பகுதி - 10 டமால்... டுமீல்...

ஓட்டல் பணிப்பெண்ணின் குதிரை வால் கூந்தலைப் பிடித்து இழுத்த

 

ட்டல் பணிப்பெண்ணின் குதிரை வால் கூந்தலைப் பிடித்து இழுத்த நியூஸிலாந்து பிரதமர்…

பின்னலைப் பின் நின்று இழுக்கும் தீராத விளயாட்டுப் பிள்ளையா?

***

அலகாபாத்தில் நடைபெற்ற குடுமி போட்டியில், மூன்று அடி நீளம் வைத்திருந்தவருக்கு ‘குடுமி சாம்ராட்’ பட்டம் தரப்பட்டது.

‘குடுமி சாணக்கியா’ என்றிருந்தால் மேலும் பொருத்தம். 


***

உ.பி. அரசு ஊழியர்களுக்கு, ஆண்டில் ஆறு மாதம் விடுமுறை.

மீதி ஆறு மாதங்களில், ஆபீஸ் வந்து கையெழுத்து போட்டால் மட்டும் போதும்!

***

பணியில் சேர்ந்த விமானிகளுக்கு உடனே திருமணம் செய்துகொள்ள துருக்கி ஏர்லைன்ஸ் அறிவுரை.

காதல் கீதல் என்று சொல்லி, விமானத்தை மலை மேல் இறக்குவதை தவிர்ப்பதற்காக இருக்கும்.

***

ஐ-டிபன் என்கிற பெயரில் கிரிக்கெட் வீரர் ராபின் ஊத்தப்பா சிற்றுண்டி நிறுவனத்தை  ஆரம்பிக்கிறாராம்.

‘ஊத்தப்பா - டிபன்’ காம்போ சூப்பர்!

***

ஹெல்மெட் அணிந்தால்தான் இயங்கும் மோட்டர் சைக்கிள் கண்டுபிடிப்பு

ஓட்டிக்கொண்டே செல்போனில் பேசினால் நின்றுவிடுமா?

***

பிறப்பு, இறப்பு பதிவுக்கு ஆதார் எண் அவசியம்.

பிறந்தவுடன் ஆதாருக்கு மனு போட்டால், இறந்தவுடன் பதிவு செய்ய அட்டை கிடைத்துவிடும்.

***

பெயின்ட் பிரஷ் தயாரிக்க உதவும் ரோமத்துக்காக கீரிகள் கொல்லப்படுவதை தடுக்கும் உயிரின ஆர்வலர்கள்.

கண் கொத்திப் பாம்பாக செயல்பட வேண்டி இருக்கிறது என்பார்களா?

***

உலர்த்திய மிளகாய் மேல் சாணம் போட்டதால் பசுவின் காலை வெட்டிய முதியவர்.

கோமாதாவைவிட மனைவியின் மிளகாய் மேல் பயபக்தி அதிகம் போலிருக்கு.

***

3000 கடிகாரங்களுக்கு மேல் வீட்டில் வைத்திருக்கும் சென்னை வாசி.

நல்ல சகுனமாக, அடிக்கடி மணி அடிக்கும் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கும்.

***

பசி இருந்து பணம் இல்லாதவர்களுக்கு இலவச உணவு அளிக்கும் தோஹா ஓட்டல்.

அன்ன தாதா மதிரி அன்ன தோஹாவா?

***

அடுத்த ஸ்டேஷனுக்கு ஐந்து ரூபாய் என்பதால், ராஜஸ்தானில் பத்து ரூபாய் கொடுத்து பிளாட்பாரம் டிக்கெட் வாங்குவதில்லையாம்.

பின்னே? கேர் ஆஃப் பிளாட்பாரம் என்பதற்கு இரட்டை மடங்கு பணத்தை ஏன் செலவழிக்கணும்?

