ஜம்மு-காஷ்மீர் டிஜிபி பணியில் தொடரலாம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புதிய காவல்துறை தலைவர் (டிஜிபி) நியமிக்கப்படும் வரை தற்காலிக டிஜிபி பணியில் தொடரலாம் என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புதிய காவல்துறை தலைவர் (டிஜிபி) நியமிக்கப்படும் வரை தற்காலிக டிஜிபி பணியில் தொடரலாம் என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
அதே சமயம், மாநிலத்துக்கான புதிய டிஜிபியாக நியமிக்கப்பட வேண்டிய தகுதியான நபர் குறித்து, மத்திய பணியாளர் தேர்வாணையம் 4 வாரத்துக்குள் முடிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இதுதொடர்பான வழக்கை வியாழக்கிழமை விசாரித்தது.
புதிய டிஜிபியை தேர்வாணையம் தேர்வு செய்ய வேண்டும் என நீதிபதிகள் கூறியதைத் தொடர்ந்து, அதுதொடர்பான பரிந்துரை பட்டியலை தேர்வாணையத்துக்கு மாநில அரசு அனுப்பி வைத்தாக வேண்டும்.
காவல்துறைத் தலைவர், காவல் கண்காணிப்பாளர் போன்ற உயர் அதிகாரிகளை நியமிக்கும்போது வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அவர்களது பதவிக்காலம் 2 ஆண்டுகளுக்கு குறையாமல் இருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கடந்த 2006-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
அந்த உத்தரவை பல்வேறு மாநில அரசுகள் தமக்கு சாதகமாக பயன்படுத்துகின்றன என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அண்மையில் முறையீடு செய்தது. அதாவது, ஓய்வு பெறக் கூடிய நிலையில் உள்ளவர்களை தற்காலிக டிஜிபியாக நியமித்து, பின்னர் அவர்களை பணி நிரந்தரம் செய்து இரண்டு ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படுவதாக மத்திய அரசு குற்றம்சாட்டியிருந்தது.
இதையடுத்து, டிஜிபி நியமனம் தொடர்பான புதிய நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் வகுத்து, அதனை பின்பற்றுமாறு மாநில அரசுகளுக்கு கடந்த ஜூலை 3-ஆம் தேதி உத்தரவிட்டது. குறிப்பாக, தற்காலிக டிஜிபி பணியிடம் என்பதே கூடாது என்றும், பதவியில் இருப்பவர் ஓய்வு பெறுவதற்கு முன்பே, அடுத்து அந்தப் பதவிக்கு வர வேண்டியவர்களின் பரிந்துரை பட்டியலை தேர்வாணையத்துக்கு மாநில அரசுகள் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. அந்த பரிந்துரையின் அடிப்படையில் புதிய டிஜிபி தேர்வு செய்யப்படுவார் என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்தச் சூழலில், ஜம்மு-காஷ்மீர் டிஜிபியாக இருந்த எஸ்.பி.வாயீதை நீக்கிவிட்டு, தற்காலிக டிஜிபியாக தில்பக் சிங்கை மாநில அரசு அண்மையில் நியமித்தது. அங்கு நிலவும் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு தற்காலிக டிஜிபி நியமிக்கப்பட்டாத உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு கூறியிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com