தேசிய குடிமக்கள் பதிவேடு: விடுபட்டவர்களின் கருத்துகளை பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

அஸ்ஸாம் மாநிலத்தின் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்ட 40 லட்சம் நபர்களின் கருத்துகளையும், அவர்களின்


அஸ்ஸாம் மாநிலத்தின் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்ட 40 லட்சம் நபர்களின் கருத்துகளையும், அவர்களின் ஆட்சேபணைகளையும் பதிவு செய்யும் பணியைத் தொடங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வங்கதேச நாட்டிலிருந்து சட்டத்துக்குப் புறம்பான முறையில் புலம் பெயர்ந்து, அஸ்ஸாமில் வசித்து வருபவர்களைக் கண்டறிய, தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அது தொடர்பான இறுதி வரைவு பட்டியல் கடந்த ஜூலை மாதம் 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில், அஸ்ஸாம் குடிமக்களாக பெயர் சேர்க்கக் கோரி 3.29 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 2.89 கோடி பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
37.59 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும், 2.48 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் இறுதிசெய்யப்படவில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மொத்தத்தில், 40 லட்சத்துக்கும் அதிகமானோர் இறுதி வரைவு பட்டியலில் இருந்து விடுபட்டிருந்ததால் பெரும் சர்ச்சை வெடித்தது.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:
வழக்கமாக யாருக்கும் தங்களின் குடியுரிமையை நிரூபிப்பதற்கு இரண்டாம் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது. ஆனால், இந்த விவகாரத்தின் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, பட்டியலில் விடுபட்டுப் போனவர்களுக்கு இரண்டாம் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. வரும் 25-ஆம் தேதி தொடங்கி 60 நாள்களுக்கு, அவர்களின் கருத்துகளையும், ஆட்சேபணைகளையும் மத்திய அரசு பதிவு செய்ய வேண்டும். மேலும், விடுபட்டவர்களைப் பட்டியலில் சேர்ப்பதற்கு, மத்திய அரசு ஏற்றுக் கொள்ளக் கூடிய சான்றிதழ்கள் குறித்தும், விடுபட்டுள்ள 5 சான்றிதழ்களை ஏற்றுக்கொள்வது குறித்தும் அதன் ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜேலா அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை அக்டோபர் மாதம் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com