19-வது நாளில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் ஹார்திக் படேல்

படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு, விவசாயக் கடன் தள்ளுபடி ஆகியவற்றை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த படேல் சமூகத் தலைவர் ஹார்திக் படேல், மக்களின்
எலுமிச்சை சாறு அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட படேல் சமூகத் தலைவர் ஹார்திக் படேல்.
எலுமிச்சை சாறு அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட படேல் சமூகத் தலைவர் ஹார்திக் படேல்.


படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு, விவசாயக் கடன் தள்ளுபடி ஆகியவற்றை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த படேல் சமூகத் தலைவர் ஹார்திக் படேல், மக்களின் அறிவுரையை ஏற்று உண்ணாவிரதத்தின் 19-ஆவது நாளான புதன்கிழமை உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார்.
படேல் சமூகத்தினரை இதர வகுப்பினர் பிரிவில்(ஓபிசி) சேர்ப்பது, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதத்தை கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி ஹார்திக் படேல்(25) தொடங்கினார். உண்ணாவிரதத்தின் 14-ஆவது நாளான வெள்ளிக்கிழமை அன்று ஹார்திக்கின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் திரவ உணவுப் பொருள்கள் மட்டும் அவருக்கு கொடுக்கப்பட்டதாக படேல் சமூகத் தலைவர்கள் தெரிவித்தனர். மருத்துவமனையில் இரு நாள் இருந்து விட்டு வீடு திரும்பிய ஹார்திக் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
இடஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாக மாநில எரிசக்தி துறை அமைச்சர் செளரவ் படேல் கூறியிருந்தார். ஆனால் இதுவரை எவ்வித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.
இந்த நிலையில், உண்ணாவிரதத்தின் 19-ஆவது நாளான புதன்கிழமை படேல் சமூகத் தலைவர்கள் நரேஷ் படேல் மற்றும் சி.கே.படேல் ஆகியோரின் கையால் எலுமிச்சை சாறு பருகி உண்ணாவிரதத்தை ஹார்திக் முடித்துக் கொண்டார்.
உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட பிறகு, காந்தி ஆசிரமத்துக்கு சென்ற ஹார்திக் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களுக்கு ஹார்திக் படேல் அளித்த பேட்டியில் கூறியதாவது:
மக்களின் அறிவுரையை ஏற்று தற்போது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டேன். நான் உயிரோடு இருந்தால் தான் போராட முடியும். நான் போராடினால் தான் வெற்றி பெற முடியும்.
படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு, விவசாயக் கடன் தள்ளுபடி, தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட நண்பர் அல்பேஷ் கதிரியாவை விடுதலை செய்வது ஆகியவற்றுக்காக தொடர்ந்து போராடுவேன். குஜராத் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்று போராட்டத்தை இத்தோடு முடித்துக் கொள்ளப் போவதில்லை. தில்லியில் ராம்லீலா மைதானத்திலோ, ஜந்தர் மந்தரிலோ போராட்டம் நடத்துவேன். விவசாயிகளின் கடன் சுமையை பற்றி கவலைப்படாததற்காக பாஜக அரசு வெட்கப்பட வேண்டும். மக்களின் பிரச்னைகளுக்கு முடிவு கட்டுவது குறித்து அரசு எண்ணவில்லை. எனது இந்த உண்ணாவிரதம் படேல் சமூகத்தின் பல தரப்பு மக்களை ஒன்றிணைத்துள்ளது. நான் உண்ணாவிரதத்தில் இருக்கும் போது என்னை பார்க்க வந்த ஆதரவாளர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர். அடுத்த 100 நாள்களுக்கு குஜராத்தில் உள்ள கிராமங்களுக்கு சுற்றுப் பயணம் செல்கிறேன். அங்குள்ள மக்களையும் படேல் சமூகத்தினரையும் ஒன்றுதிரட்டி தில்லியில் போராட்டம் நடத்த உள்ளேன் என்று கூறினார்.
உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு சரியான முடிவை ஹார்திக் எடுத்துள்ளதாக குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com