தெலங்கானாவில் முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்த மாட்டோம்: காங்கிரஸ்

தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளரை காங்கிரஸ் கட்சி முன்னிறுத்தாது என்று அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்


தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளரை காங்கிரஸ் கட்சி முன்னிறுத்தாது என்று அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் ஆர்.சி.குந்தியா புதன்கிழமை தெரிவித்தார்.
காங்கிரஸ் சார்பில், தேர்தலுக்கு முன்பு முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் இருப்பது வழக்கமான ஒன்றுதான் என்றும் அவர் கூறினார்.
தெலங்கானா மாநிலத்தில், சந்திரசேகர ராவ் தலைமையில், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி (டிஆர்எஸ்) கட்சி ஆட்சி செய்து வந்தது. பதவிக்காலம் முடிவடைய 8 மாதங்கள் மீதமிருந்த நிலையில், அவரது பரிந்துரையை ஏற்று சட்டப்பேரவை அண்மையில் கலைக்கப்பட்டது. 
இதையடுத்து, இந்த ஆண்டு இறுதியில் அங்கு தேர்தல் நடைபெறவுள்ளது. அதை முன்னிட்டு அரசியல் கட்சிகள், தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 2014-இல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றபோது, காங்கிரஸ் கட்சி 25 சதவீத வாக்குகளுடன் 21 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இந்த முறை பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிடவுள்ளது.
அந்தக் கூட்டணி காங்கிரஸ் தலைமையிலாதாக இருக்கும் என்றும், ஆனால், முதல்வர் வேட்பாளரை அறிவிக்க மாட்டோம் என்றும், அக்கட்சியின் தெலங்கானா மாநில பொறுப்பாளர் ஆர்.சி.குந்தியா தெரிவித்தார். இதுகுறித்து, ஹைதாராபாதில் அவர் மேலும் கூறியதாவது:
தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி தலைமையில் தேர்தல் பிரசாரம் நடைபெறும். ஆனால், முதல்வர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்குப் பிறகே முடிவு செய்யப்படும்.
தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர், கட்சி எம்எல்ஏ-க்களுடைய கருத்தின் அடிப்படையில், எங்கள் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி அதுகுறித்து முடிவு செய்வார். தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட், தெலங்கானா ஜன சமிதி ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட உள்ளோம். ஆனால், தொகுதிப் பங்கீடு குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை. நாங்கள் பொது செயல் திட்டத்தை வகுத்து, அதன் அடிப்படையில் இணைந்து பிரசாரம் செய்வோம்.
எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பது முக்கியமல்ல. வெற்றிக்கான திறன் அளவே முக்கியமானது. காங்கிரஸ் கட்சியே கூட்டணியில் பிரதான இடம் வகிக்கும். அதே சமயம், பிற கட்சிகள் செல்வாக்குடன் உள்ள இடங்களில் அதற்குரிய முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார் குந்தியா.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, கடந்த முறை தெலங்கானா பேரவை தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட நிலையில், இந்த முறை காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com