ராமர் கோயில் விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் உண்மை முகம் வெளிப்படுகிறது

ஆர்எஸ்எஸ் அமைப்பு தனது நிலையை மேம்படுத்திக் காண்பிக்க பல வகைகளில் முயன்றபோதிலும், ராமர் கோயில் விவகாரத்தின் மூலமாக அதன் உண்மை முகம் வெளிப்படுகிறது என்று
ராமர் கோயில் விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் உண்மை முகம் வெளிப்படுகிறது


ஆர்எஸ்எஸ் அமைப்பு தனது நிலையை மேம்படுத்திக் காண்பிக்க பல வகைகளில் முயன்றபோதிலும், ராமர் கோயில் விவகாரத்தின் மூலமாக அதன் உண்மை முகம் வெளிப்படுகிறது என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கூறினார்.
இதுதொடர்பாக, மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியதாவது:
அயோத்தி விவகாரம் உச்ச நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் இருக்கும் நிலையில், அதுதொடர்பாக எவ்வாறு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற இயலும்? ராமர் கோயில் கட்டுவதற்கு மத்திய அரசு உரிய சட்டம் இயற்ற வேண்டும் என்று மோகன் பாகவத் கூறியதன் மூலம், அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை உத்தரவு பிறப்பிக்கவிடாமல் தடுக்க ஆர்எஸ்எஸ் விரும்புவது தெரிகிறது.
ஆர்எஸ்எஸ் தனது நிகழ்ச்சிகளில் உரையாற்ற குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, தொழிலதிபர் ரத்தன் டாட்டா உள்ளிட்டோரை அழைப்பதன் மூலமாக அந்த அமைப்பு தனது பிம்பத்தை மேம்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது. ஆனால், மோகன் பாகவத்தின் கருத்துகள், ஆர்எஸ்எஸ் அமைப்பின் உண்மை முகத்தை வெளிக்காட்டுகிறது.
நான் பாஜகவிலிருந்து விலகியிருந்தாலும், அயோத்தி விவகாரத்தில் ஒருமித்த கருத்தை எட்டுவதன் மூலமாகவோ, அல்லது நீதிமன்றம் மூலமாகவோ தீர்வு காணவே பாஜக விரும்புகிறது என்பதை அறிவேன்.
சிபிஐ, ரிசர்வ் வங்கி போன்ற சுயாதிகாரம் படைத்த சுதந்திரமான அமைப்புகளை மத்திய அரசு அழித்து வருகிறது. கடன் மற்றும் நஷ்டத்தில் தத்தளிக்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை மீட்க, ஆயுள் காப்பீட்டு கழகத்தில் (எல்ஐசி) மக்களால் முதலீடு செய்யப்பட்டுள்ள பணத்தை அரசு தவறாகப் பயன்படுத்துகிறது.
மோடி அரசு விவசாயிகளை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டது. நாட்டில் தற்போது அவசரநிலைக்கு நிகாரன சூழல் நிலவுகிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையானது, நாட்டு நிதி அமைப்பின் முதுகெலும்பையே பாதித்துவிட்டது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பு விவகாரத்தில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பிரதமர் அலுவலகத்துக்கு உரிய நம்பிக்கை ஏற்படுத்தாமல் போனதே, அந்த சந்திப்பு ரத்தானதற்கு காரணமாகும் என்று யஷ்வந்த் சின்ஹா கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com