கேரளத்தில் மீண்டும் கனமழை எச்சரிக்கை

கேரளத்தில் 5 மாவட்டங்களில் செவ்வாய், புதன்கிழமைகளில் (செப். 25,26) கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


கேரளத்தில் 5 மாவட்டங்களில் செவ்வாய், புதன்கிழமைகளில் (செப். 25,26) கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த மாதம் பெய்த கனமழை, வெள்ளத்தால் கேரளத்தில் 450-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அந்த மாநிலம் முன்னெப்போதும் இல்லாத பேரிடரையும், பொருளாதார இழப்புகளையும் சந்தித்தது. அந்த துயரத்தில் இருந்து கேரள மக்கள் இப்போதுதான் மெதுவாக மீண்டு வருகின்றனர்.
இந்நிலையில், செவ்வாய், புதன்கிழமைகளில் கேரளத்தில் பத்தனம்திட்டா, இடுக்கி, வயநாடு, திருச்சூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, அந்த மாவட்டங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மீட்பு மற்றும் உதவிக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கனமழை பெய்யும்போது பொதுமக்கள் மிகவும் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, வெள்ளம் சூழ்ந்த தாழ்வான பகுதிகள், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் அங்கிருந்து வெளியேற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 5 மாவட்டங்களிலும் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு 64.4 மில்லி மீட்டர் முதல் 124.4 மில்லி மீட்டர் வரை மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com