***

சுற்றுச் சூழல்  ஆர்வலர் பச்சோரிக்கு, உடன் பணியாற்றும் பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால், வெளி நாடு செல்ல அனுமதி இல்லையாம்.

அங்கேயும் சுற்றுச் சூழலில் உள்ளவர்களிடம் ஆர்வம் காட்டாமல் இருக்கத்தானே?

***

சிம்பன்ஸிகளை மனித இனமாக அறிவிக்க அமெரிக்காவில் வழக்கு.


இதற்கு சிம்பன்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கலாம்

***

ஹிந்தி பேசாத எம்.பி.களுக்கு ஹிந்தி வகுப்புகள் - மத்திய அரசு.

தாய் மொழிகூட சரியாகப் பேசத் தெரியாதவர்களுக்கு, அவையின்  மேசையில் விசையாக கை தட்டும் பயிற்சி அளிக்கப்படலாம்.

***

சமையலறையும் படுக்கையறையும் அருகருகே அமைந்தால், தம்பதியர் ஒற்றுமை ஓங்கி இல்லறம் இனிக்குமாம்.

முதலில் யார் சமையல் என்பதில் உடன்-படுக்கை ஏற்பட வேண்டும் அல்லவா?

***

தங்கள் வாலையே நாய்கள் சுற்றிச் சுற்றி துரத்துவது ஏன் என்று பிரிஸ்டல் விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்கிறார்களாம்.

நாய் வாலை வேண்டுமானால் நிமிர்த்தலாம். இந்த வெத்துவேட்டு ஆராய்ச்சிகளை நிறுத்த முடியாது.


***

103 வயதில் 91 வயதான தோழியுடன் மறுமணம் செய்துகொண்ட இங்கிலாந்து குடிமகன், மூட்டு வலி காரணமாக மண்டியிட முடியவில்லையாம்.

யாரிடம்? மனைவியிடமா?


***

பிரிட்டன் அரச குடும்பத்து இரண்டாது வாரிசு பெண்ணாக இருக்கும் என்று 400 கோடியும் ஆணாக இருக்கும் என்று 300 கோடியும் பெட்.

ஆணா பெண்ணா என்று டாஸ் போட்டுப் பார்த்து பெட் கட்டுவார்கள் போலிருக்கு.

***

காஞ்சனா 2-ல் பேயாக நடித்த தப்ஸி, ‘லிவ்விங் டுகெதர்’ நல்லது என்கிறார்.

பேய்களுக்கா? கால்களே இல்லாத பேய்களுக்கு எப்படி கால்கட்டு போடுவது?

***

சென்னை கிண்டியில், தேசிய முதியோர் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.

சிகிச்சை முடிந்தபின் முதியோர்கள் ரேஸ் குதிரையாக டக்-டக் என்று மிடுக்காக நடப்பார்கள் என்று நம்பலாம்.

***

42-வது முறையாக, சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி விழுந்து விபத்து.

கண்ணடிபட்டிருக்கும். அதான் கண்ணாடிகள் அடிபடுகின்றனவா?

***

பஞ்சாபில் மொபைல் எடுத்து வரத் தடை செய்த பெண்கள் பள்ளி முதல்வரை மாணவியின் தாயார் அடித்து உதைத்தார்.


கைப்பேசி விவகாரத்தில், அந்தத் தாயின் ‘கை’ பேசிவிட்டதா?

***

மாதவிலக்கு, பேசக்கூடாத விஷயமல்ல என்கிற விழிப்புணர்ச்சி அதிகரிக்கிறது.
அதான் பெண்கள் கேர்ஃப்ரீயாக இருக்கிறார்கள் அல்லவா?

***

சீனாவில், இறந்த முதியவர் முன் ஒரு அழகியை ஆடை களையும் நாட்டியம் ஆடச் சொல்கிறார்களாம்.

கண்களை மூடியவர், கண்களைத் திறக்கவைக்க கடைசி முயற்சியாகவா?

***
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com