2ஜி தொடர்புடைய வழக்குகள்: சிபிஐ, அமலாக்கத் துறைக்கு 3 மாதம் அவகாசம்

ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு உள்ளிட்ட 2ஜி தொடர்புடைய வழக்குகளை விசாரித்து முடிக்க மத்திய புலனாய்வுத் துறை


ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு உள்ளிட்ட 2ஜி தொடர்புடைய வழக்குகளை விசாரித்து முடிக்க மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ), அமலாக்கத் துறை (ஈடி) ஆகியவற்றுக்கு உச்ச நீதிமன்றம் மேலும் 3 மாதங்கள் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ சிறப்பு வழக்குரைஞராக துஷார் மேத்தா நியமிக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்காடு மையத்தின் (சிபிஐஎல்) சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு, உச்ச நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 12-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. 
அப்போது, 2 ஜி தொடர்புடைய வழக்குகளின் விசாரணை நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. மிகவும் உணர்ச்சிமிக்க இதுபோன்ற வழக்குகளின் விசாரணை குறித்து நாட்டு மக்களுக்கு மறைக்க முடியாது. 2ஜி வழக்கில் காலதாமதம் செய்வது சரியானதும் அல்ல. 2ஜி வழக்கில் மேல்முறையீடு செய்யாமல் இருப்பதன் பின்னணியில் யாரேனும் உள்ளார்களா?' என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், சிபிஐ சிறப்பு வழக்குரைஞராக செயல்பட்ட ஆனந்த் குரோவருக்கு பதில் மத்திய அரசு துஷார் மேத்தாவை நியமித்தது சரியே. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது' எனத் தெரிவித்தது. 
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, வழக்கில் தொடர்புடைய மின்னஞ்சல் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர்களை விசாரிக்க 2 அல்லது 3 மாதங்கள் தேவைப்படுகிறது' எனத் தெரிவித்தார். 
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு உள்ளிட்ட 2ஜி தொடர்புடைய வழக்குகளை விசாரித்து முடிக்க மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ), அமலாக்கத் துறை (ஈடி) ஆகியவற்றுக்கு மேலும் 3 மாதம் அவகாசம் அளித்து உத்தரவிட்டனர். 
2ஜி வழக்கு: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ, மத்திய அமலாக்கத் துறை ஆகியவை தொடுத்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட மத்திய தொலைத் தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்பட 14 பேரும் விடுதலை செய்யப்படுவதாக சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி கடந்த ஆண்டு டிசம்பர் 21-ஆம் தேதி தீர்ப்பு அளித்தார். குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டது என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.
ஏர்செல் - மேக்சிஸ்: இதேபோல, ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகாரம் தொடர்புடைய வழக்கில் மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள்அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோருக்கு எதிராக மத்திய புலனாய்வுத் துறை, மத்திய அமலாக்கத் துறை ஆகியவை சுமத்திய குற்றச்சாட்டுகளை தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி கடந்த ஆண்டு பிப்ரவரி 1 -ஆம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் மலேசியாவைச் சேர்ந்த டி. அனந்த கிருஷ்ணனிடமும், ரால்ஃப் மார்ஷலிடமும் சிபிஐ நடத்த வேண்டிய விசாரணை நிலுவையில் உள்ளது. இதேபோல, ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தத்தில் மோசடி ஏதேனும் நடைபெற்றுள்ளதா எனவும், இதில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் பங்கு குறித்தும் சிபிஐ, அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. 
இதனிடையே, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் ஆ. ராசா, கனிமொழி உள்பட 14 பேரும் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com