தினமும் குறைந்தது 3 செயின் பறிப்பில் ஈடுபட கணவருக்கு டார்கெட் வைத்த பாசக்கார மனைவி

தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையன் அச்யுத் குமாரை தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு கர்நாடகக் காவல்துறையினர் கைது செய்தனர்.
தினமும் குறைந்தது 3 செயின் பறிப்பில் ஈடுபட கணவருக்கு டார்கெட் வைத்த பாசக்கார மனைவி


பெங்களூரு: தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையன் அச்யுத் குமாரை தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு கர்நாடகக் காவல்துறையினர் கைது செய்தனர்.

பல செயின் பறிப்புகளில் ஈடுபட்ட கொள்ளையன் அச்யுத் குமாரிடம் நடத்திய விசாரணையில், அவனது உண்மையான பெயர் விஸ்வநாத் கொலிவாத் (31) என்பது தெரிய வந்தது.

அவன் அளித்த வாக்குமூலத்தைக் கேட்ட காவலர்கள் ஆடிப்போயினர். கணவன் தீய வழிக்குச் சென்றாலும் அவனை நல்வழிப்படுத்துவதே மனைவியின் கடமை என்று இதுவரை கூறப்பட்டு வந்தது. ஆனால், இங்கே நிலைமை தலைகீழ். விஸ்வநாத்தை செயின் பறிப்பில் ஈடுபடுத்தியதே மனைவி மகாதேவி (29)தான் என்பது தெரிய வந்துள்ளது.

தன்னுடைய மனைவி மகாதேவி, தினமும் குறைந்தபட்சம் 3 செயின் பறிப்பிலாவது ஈடுபட வேண்டும் என்று தன்னை வற்புறுத்தி வந்ததாகவும், எளிதாக பணம் சம்பாதித்து வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்பதே அவரது இலக்காக இருந்ததாகவும் கூறியுள்ளார் விஸ்வநாத்.

மேலும், 5 ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்குத் திருமணம் ஆனதாகவும், கொள்ளையடித்தத் தங்க நகைகளை நகைக் கடைகளில் விற்று பணத்தை வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததையும் விஸ்வநாத் கூறியுள்ளார். கொள்ளையடித்து வரும் செயின்களை எடை போட தங்கத்தை எடைபோடும் இயந்திரத்தையும் மகாதேவி வாங்கி வைத்துள்ளார். கணவரை எஸ்யுவி கார் மற்றும் பைக்குகள் வாங்குமாறு வலியுறுத்தி வந்துள்ளார்.

அவ்வப்போது கோவா சென்று அங்கு சொகுசு விடுதிகளிலும் தங்கி சுகபோக வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர்.

விஸ்வநாத் கைது செய்யப்பட்டதுமே, மாண்டியா மாவட்டத்தில் இருந்த அனாதை இல்லத்தில் தங்கியிருந்த மகாதேவி தலைமறைவானார்.

தீவிர தேடுதல் வேட்டை நடத்திய கர்நாடக காவல்துறை, கடந்த திங்கட்கிழமை மகாதேவியை கைது செய்துள்ளது.

பெங்களூரு, தார்வாத், கடக், ஹாவேரி உள்ளிட்ட பல பகுதிகளில் விஸ்வநாத் செயின் பறிப்பில் ஈடுபட்டதும், அவர்  இதுவரை கொள்ளையடித்த தங்க செயின்களின் மதிப்பு ரூ.1 கோடிக்கும் மேல் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com