எஸ்சி, எஸ்டி சட்டத் திருத்த விவகாரம்: ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

எஸ்சி, எஸ்டி சட்டத் திருத்த விவகாரம்: ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புதிதாக மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது ஒரு


எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புதிதாக மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது ஒரு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, தாழ்த்தப்பட்டோர் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டப்படும் நபர்களை முதல்கட்ட விசாரணை எதுவுமின்றி உடனடியாக கைது செய்வதற்கு தடை விதித்தும், குற்றம்சாட்டப்பட்டோர் முன்ஜாமீன் பெறுவதற்குரிய அம்சங்களை அறிமுகப்படுத்தியும் உச்சநீதிமன்றம் கடந்த மார்ச்சில் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்புக்கு எதிராக, தலித், பழங்குடியின அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. 
இதைத் தொடர்ந்து, எஸ்சி, எஸ்டி சட்டத்தில் மீண்டும் கடுமையான பிரிவுகளை இடம்பெறச் செய்யும் சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார்.
இதனிடையே, எஸ்சி, எஸ்டி சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில், எஸ்சி, எஸ்டி சட்டத்திலுள்ள குறைபாடுகளை களையாமலேயே, அச்சட்டத்தில் மீண்டும் பழைய பிரிவுகளை இடம்பெறச் செய்யும் மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. எஸ்சி, எஸ்டி சட்டத்தை தவறாக பயன்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த விவகாரத்தில், நீதிமன்றம் வெறும் பார்வையாளராக மட்டும் இருக்க கூடாது. வெறும் குற்றச்சாட்டின் அடிப்படையில் மட்டுமே கைது நடவடிக்கை மேற்கொள்வது, அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், இந்த வழக்கு விசாரணை நிறைவடையும் வரை, புதிய திருத்தங்களை அமல்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் மீது கடந்த மாதம் 7-ஆம் தேதி நடைபெற்ற விசாரணைபோது, புதிய திருத்தங்களை அமல்படுத்துவதற்கு தடை விதிக்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், மனுக்கள் மீது 7 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மனுக்கள் மீது பதிலளிக்க மேலும் அவகாசம் வேண்டும் என்று கோரினார். இதையடுத்து, ஒரு வாரத்துக்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அன்றைய தினம் இறுதி விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com