அரசியல் சாசன சட்டப்படி ஆதார் செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

மத்திய அரசின் மிக முக்கியமான திட்டமான ஆதார் அட்டை திட்டம் அரசியல் சாசன சட்டப்படி செல்லும் என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
அரசியல் சாசன சட்டப்படி ஆதார் செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு


மத்திய அரசின் மிக முக்கியமான திட்டமான ஆதார் அட்டை திட்டம் அரசியல் சாசன சட்டப்படி செல்லும் என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. அதே நேரத்தில் வங்கிக் கணக்குகள், செல்லிடப்பேசி சிம் கார்டு, பள்ளி மாணவர் சேர்க்கை ஆகியவற்றில் ஆதார் கட்டாயமில்லை என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பை கட்டாயமாக்கியுள்ளது. அதேபோல வருமான வரிக் கணக்குத் தாக்கலுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்
பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அளித்துள்ளது.
கட்டாயமும்... எதிர்ப்பும்...: முன்னதாக, மத்திய அரசின் பல்வேறு சமூக நலத் திட்டங்களின்கீழ் பயன்பெறவும், நேரடி மானியத் திட்டம், சிம் கார்டு, பான் கார்டு, வருமான வரித் தாக்கல், வங்கிக் கணக்கு என அனைத்துக்கும் ஆதார் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு காலக்கெடுவையும் மத்திய அரசு நிர்ணயித்தது.
இதனை எதிர்த்தும், ஆதாரில் கைவிரல் ரேகை பதிவு, கண் கருவிழி படலம் பதிவு செய்யப்படுவது தனியுரிமை மீறல் என்றும், அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி பல்வேறு தரப்பில் இருந்து உச்ச நீதிமன்றத்தில் 31 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. விசாரணை முடிவுக்குப் பிறகு கடந்த மே 10-ஆம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அரசியல்சாசன அமர்வு தனது தீர்ப்பை புதன்கிழமை வெளியிட்டது.
மொத்தம் மூன்று பிரிவாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை அறிவித்தனர். முதலாவது நீதிபதி ஏ.கே.சிக்ரி தனது சார்பாகவும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் மூத்த நீதிபதி ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் சார்பில் தீர்ப்பை வெளியிட்டார். அடுத்ததாக நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண் ஆகியோர் தனித்தனியாக தங்கள் தீர்ப்பை அறிவித்தனர். இதில் நீதிபதி சந்திரசூட் வழங்கிய தீர்ப்பு மட்டும் சில இடங்களில் மற்றவர்கள் வழங்கியதில் இருந்து சற்று மாறுபட்டு இருந்தது. எனினும், பெரும்பான்மையான நீதிபதிகள் கூறிய தீர்ப்பை ஏற்பதாக மற்றொரு நீதிபதி அசோக் பூஷண் அறிவித்தார்.
தனியுரிமை மீறல் இல்லை: இதன்படி ஆதார் சட்டத்தின் 57 ஆவது பிரிவை ஏற்க முடியாது என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசிடம் இருந்து ஆதார் தகவலைப் பெற முடியாது. ஆதார் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு ஒரு தகவலை ஆறு மாதங்களுக்கு மேல் பாதுகாத்து வைக்கக் கூடாது. 
சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு ஆதார் அளிக்கக் கூடாது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஆதார் அட்டை திட்டம் அரசமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகத்தக்கதுதான். மேலும், ஆதார் சட்டம் எந்த வகையிலும் தனிநபர்களின் உரிமைகளை மீறவில்லை. அதே நேரத்தில் ஆதார் தகவல் பாதுகாப்புக்கு மத்திய அரசு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆதார் தகவல் பாதுகாப்பு தொடர்பாக சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 
கைரேகை பெறுவது ஏற்புடையது: மேலும், ஆதார் அட்டை வழங்குவதற்காக குறைந்தபட்ச அளவிலேயே தனிமனிதர்களை உறுதிப்படுத்தும் அடையாளங்கள் (ரேகை உள்ளிட்டவை) பெறப்படுகின்றன. இத்திட்டம் மூலம் சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு பலன் கிடைக்கிறது. மேலும், போலியாக இதுபோன்ற அடையாள ஆவணத்தை தயாரிக்கவும் முடியாது என்ற வகையில் இது ஏற்புடையதுதான்.
ஆதார் திட்டம் பொது நலன் கருதிதான் கொண்டு வரப்பட்டுள்ளது.
பான் கார்டுக்கு ஆதார் கட்டாயம்: பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். புதிய பான் கார்டு பெற ஆதார் தேவை என்பது சரியானதுதான். வருமான வரிக் கணக்கு தாக்கலுக்கும் ஆதாரை கட்டாயமாக்கியது செல்லுபடியாகும். அதே நேரத்தில் வங்கிக் கணக்குகள், செல்லிடப்பேசி சிம்கார்டு, பள்ளி சேர்க்கை, சிபிஎஸ்இ, நீட் தேர்வு, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நடத்தும் தேர்வுகளுக்கு ஆதாரை கட்டாயப்படுத்தக் கூடாது.
அதே நேரத்தில் அரசின் மானியங்கள், சமூக நலத் திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம் என்றாலும், ஆதார் இல்லை என்ற காரணத்துக்காக குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டம் போன்றவற்றை மறுக்கக் கூடாது என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர். ஏற்கெனவே, சிறார்களுக்கு ஆதார் அட்டை வாங்கியிருந்தால் கூட, பெற்றோர் விருப்பப்பட்டால் அதில் இருந்து நீக்கிக் கொள்ள முடியும்.
பண மசோதாவாக நிறைவேற்றியதும் செல்லும்: ஆதார் சட்டத்தை பண மசோதாவாக நிறைவேற்றியது செல்லும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், நீதிபதி சந்திரசூட் மட்டும் தனது தீர்ப்பில் ஆதாரை பண மசோதாவாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது அரசமைப்புச் சட்டத்துக்கு 
எதிரானது என்று கூறியுள்ளார். எனினும், பெரும்பான்மையான நீதிபதிகள் அதனை பண மசோதாவாக ஏற்றுக் கொண்டனர். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் 
ஜெய்ராம் ரமேஷ் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பண மசோதாவாக அறிவிக்கப்பட்டால் அதனை மக்களவையில் நிறைவேற்றினால் போதுமானது. மாநிலங்களவையில் நிறைவேற்றத் தேவையில்லை. மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாததால் அங்கு நிறைவேற்ற முடியாது என்பதால் ஆதார் சட்டத்தை பண மசோதாவாக ஆளும் கட்சி மாற்றியது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாகும்.

