அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

அரசு திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்றும், அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என்றும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புது தில்லி: அரசு திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்றும், அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என்றும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

அதே சமயம், தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைக் கோருவது சட்டவிரோதம் என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைப் பெறும் அதிகாரம் அளிக்கும் சட்டத்தை நீக்கியுள்ளது.

ஆதாரை கட்டாயமாக்கும் மத்திய அரசின் திட்டம், ஆதார் சட்டம் ஆகியவற்றை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 31 மனுக்கள் தொடுக்கப்பட்டன. 

இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திராசூட், அசோக் பூஷண் ஆகிய 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. 

இந்த விசாரணை கடந்த மே மாதம் 10ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

அதில், தனிநபர் கண்ணியம் காக்கப்பட ஆதார் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கும் ஆதார் கட்டாயமாக்கக் கூடாது, நீட், சிபிஎஸ்இ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கும் ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஆதார் அடையாள அட்டைக்கும் பிற அடையாள அட்டைகளுக்கும் வித்தியாசம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் உச்ச நீதிமன்ற நீதிபதி சிக்ரி வாசித்த தீர்ப்பில், ஆதார்  அட்டையை போலியாக உருவாக்க முடியாது. ஆதார் என்பது மற்ற அடையாள ஆவணங்களைப் போல அல்ல. குறைந்த, அத்தியவாசியத் தகவல்கள் மட்டுமே ஆதாருக்காகப் பெறப்படுகிறது. ஆதார் சிறந்தது என்பதை விட தனித்துவமானது என்பதே நல்லது. தனி நபர் சுதந்திரத்தை ஆதார் திட்டமும், அட்டையும் பாதிக்கிறது என்பதே பிரச்னையாக உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com