குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: குளிர்கால கூட்டத் தொடரில் அறிக்கை தாக்கல் செய்கிறது நாடாளுமன்ற குழு

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை ஆய்வு செய்து வரும் நாடாளுமன்ற கூட்டுக் குழு, தனது அறிக்கையை குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.


குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை ஆய்வு செய்து வரும் நாடாளுமன்ற கூட்டுக் குழு, தனது அறிக்கையை குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.
1955ஆம் ஆண்டு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான மசோதா, மக்களவையில் கடந்த 2016ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அந்த மசோதாவில், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் சிறுபான்மை சமூகமாக இருக்கும் ஹிந்துகள், கிறிஸ்தவர்கள், பாரசீகர்கள், சீக்கியர்கள், பௌத்த மதத்தினர், ஜைன மதத்தினர் ஆகியோர் இந்தியாவில் 6 ஆண்டுகள் தங்கியிருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு குடியுரிமை அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு வடகிழக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 1985ஆம் ஆண்டு அஸ்ஸாம் ஒப்பந்தத்துக்கு இந்த மசோதா எதிரானது என்று அந்த மாநிலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மிúஸாரம், மேகாலயம் ஆகிய மாநிலங்களும், இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன. அஸ்ஸாம் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் டிசம்பர் மாதம் கூடுகிறது. இந்த கூட்டத் தொடரின்போது, குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்து வரும் நாடாளுமன்ற கூட்டுக் குழு, தனது அறிக்கையை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அக்குழுவின் தலைவரும், மீரட் தொகுதி பாஜக எம்.பி.யுமான ராஜேந்திர அகர்வால், தில்லியில் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
குளிர்கால கூட்டத் தொடரே, 16ஆவது மக்களவையின் கடைசி கூட்டத் தொடராகும். இந்த கூட்டத் தொடரில் எங்களது அறிக்கையை தாக்கல் செய்யவில்லையெனில், நாங்கள் சரியாக பணியாற்றவில்லை என்று கருதப்படும். இதேபோல், இந்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பதவிக்காலமும் தாமாக முடிந்து விடும். குளிர்கால கூட்டத் தொடரில் எப்போது அறிக்கையை தாக்கல் செய்வது என்று அனைத்து உறுப்பினர்களும் விரைவில் முடிவெடுப்பர்.
இந்த மசோதா தொடர்பாக சில தரப்பினருக்கு கவலைகள் இருப்பதை அறிவோம். இதுகுறித்து பல்வேறு அமைப்புகளும் எங்களை சந்தித்து முறையிட்டன. வரும் நாள்களிலும் விவாதம் நடத்த எங்கள் குழு தயாராக உள்ளது என்றார் அவர்.
அறிக்கையை தாக்கல் செய்வதற்கு நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு மக்களவைத் தலைவர் ஏற்கெனவே 6 முறை காலக்கெடுவை நீட்டித்துள்ளார். கடைசியாக, வரும் குளிர்கால கூட்டத் தொடரின் முதல்நாளில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அக்குழு வாக்குறுதியளித்திருந்தது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com