வறுமை ஒழிப்புக்கு முந்தைய அரசு முக்கியத்துவம் கொடுக்கவில்லை: பிரதமர் நரேந்திர மோடி

வறுமையை ஒழிக்க முந்தைய காங்கிரஸ் அரசு முக்கியத்துவம் கொடுக்கவில்லை; குறிப்பிட்ட ஓர் குடும்பத்தின் புகழை உயர்த்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கமாக இருந்தது
ஷீரடி சாய் பாபா உருவம் பொறித்த வெள்ளி நாணயங்களை வெளியிட்ட பிரதமர் மோடி.
ஷீரடி சாய் பாபா உருவம் பொறித்த வெள்ளி நாணயங்களை வெளியிட்ட பிரதமர் மோடி.


வறுமையை ஒழிக்க முந்தைய காங்கிரஸ் அரசு முக்கியத்துவம் கொடுக்கவில்லை; குறிப்பிட்ட ஓர் குடும்பத்தின் புகழை உயர்த்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கமாக இருந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். 
மகாராஷ்டிர மாநிலம், அஹமதுநகர் மாவட்டத்தின் ஷீரடியில் உள்ள சாய் பாபா கோயிலில் வழிபாடு நடத்திய பிறகு நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் மோடி இவ்வாறு பேசினார்.
சாய் பாபா 1918-ஆம் ஆண்டில் விஜயதசமி நாளில் மகாசமாதி அடைந்தார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்நிகழ்வின் 100-ஆம் நிறைவையொட்டி, சாய் பாபா கோயில் நிர்வாகத்தினர் சார்பில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது, சாய் பாபாவை சிறப்பிக்கும் வகையில், அவரது உருவம் பொதித்த வெள்ளி நாணயங்களை மோடி வெளியிட்டார். முன்னதாக, சாய் பாபா கோயிலில் அவர் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
வீடுகள் ஒப்படைப்பு: இதற்கிடையே, மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் மகாராஷ்டிர மாநிலத்தில் பயனடைந்த பயனாளிகளுக்கு வீடுகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சி காணொலி காட்சி முறையில் நடைபெற்றது. அப்போது பேசிய மோடி, முந்தைய அரசின் செயல்பாடுகளுக்கும், தற்போதைய அரசின் செயல்பாடுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை மக்கள் உணர வேண்டும் என்றார். ஏழைகளுக்கு வீடு வழங்கும் நோக்கத்தில் தமது அரசு துடிப்புடன் செயல்பட்டு வருவதாகக் கூறிய மோடி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமெனில் வகுப்புவாத சக்திகளை தோற்கடிப்பது அவசியம் என்றார். அவர் மேலும் பேசியதாவது:
முந்தைய அரசின் ஆட்சிக் காலத்தில் 4 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 25 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டன. ஆனால், அதே 4 ஆண்டுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 1.25 கோடி வீடுகளை கட்டி முடித்துள்ளது.
நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம், 2022-ஆம் ஆண்டில் கொண்டாடப்படும்போது யாருக்கும் வீடில்லாமல் இருக்கக் கூடாது என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
குடிசைகளில் வாழும் ஏழைகளுக்கு வீடு வழங்குவதற்கு கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டது. இதேபோன்ற முயற்சிகள் கடந்த காலத்திலும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், துரதிருஷ்டம் என்னவெனில், ஒரு குடும்பத்தின் புகழை உயர்த்துவதே அவர்களது நோக்கமாக இருந்தது. வாக்கு வங்கியை உருவாக்குவதையை இலக்காகக் கொண்டிருந்தனர்.
முந்தைய அரசு வீட்டை கட்டுவதற்கு 18 மாதங்களை எடுத்துக் கொண்டது. ஆனால், நாங்கள் 12 மாதங்களுக்குள்ளாக கட்டி முடித்து வருகிறோம். அதுமட்டுமன்றி, வீடு பெறுவதற்கான பயனாளிகள் தேர்வில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படுகிறது. மானியத் தொகை பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
ஷீரடியில் அனைத்து மதங்களும் சமமே
ஷீரடியில் அனைத்து மதங்களுக்கும் சமமாக இருப்பதை நாம் உணர முடியும்; வெவ்வேறு நம்பிக்கை கொண்ட அனைத்து மக்களும் சாய் பாபாவை வணங்குகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இதுதொடர்பாக கோயிலின் வருகைப் பதிவேட்டில், ஹிந்தி மொழியில் எழுதிய அவர், சாய் பாபாவை வணங்கிய பிறகு நான் மிகுந்த அமைதியை உணருகிறேன். நம்பிக்கை, அமைதி ஆகியவை குறித்து அவர் தந்த கருத்துக்கள் ஒட்டுமொத்த மனித இனத்தையும் ஈர்க்க கூடியவை. அனைத்து பக்தர்களும் சாய் பாபவின் ஆசிகளுடன் மகிழ்ச்சியையும், அமைதியையும் பெற வேண்டும் என சாய் பாபாவின் பாதங்களைத் தொட்டு வணங்கினேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com