பாஜக அரசின் மெத்தனத்தால் ஜாக்குவார் விமானிகளின் உயிருக்கு ஆபத்து 

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் அதே சமயம், போர் விமானத் தயாரிப்புக்கான நவீன தொழில்நுட்பங்களை பெறுவதற்கும் திட்டமிடப்பட்டிருந்த
பாஜக அரசின் மெத்தனத்தால் ஜாக்குவார் விமானிகளின் உயிருக்கு ஆபத்து 


பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் அதே சமயம், போர் விமானத் தயாரிப்புக்கான நவீன தொழில்நுட்பங்களை பெறுவதற்கும் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பாஜக அரசு நடத்திய புதிய பேச்சுவார்த்தையின்போது அந்த அம்சம் கைவிடப்பட்டதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இதனால், நாட்டில் ஏற்கெனவே பழைய தொழில்நுட்பங்களுடன் உள்ள ஜாக்குவார் ரக போர் விமானங்களை இயக்கும் விமானிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். 
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.54,000 கோடி மதிப்பீட்டில் இந்தியாவுக்கு 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், கூடுதல் விலை கொடுத்து ரஃபேல் விமானங்கள் வாங்கப்படுவதாகவும், உதிரி பாகங்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தை அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்துக்கு பெற்றுத் தராமல், பிரதமர் மோடிக்கு நெருக்கமான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மறுத்து வருகிறது. காங்கிரஸ் அரசு பேரம் பேசியதைக் காட்டிலும் குறைவான விலைக்கு ரஃபேல் விமானங்கள் வாங்கப்படுவதாகவும், பாதுகாப்பு அம்சங்களுக்கான கூடுதல் தொழில்நுட்பங்கள் ரஃபேல் விமானங்களில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மீண்டும் குற்றச்சாட்டு: இந்தச் சூழலில், ராகுல் காந்தி மத்திய அரசை மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து முகநூலில் அவர் வெளியிட்ட பதிவு:
முந்தைய காங்கிரஸ் அரசு நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்குப் பதிலாக, பெரு முதலாளிகள் பயன் பெறும் வகையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் அரசு முடிவு செய்ததைப் போல 126 ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டிருந்தால், ஜாக்குவார் போன்று நாட்டில் உள்ள பழைய மற்றும் சீர்கெட்டுள்ள போர் விமானங்களை ஒதுக்கிவிட்டு இந்திய விமானப்படையை புதிய விமானங்களுடன் மேம்படுத்தியிருக்கலாம்.
அதேபோன்று போர் விமான நவீன தொழில்நுட்பத்தை ஹிந்துஸ்தான் நிறுவனத்துக்கு பெற்றுத் தர தீர்மானிக்கப்பட்டிருந்தது. அது நடந்திருந்தால் எதிர்காலத்தில் போர் விமானத் தயாரிப்பில் நாம் தன்னிறைவு அடைந்திருப்போம். 
ஆனால், அனில் அம்பானிக்காக ஒப்பந்தம் மாற்றியமைக்கப்பட்டதுடன், எண்ணிக்கையும் 36 விமானங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதுவும் பிரான்சில் தயாரிக்கப்படுகிறது. அது வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும்.
இதனால் ஜாக்குவார் போன்ற பழைய விமானங்களை இயக்கி வரும் நமது விமானிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com