சிபிஐ உயரதிகாரிகள் மீது ஊழல் புகார்: பிரதமர் மெளனம் காப்பது ஏன்?: சரத் பவார் கேள்வி

நாட்டின் முதன்மையான விசாரணை அமைப்பான சிபிஐ உயரதிகாரிகள் மீது ஊழல் புகார் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்காமல்
சிபிஐ உயரதிகாரிகள் மீது ஊழல் புகார்: பிரதமர் மெளனம் காப்பது ஏன்?: சரத் பவார் கேள்வி


நாட்டின் முதன்மையான விசாரணை அமைப்பான சிபிஐ உயரதிகாரிகள் மீது ஊழல் புகார் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்காமல் பிரதமர் நரேந்திர மோடி மெளனம் காப்பது ஏன்? என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கேள்வி எழுப்பியுள்ளார்.
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மும்பையில் செவ்வாய்க்கிழமை தனியார் தொலைக்காட்சி சேனல் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இது தொடர்பாக கூறியதாவது:
ரஃபேல் விமானத்துக்கு ஏற்கெனவே ரூ.570 கோடி கொடுக்கவே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பாஜக அரசு இந்த விலையை ரூ.1,600 கோடியாக அதிகரித்து ஏன் என்று விளக்க வேண்டும். ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எழுந்துள்ள முறைகேடு புகார் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் எதையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் சிறப்பான நிர்வாகத்தை அளித்து வந்தார். அவரது நோக்கங்கள் தெளிவாக இருந்தன. ஆனால், இப்போதைய ஆட்சி அப்படியில்லை.
இந்த அரசு திறமையாக செயல்பட்டிருந்தால், சிபிஐ அமைப்பில் உயரதிகாரிகள் மீதே ஊழல் புகார் எழுந்திருக்குமா? நாட்டின் முதன்மையான விசாரணை அமைப்பான சிபிஐ-யின் நம்பிக்கையை இந்த அரசு கேள்விக் குறியாக்கிவிட்டது. இந்த விஷயத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மெளனம் காத்து வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டிய கடமை அவருக்கு உண்டு என்பதை மறந்துவிட்டார். அவர் திறம்பட செயல்படவில்லை.
பாஜகவுக்கு வேண்டுமானால் மோடி வலிமையான தலைவராக இருக்கலாம். ஆனால், நாட்டுக்கு அவர் சிறந்த பிரதமராக இல்லை. அவரது அமைச்சர்கள் யாருக்கும் தன்னிச்சையாக செயல்படும் திறன் இல்லை. பிரதமர் அலுவலகம் மட்டுமே முழு அதிகாரத்தையும் கொண்டுள்ளது. அங்கு முடிவுகள் எடுக்கப்பட்டு கையெழுத்திடுவதற்காக மட்டும் அமைச்சர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த அரசு ஒரு மனிதரின் குரலாகவே இருக்கிறதே தவிர மக்களின் குரலைக் கேட்பதாக இல்லை. மக்களின் கேள்விகளுக்கு மோடி முதலில் பதிலளிக்க வேண்டும் என்றார் சரத் பவார்.
தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணையுமா? என்பது குறித்து கருத்து தெரிவித்த அவர், பாஜக தவிர பிற எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து தேசிய அளவில் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு இருப்பதாக நான் கருதவில்லை. எனினும், பாஜகவுக்கு எதிராக பல்வேறு கட்சிகளை ஒரே கூட்டணியில் கொண்டு வர நான் முயற்சிக்கு வருகிறேன். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மோடி பிரதமராக இருக்க மாட்டார். பாஜகவைச் சேர்ந்த யாரையும் பிரதமராக்க எங்கள் கட்சி ஆதரவு அளிக்காது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com