற்கு ஏறக்குறைய 20 ஆண்டுகள் எடுத்துக்கொண்டிருக்கும் ஆனால், நாங்கள் 4 ஆண்டுகளில் இதைச் செய்துள்ளோம்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதியது திட்டமான ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத் திட்டம் மூலம், ஒரு ஏழைக் குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு பெற முடியும்'.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com