வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப மத்திய அரசு முடிவு

கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் அப்) பகிரப்படும் குறுந்தகவல்களில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவரக் கோரும் விவகாரத்தில், அந்த நிறுவனத்துக்கு 3-ஆவது முறையாக நோட்டீஸ்
வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப மத்திய அரசு முடிவு


கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் அப்) பகிரப்படும் குறுந்தகவல்களில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவரக் கோரும் விவகாரத்தில், அந்த நிறுவனத்துக்கு 3-ஆவது முறையாக நோட்டீஸ் அனுப்பும் யோசனையில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்உள்ளது.
கட்செவி அஞ்சலில் சர்ச்சைக்குரிய வகையில் பகிரப்படும் குறுந்தகவல்களை உருவாக்கிய நபர் யார் என்பதைக் கண்டறியும் வாய்ப்புகளை வழங்கும் வசதிகளை ஏற்படுத்துமாறு வலியுறுத்தி கட்செவி அஞ்சல் நிறுவனத்துக்கு மத்திய அரசு ஏற்கெனவே இரு முறை நோட்டீஸ்கள் அனுப்பியிருந்தது.
எனினும், அத்தகைய வெளிப்படைத்தன்மையை கொண்டுவருவது பயனாளர்களின் தனியுரிமையை மீறும் செயல் என்றும், அது தங்களது மறையாக்க கொள்கையை (எண்ட் டூ எண்ட் என்கிரிப்ஷன்) பாதிக்கும் என்றும் கூறி கட்செவி அஞ்சல் நிறுவனம் அதற்கான வசதிகளை வழங்க மறுத்து வருகிறது. 
இதுகுறித்து தகவலறிந்த அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
இந்த விவகாரம் தொடர்பாக துறை ரீதியாக கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கட்செவி அஞ்சல் நிறுவனத்துக்கு அடுத்த 7 முதல் 10 நாள்களில் 3-ஆவது முறையாக நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது. 
அந்த நிறுவனத்தின் மறையாக்கக் கொள்கையில் சமரசம் செய்துகொள்ளாமலேயே, சர்ச்சைக்குரிய குறுந்தகவலை உருவாக்கி அனுப்பியவரை அடையாளம் காணுவதற்கான தொழில்நுட்பத் தீர்வுகளை கண்டறிய இயலும் என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கருதுகிறது.
இதன் மூலமாக கட்செவி அஞ்சலில் வெளிப்படைத் தன்மையை கொண்டுவர இயலும். அதேவேளையில் பரவலாகப் பகிரப்பட்ட சர்ச்சைக்குறிய ஒரு குறுந்தகவலின் உள்ளடக்கத்தை பார்க்காமலேயே, அதை உருவாக்கிய நபரின் அடையாளத்தை மட்டும் கண்டறிய இயலும் என்றும் அமைச்சகம் கருதுகிறது என்று அந்த தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.
கட்செவி அஞ்சலில் உலவும் போலியான குறுந்தகவல்கள் மூலமாக நாடெங்கிலும் பல்வேறு கும்பல் கொலை சம்பவங்கள் நிகழ்ந்ததை அடுத்து, அத்தகைய குறுந்தகவல்களை உருவாக்குபவர்களை அடையாளம் காணும் வாய்ப்புகளை கண்டறியுமாறு கட்செவி அஞ்சல் நிறுவனத்தை மத்திய அரசு வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com