மசூத் அஸார் விவகாரம்: இந்தியாவின் கோரிக்கையை மீண்டும் நிராகரித்தது சீனா

இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களில் தொடர்புடையவரான, ஜெய்ஷ்-இ-முஹம்மது (ஜேஇஎம்) அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை,


இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களில் தொடர்புடையவரான, ஜெய்ஷ்-இ-முஹம்மது (ஜேஇஎம்) அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு ஆதரவு இல்லை என்ற முடிவில் மாற்றமில்லை என்பதை சீனா தெளிவுபடுத்தியுள்ளது.
ஐ.நா. சார்பில் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வைப்பதற்கான முயற்சிகளை இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற போதிலும், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இருக்கும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, அந்த முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உரி ராணுவ தளத்தில் கடந்த 2016-இல் 17 வீரர்கள் பலியாகக் காரணமான தாக்குதல் உள்பட மிக மோசமான சம்பவங்களை இந்தியாவில் அரங்கேற்றியது தொடர்பாக மசூத் அஸார் மீது குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, சீன பொதுப்பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜாவோ கேஹி, தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்தார். அப்போது இருதரப்பு உள்நாட்டுப் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சிவார்த்தை நடத்தி, அதன் அடிப்படையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதே சமயம், இந்த சந்திப்பின்போது மசூத் அஸார் குறித்த கோரிக்கையை இந்தியா மீண்டும் முன்வைத்தது. அதுதொடர்பாக, சீன வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ஹீவா சுன்யிங்கிடம், செய்தியாளர்கள் பெய்ஜிங்கில் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:
மசூத் அஸாரை பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக இந்தியா கோரிக்கை வைத்த விவகாரத்தில் நாங்கள் எங்களது நிலைப்பாட்டை பலமுறை தெரிவித்துவிட்டோம்.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில், சர்வதேச அளவிலான பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளில் சீனா எப்போதும் பங்கெடுத்து வருகிறது. 
ஒரு பிரச்னை சார்ந்த சாதகமான விஷயங்களை ஆராய்ந்த பிறகே நாங்கள் எப்போதும் முடிவெடுத்து வருகிறோம். இந்நிலையில், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதற்கான பாதுகாப்பு ஒத்துழைப்பை சீனா தொடரும் என்றார் அவர்.
பாதுகாப்பு ஒப்பந்தம்: முன்னதாக, உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் இந்தியா - சீனா இடையே பரஸ்பரம் ஒத்துழைப்பு அளிப்பது தொடர்பாக தில்லியில் ஒப்பந்தம் கையெழுத்தானது. 
அதுதொடர்பாக ஹீவா சுன்யிங் கூறியதாவது: 
இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் என்பது பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் சட்ட அமலாக்க நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு மிக முக்கியமானதாகும். இதனால் இருதரப்பு நல்லுறவின் காரணமாக ஏற்படும் வளர்ச்சியின் மூலமாக இருநாடுகளும் பயன்பெற முடியும்.
இந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் என்பது அமைப்பு ரீதியான ஆதரவை வழங்கக் கூடியது என்ற வகையில் குற்றங்களை எதிர்த்துப் போராட இது மிகவும் உதவிகரமாக இருக்கும். பிரிவினைவாத சக்திகள், தொலைத்தொடர்பு சேவையில் குற்றம் புரிபவர்கள், போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் இதர எல்லை சார் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான எங்களது ஆதரவு தொடரும். 
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வேறெந்த துறைகளில் மேம்படுத்த இயலும் என்பதை நாங்கள் ஆராய்வதுடன், இரு நாடுகளிலும் திட்டங்களை செயல்படுத்தும் நமது பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com