ராமர் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்:பாஜக

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. அதே சமயம், இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம் என்று

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. அதே சமயம், இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம் என்று அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஜிவிஎல். நரசிம்ம ராவ் தெரிவித்தார்.
 இதுதொடர்பாக ஹைதராபாதில், செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியதாவது:
 ராமர் கோயில் கட்டுவது தொடர்பான விஷயத்தை பொறுத்தவரையில் பாஜக அதில் உறுதியாக இருக்கிறது. இதை நாங்கள் எப்போதும் வலியுறுத்தி வருகிறோம். நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள், ஹிந்துக்களின் விருப்பமும், நம்பிக்கையையும் அதுதான்.
 இதுகுறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்புக்காக நாங்கள் காத்திருக்கிறோம். தீர்ப்பு வந்த பிறகு, ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை தொடங்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
 ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது உறுதி என்ற போதிலும், அதை நீதிமன்ற உத்தரவு மூலமாக அல்லது சம்பந்தப்பட்ட சமூகத்தினரிடையே சுமூகத் தீர்வு ஏற்படுத்துவதன் மூலமாக மேற்கொள்ள வேண்டும் என நினைக்கிறோம். ஆனால், அது இதுவரை நடக்கவில்லை.
 காங்கிரஸ் மீது புகார்: ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் தடை ஏற்படுத்தி வருகின்றனர். வழக்கறிஞராகவும், அரசியல் தலைவராகவும் இருக்கக் கூடிய அக்கட்சியின் நிர்வாகிகள், வழக்கு விசாரணைகளில் தடைகளை ஏற்படுத்துவதன் மூலமாக ராமர் கோயில் வழக்கின் தீர்ப்பை தாமதிக்க முயற்சிக்கின்றனர் என்றார் அவர்.
 தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்யவிருப்பது குறித்த கேள்விக்கு, நரசிம்ம் ரா வ் பதில் அளிக்கையில், ""தேர்தல் அரசியலில் சொந்த கட்சிக்கு மாபெரும் பாதகத்தை ஏற்படுத்தக் கூடியவர் என்பதை நிரூபித்தவர்தான் ராகுல் காந்தி'' என்றார்.
 தேசியவாத காங்கிரஸ் குற்றச்சாட்டு: இதற்கிடையே, உச்ச நீதிமன்றம் வழங்கவிருக்கும் தீர்ப்பின் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால்தான், ராமர் கோயில் கட்டுவதற்கு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தும், சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரேவும் வலியுறுத்துகின்றனர் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
 இதுகுறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில், ""ராமர் கோயில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் விரும்புகிறார். அவர்களது கூட்டணிக் கட்சித் தலைவரும் அதே தொனியில் பேசுகிறார். நீதிமன்ற அமைப்பில் அவர்களுக்கு நம்பிக்கையில்லை என்பதைத்தானே இது காட்டுகிறது. நீதிமன்ற தீர்ப்பு என்னவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வதில் இவர்களுக்கு ஏன் விருப்பமில்லை'' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com