ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க தமிழக ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது: மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான முடிவை எடுக்கும்


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான முடிவை எடுக்கும் அதிகாரம், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கிடையாது என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தில்லியில் மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் கூறியதாவது:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சிபிஐ தலைமையிலான பல்நோக்கு ஒழுங்கு கண்காணிப்பு அமைப்பே (எம்.டி.எம்.ஏ.) விசாரணை நடத்தியது. ஆதலால், ராஜீவ் கொலையாளிகள் 7 பேருக்கான தண்டனையை குறைப்பது அல்லது ரத்து செய்வது தொடர்பாக மாநில அரசு பரிந்துரைத்திருந்தாலும், அதன்படி தமிழக ஆளுநரால் முடிவு எடுக்க முடியாது.
சட்டத்தின்படி, இதுகுறித்த முடிவை எடுப்பதற்கு முன்பு மத்திய அரசுடன் தமிழக ஆளுநர் கலந்தாலோசிக்க வேண்டும்.
ராஜீவ் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்னும் நடைபெற்று வருவதாக சிபிஐ தலைமையிலான பல்நோக்கு ஒழுங்கு கண்காணிப்பு அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் 21-ஆம் தேதி தெரிவித்திருந்தது. இந்த வழக்குத் தொடர்பாக இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும், அந்த கடிதத்தில் மேற்கண்ட நாடுகளில் இருக்கும் சிலரிடம் ராஜீவ் படுகொலை குறித்து விசாரணை நடத்த வேண்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், ராஜீவ் கொலையாளிகள் விவகாரத்தில் இதற்கு முன்பு மத்திய அரசு எடுத்திருந்த நிலைப்பாட்டை (விடுதலை கூடாது என்ற நிலைப்பாடு) மாற்றுவதற்கு எந்த காரணமும் இல்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991-ஆம் ஆண்டு மே மாதம் 21-ஆம் தேதி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, மனிதவெடிகுண்டு தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்தத் தாக்குதலில் மேலும் 14 பேரும் பலியாகினர்.
இதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு சிபிஐ தலைமையிலான பல்நோக்கு ஒழுங்கு கண்காணிப்பு அமைப்பு, நீதிபதி எம்.சி. ஜெயின் தலைமையிலான ஆணையத்தின் பரிந்துரையின்பேரில் கடந்த 1998-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இந்த குழுவில் சிபிஐ, ஐ.பி., ரா, வருவாய் புலனாய்வுத் துறை மற்றும் பிற விசாரணை அமைப்புகளின் அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.
இந்த வழக்கில் ஏ.ஜி. பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த 1999-ஆம் ஆண்டு மே மாதம் உறுதி செய்தது. இந்நிலையில், கடந்த 2000-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், தமிழக அரசின் பரிந்துரை மற்றும் ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான சோனியா காந்தியின் கோரிக்கை ஆகியவற்றை ஏற்று, நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக தமிழக ஆளுநர் குறைத்தார்.
இதைத் தொடர்ந்து, கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதியன்று, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேருக்கான தூக்குத் தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்களது கருணை மனுக்கள் மீது முடிவெடுக்காமல் 11 ஆண்டுகள் காலம் தாழ்த்திய காரணத்தை சுட்டிக்காட்டி இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது.
இதுதவிர, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ் ஆகியோரும் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து, 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. இந்த நடவடிக்கையை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இதனிடையே, ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு கடந்த ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி தமிழக அரசு மீண்டும் கடிதம் எழுதியது. கைதிகள் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில், ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவித்தால் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி, சர்வதேச சிக்கலை உருவாக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் இந்த வழக்கு மீது உச்ச நீதிமன்றத்தில் கடந்த 6-ஆம் தேதி மீண்டும் விசாரணை நடைபெற்றபோது, பேரறிவாளன் சார்பில் பொது மன்னிப்பு வழங்கக் கோரி தமிழக ஆளுநருக்கு எழுதிய கடிதம் தாக்கல் செய்யப்பட்டது. இதை பரிசீலித்த நீதிபதிகள், பேரறிவாளன் கருணை மனுவை தமிழக ஆளுநர் பரிசீலிக்கலாம்; இது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த மனு முடித்து வைக்கப்படுகிறது' என்று உத்தரவிட்டனர்.
இதன்பின்னர் கடந்த 9-ஆம் தேதி நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில், ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டு, தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com