காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 5 லஷ்கர், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படை வீரர்களுடன் சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கி சண்டையில், லஷ்கர்-ஏ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகளைச்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படை வீரர்களுடன் சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கி சண்டையில், லஷ்கர்-ஏ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 குல்காம் மாவட்டம், குவாஸிகுந்தில் உள்ள சௌகாம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை இரவு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது திடீரென துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். இதைத் தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது.
 பொது மக்கள் தரப்பில் உயிர் சேதம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், அவர்களை அப்பகுதியில் இருந்து பாதுகாப்புப் படையினர் பத்திரமாக அப்புறப்படுத்தினர். இதைத் தொடர்ந்து, பயங்கரவாதிகள் மீது பாதுகாப்புப் படையினர் தீவிர தாக்குதலை தொடுத்தனர்.
 இந்த சண்டையில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் 5 பேரும், லஷ்கர்-ஏ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். அதில் 5 பேரின் பெயர் விவரங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் 4 பேர் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்; ஒருவர் அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
 அவர்களில் குல்காம் மாவட்டம், அடிஜான் பகுதியைச் சேர்ந்த குல்ஜார் அகமது படார் என்ற சயீப், கடந்த மாதம் கொல்லப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தளபதி அல்டாப் கஸ்ருவுக்கு மிகவும் நெருக்கமானவர். இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் மாநில காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
 ஜம்மு-காஷ்மீரில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு தொடர் பயங்கரவாத தாக்குதல்களில் குல்ஜார் அகமது படாருக்கு தொடர்புண்டு. இதில் கடந்த மே மாதம் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில் 2 வங்கி ஊழியர்களுடன் சேர்த்து, 5 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதும் அடங்கும்.
 குல்காம் மாநட்டம், கிரேவன் சிடரில் காவல்துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதிலும் படாருக்கு தொடர்புண்டு. தம்ஹாலில் காவலர்களிடம் இருந்து ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டது, குல்காமில் நடைபெற்ற ஆயுத பறிப்பு, வங்கிகளில் நடைபெற்ற பல்வேறு கொள்ளை முயற்சிகள், சோபியான், ஜைனிபோராவில் 2 போலீஸார் கொலை செய்யப்பட்டது ஆகிய சம்பவங்களிலும் படாருக்கு தொடர்புண்டு என்றார் அவர்.
 பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட 5 பயங்கரவாதிகளின் சடலங்கள் அருகே கிடந்த ஏராளமான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
 போராட்டக்காரர் ஒருவர் சாவு: இதனிடையே, துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற இடத்தில் திரண்ட ஏராளமான இளைஞர்கள், பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அவர்களை கலைக்க பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்தனர்.
 கற்களை வீசி தாக்குதல் மேற்கொண்டோர் மீது பெல்லட் ரக தோட்டாக்களை கொண்ட துப்பாக்கிகள் மூலம் சுட்டனர். மேலும் கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசினர். இதில் 10க்கும் மேற்பட்டோர் கண்கள் உள்ளிட்ட இடங்களில் காயமடைந்தனர். அவர்கள் அனந்த்நாக்கில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் அனந்த்நாக்கைச் சேர்ந்த ரூப் அகமது என்பவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
 இணைய சேவை துண்டிப்பு: துப்பாக்கிச் சண்டையை முன்வைத்து வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையில், அனந்த்நாக், குல்காம் ஆகிய மாவட்டங்களில் செல்லிடப் பேசி இணைய சேவைகள் முன்னெச்சரிக்கையாக துண்டிக்கப்பட்டன. இதேபோல், பாரமுல்லா, குவாஸிகுந்த் இடையேயான ரயில் சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com