ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பில் இருங்கள்! பொறுப்பாளர்களுக்கு பாஜக அறிவுறுத்தல்

பாஜக சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி (பூத் கமிட்டி) வாரியான பொறுப்பாளர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ் அமைப்பினரிடம் நெருங்கிய தொடர்பில் இருக்குமாறு

பாஜக சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி (பூத் கமிட்டி) வாரியான பொறுப்பாளர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ் அமைப்பினரிடம் நெருங்கிய தொடர்பில் இருக்குமாறு அக்கட்சி அறிவுறுத்தியுள்ளது. அதேபோன்று ஹிந்துத்துவ சார்பு அமைப்புகளையும் அவ்வப்போது தொடர்பு கொண்டு ஆலோசிக்குமாறும் அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்காகவும் பணியாற்றும்படி தனது தொண்டர்களிடம் ஆர்எஸ்எஸ் அமைப்பு வலியுறுத்துவதில்லை என்று அதன் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கு முரணாக பாஜகவின் அறிவுறுத்தல்கள் வெளியாகியிருப்பது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
 தில்லியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் மாநாடு கடந்த வாரம் நடைபெற்றது. அதில் பேசிய பாகவத், "ஒரு குறிப்பிட்ட கட்சியின் (பாஜக) செயல்பாட்டின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் இருப்பதாக கருத்து உள்ளது; ஆனால், அது தவறானது; ஏனெனில், எந்த ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படும்படி தொண்டர்களை ஆர்எஸ்எஸ் கேட்டுக் கொள்வது இல்லை; தேச நலன் சார்ந்து செயல்படுபவர்களுக்கு துணை நிற்குமாறு மட்டுமே கேட்டுக் கொள்கிறோம்' என்றார்.
 இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற பாஜக செயற்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் பின்பற்ற வேண்டிய 24 அம்ச செயல் திட்டங்கள் வெளியிடப்பட்டன. அதில், ஆர்எஸ்எஸ் அமைப்பினருடன் பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் தொடர்பில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்ததாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com