மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: விசாரணை அனுமதியை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக, தம்மிடம் விசாரணை நடத்துவதற்கு அதிகாரிகள் பெற்றிருந்த அனுமதியை ரத்து செய்யக் கோரி ராணுவ அதிகாரி பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் தாக்கல் செய்த மனுவை

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக, தம்மிடம் விசாரணை நடத்துவதற்கு அதிகாரிகள் பெற்றிருந்த அனுமதியை ரத்து செய்யக் கோரி ராணுவ அதிகாரி பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் தாக்கல் செய்த மனுவை என்.ஐ.ஏ. நீதிமன்றம் சனிக்கிழமை தள்ளுபடி செய்தது.
 இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை, வரும் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
 மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்துக்கு உள்பட்ட மாலேகானில் உள்ள மசூதி அருகில் கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இரு சக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் 6 பேர் பலியாகினர். இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
 இந்த வழக்கில், ராணுவத்தில் லெப்டினென்ட் காலோனலாகப் பணியாற்றிக் கொண்டிருந்த பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. அவர் ராணுவத்தில் பணியாற்றுபவர் என்பதால், அவரிடம் விசாரணை நடத்த மத்திய அரசு அல்லது மாநில அரசிடம் ஒப்புதல் பெறுவது அவசியமாகும்.
 இதன்படி, புரோஹித்திடம் விசாரணை நடத்துவதற்கு மகாராஷ்டிர அரசின் உள்துறை அமைச்சகம் கடந்த 2009-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அனுமதி அளித்தது. இதையடுத்து, என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அவருக்கு எதிராக விசாரணையை தொடங்கினர்.
 இதேபோல், சாமியார் சாத்வி பிரக்யா சிங் மற்றும் மேலும் 6 நபர்கள் மீது இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டது. அவர்கள் அனைவரும் தங்களை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனுவை, என்.ஐ.ஏ. நீதிமன்றம் கடந்த ஆண்டு தள்ளுபடி செய்தது.
 இந்நிலையில். குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் தொடங்கவிருந்தன. இந்தச் சூழலில், தன்னிடம் விசாரணை நடத்துவதற்கு பெறப்பட்ட அனுமதி காலாவதியாகிவிட்டதாக புரோஹித், ஆட்சேபனைகளைத் தெரிவித்தார்.
 இதனால், குற்றச்சாட்டுப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
 அதுதொடர்பாக அவர் தாக்கல் செய்திருந்த மனு, என்.ஐ.ஏ. நீதிமன்ற நீதிபதி வினோத் பதால்கர், முன்பு சனிக்கிழமை விச்சாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 முன்னதாக, தங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய என்.ஐ.ஏ. நீதிமன்றத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி, குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மும்பை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com