மின்னணு பொருளாதாரத்தின் அடையாளம் ஆதார்
இந்தியாவில் மின்னணு பொருளாதாரத்தின் அடையாளமாக ஆதார் திகழ்கிறது என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. 
ஆதார் அட்டை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அது தொடர்பாக சாமானிய மக்களிடம் மட்டுமின்றி, கல்வியாளர்கள் உள்பட பல்வேறு தரப்பிலும் விவாதங்கள் எழுந்தன. தேசிய அளவில் ஊடகங்களில் ஆதாருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கட்டுரைகளும், விவாதங்களும் வெளியாகின. ஆதார் என்ற ஹிந்தி வார்த்தை அகராதியில் உள்ள அர்த்தத்தில் நமது நாட்டில் இப்போது பயன்படுத்தப்படவில்லை. அது ஒவ்வொரு தனிநபருடனும் தொடர்புடையதாகி, தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஆவணமாகியுள்ளது. சிறப்பாக இருப்பதைவிட ஒருங்கிணைந்து இருப்பது முக்கியம். ஏனெனில் சிறப்பாக இருப்பது என்பது ஒருவரை முதலிடத்துக்கு கொண்டு செல்லலாம். ஆனால், ஒருங்கிணைப்பு என்பதுதான் அனைவரையும் முன்னேற்றும். ஆதார் என்பது நம் ஒவ்வொருவரின் தனித்துவ அடையாளத்தை உறுதி செய்கிறது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டாயம்...
பான் கார்டுடன் இணைக்க...
வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய...
அரசின் மானியம், நலத்திட்ட உதவிகள் பெற...

கட்டாயமில்லை...
வங்கிக் கணக்கு தொடங்க...
சிம் கார்டுடன் இணைக்க... 
சிபிஎஸ்இ, நீட் தேர்வு, யுஜிசி ஆகியவற்றுக்கு...
பள்ளிகளின் மாணவர் சேர்க்கைக்கு...
ஆதார் இல்லை என்ற காரணத்துக்காக மதிய உணவு உள்ளிட்ட எந்த திட்டமும் குழந்தைகளுக்கு மறுக்கப்படக் கூடாது.

நீதிமன்றத்துக்கு நன்றி
ஆதார் தொடர்பான தீர்ப்புக்காக, உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவில்,


காங்கிரஸை பொருத்தவரையில் ஆதார் என்பது நாட்டை மேம்படுத்துவதற்கான கருவி. ஆனால், பாஜகவுக்கு, ஆதார் என்பது ஒடுக்குவது மற்றும் கண்காணிப்பு மேற்கொள்வதற்கான ஆயுதம். 
இந்நிலையில், காங்கிரஸ் கொள்கைக்கு வலுசேர்க்கும் விதமாகவும், நாட்டைப் பாதுகாக்கும் வகையிலும் தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசுக்கு சேமிப்பு
ஆதார் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வரவேற்பு தெரிவித்தார். அவர் கூறியதாவது:
இது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு. நீதிமன்ற ஆய்வுக்குப் பிறகு, தனித்துவ அடையாள எண் (ஆதார்) திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்பது உண்மையிலேயே வரவேற்புக்குரியது.
நாட்டில் 122 கோடி மக்களுக்கு ஆதார் அட்டைகள் உள்ளன. இந்நிலையில், அரசின் நலத்திட்டங்களுக்கான பயனாளிகளை அடையாளம் காணுவது, அதில் போலிகளை நீக்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டதால், ஏற்கெனவே அரசுக்கு ஒவ்வோர் ஆண்டும் ரூ.90,000 கோடி சேமிப்பாகிறது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com