கன்னியாஸ்திரிக்கு எதிராக அவதூறான பேச்சு: கேரள எம்எல்ஏவுக்கு மீண்டும் அழைப்பாணை

கேரள பேராயர் மீது பாலியல் குற்றம் சாட்டிய கன்னியாஸ்திரிக்கு எதிராக அவதூறாகப் பேசிய கேரள சட்டப்பேரவை உறுப்பினருக்கு, தேசிய மகளிர் ஆணையம் மீண்டும்
கன்னியாஸ்திரிக்கு எதிராக அவதூறான பேச்சு: கேரள எம்எல்ஏவுக்கு மீண்டும் அழைப்பாணை


கேரள பேராயர் மீது பாலியல் குற்றம் சாட்டிய கன்னியாஸ்திரிக்கு எதிராக அவதூறாகப் பேசிய கேரள சட்டப்பேரவை உறுப்பினருக்கு, தேசிய மகளிர் ஆணையம் மீண்டும் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
தில்லியில் உள்ள ஜலந்தர் ரோமன் கத்தோலிக்க திருச்சபை மாவட்டத்தின் பேராயராக இருந்த ஃபிராங்கோ முலக்கல் மீது கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த ஜுலை மாதம் பாலியல் புகாரை முன்வைத்தார். கடந்த 2014-இல் இருந்து 2016 வரையில் முலக்கல் பல்வேறு தருணங்களில் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக அந்தப் புகாரில் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அந்தக் கன்னியாஸ்திரி குறித்து பல ஆட்சேபணைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த கேரள சட்டப்பேரவை உறுப்பினர் பி.சி. ஜார்ஜ், 2014-ஆம் ஆண்டு முதல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறும் அவர், முன்பே இது குறித்து புகார் தெரிவிக்காதது ஏன்?' என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். 
இது குறித்து கருத்து தெரிவித்த தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மா, சட்டப்பேரவை உறுப்பினரின் கருத்துகள் மனதைக் காயப்படுத்துவதாக உள்ளன. சமூகத்தில் முக்கியப் பதவிகள் வகிக்கும் நபர்கள், இது போன்ற அநாகரிகமான கருத்துகளைத் தெரிவிப்பதற்கு ஆணையம் கடும் கண்டனம் தெரிவிக்கிறது' என்று தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, அவரின் சர்ச்சைக்குரிய கருத்து குறித்து, செப்டம்பர் மாதம் 20-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென்று மகளிர் ஆணையம் அவருக்கு அழைப்பாணை அனுப்பியிருந்தது. ஆனால், அழைப்பாணை 17-ஆம் தேதியன்று தான் எனக்குக் கிடைத்தது. இந்தக் குறுகிய கால இடைவெளியில் தில்லிக்கு வருவது கடினம். மேலும், கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடந்து வரும் மறுசீரமைப்புப் பணிகளைக் கவனித்து வருவதால், நேரில் ஆஜராக போதுமான கால அவகாசம் அளிக்க வேண்டும்' என்று ஜார்ஜ் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட தேசிய மகளிர் ஆணையம், அடுத்த மாதம் 4-ஆம் தேதி நேரில் ஆஜராகி, இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க ஜார்ஜுக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com