5. ஒரு மாமனிதர் செதுக்கப்படுகிறார்!

செப்டம்பர் 16, 1923. ஞாயிற்றுக்கிழமை. காலை மணி 9, ஏழு நிமிடங்கள். மற்ற ஜோதிடர்கள் என்ன சொல்வார்களோ, ஆனால், சிங்கப்பூரைப் பொறுத்தவரை, சுபயோக சுபதினம்.

செ 

ப்டம்பர் 16, 1923. ஞாயிற்றுக்கிழமை. காலை மணி 9, ஏழு நிமிடங்கள்.   மற்ற ஜோதிடர்கள் என்ன சொல்வார்களோ, ஆனால், சிங்கப்பூரைப் பொறுத்தவரை, சுபயோக சுபதினம். 92, காம்ப்பாங் ஜாவா ரோடில் (Kampong Java Road) இருக்கும் இரண்டு மாடி பங்களா. பதினாறே வயதான சுவா ஜிம் நியோ (Chua Jim Neo) கைகளில் மருத்துவர் அப்போதுதான் பிறந்த குழந்தையைத் தருகிறார். இருபது வயதான அப்பா லீ சின் கூன் (Lee Chin Koon) அறைக்குள் வருகிறார். முதல் குழந்தை. இருவர் நெஞ்சங்களிலும் பொங்கும் பெருமை, சந்தோஷம்.

நான்கு தலைமுறைகளாகச் சிங்கப்பூரில் இருக்கும் சீனக் குடும்பம். ஆசை மகனுக்கு லீ குவான் யூ என்று பெயர் சூட்டுகிறார்கள். சீன மொழியில், வெளிச்சம், முன்னோர்களுக்குப் பெரும் புகழ் கொண்டுவருபவர் என்று அர்த்தங்கள். மிகப் பொருத்தமான பெயர் என்று வருங்காலம் சொல்லப்போகும் பெயர்.

கொள்ளுத் தாத்தா (தாத்தாவின் அப்பா) காலம் முதல் லீ குடும்பத்தின் பூர்வீகம் சிங்கப்பூர்தான். கொள்ளுத் தாத்தா பெயர் லீ போக் பூன் (Lee Bok Boon). இவர்தான் முதன் முறையாகச் சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கு வாழ்க்கை தேடி வந்தார். என்ன வேலை பார்த்தார் என்பது தெரியவில்லை. தன் 24 – ம் வயதில், ஸுவா ஹுவான் நியோ (Seow Huan Neo) என்னும் சீனப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். ஸுவா ஹுவான் நியோ, சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்தவர். இருவருக்கும் மூன்று குழந்தைகள். பன்னிரெண்டு வருடம் இனிமையான திருமண வாழ்க்கை.

போக் பூன் மனைவி, குழந்தைகளோடு சீனாவுக்குத் திரும்ப ஆசைப்பட்டார்.  தான் பிறந்து வளர்ந்த சிங்கப்பூரைவிட்டுப் போக மனைவி விரும்பவில்லை. கொள்ளுத் தாத்தா மட்டும் தாயகம் போனார். கொள்ளுப் பாட்டியும்,  குழந்தைகளும் பின் தங்கிக்கொண்டார்கள். அவர்களின் மகன் லீ ஹூன் லியாங் (Lee Hoon Leong). இவர்தான் லீ குவான் யூவின் தாத்தா.

ஹூன் லியாங் ஐந்தாம் வகுப்புவரைதான் படித்தார். ஏழ்மையான குடும்பச் சூழ்நிலை. மேலே படிக்கமுடியவில்லை. வேலைக்குப் போகவேண்டிய கட்டாயம். ஒரு மருந்துக் கடையில் வேலை கிடைத்தது. சில வருடங்கள் அனுபவம். அடுத்து, இந்தோனேஷிய நாட்டின் சர்க்கரைத் தொழில் சக்கரவர்த்தியாக இருந்த ஓயி டியாங் ஹாம் (Oei Tiong Ham) என்பவரின் கப்பலில் வரவு செலவுக் கணக்குப் பார்க்கும் வேலையில் சேர்ந்தார். நேர்மை, திறமை முதலாளியின் கண்களில் பட்டன. பதவி ஏணியில் மளமளவென முன்னேறினார். தன் சிங்கப்பூர் வியாபாரத்தை நிர்வகிக்கும் முழுப் பொறுப்பையும், ஹாம், ஹூன் லியாங் கைகளில் ஒப்படைத்தார். நல்ல சம்பளம், வசதிகள்.  

ஹூன் லியாங்-க்குக்கு இரண்டு மனைவிகள் (*ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்துகொள்ளும் பழக்கம் அன்று சீனர்களிடம் இருந்தது.), மூன்று மகன்கள், ஐந்து மகள்கள். கப்பல்களில் பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் வேலை பார்த்த அனுபவம், அவர்களுடைய பழக்க வழக்கங்கள் உடலோடு ஊறிவிட்டன. எப்போதும் டீக்காக உடை அணிவார். எந்த வேலையையும் நேரம் தவறாமல் செய்வார். தன் குழந்தைகளைச் செல்வச் செழிப்பில் வளர்த்தார். எல்லாக் குழந்தைகளுக்கும், ஆங்கிலக் கல்வியும், ஆங்கில மொழியில் தேர்ச்சியும், ஆங்கிலேயரின் பழக்க வழக்கங்களும் கற்றுத் தந்தார். இவருடைய ஒரு மகன்தான் லீ சின் கூன் – லீ குவான் யூ அப்பா. . 

ராஜா வீட்டுக் கன்றுக்குட்டியாக வளர்ந்த காரணத்தால், ஹூன் லியாங்  குழந்தைகளுக்குச் சாதனைச் சிகரங்கள் தொடும் வெறி வரவில்லை. லீ சின் கூன், ராயல் டச் ஷெல் (Royal Dutch Shell ) என்னும் பிரிட்டீஷ்- டச்சுப் பெட்ரோல் கம்பெனியில் ஸ்டோர் கீப்பராக வேலை பார்த்தார். பெரிய பதவியில்லை. 

அப்பா வீட்டிலேயே வசித்தார். லீ பிறந்தது தாத்தா வீட்டில்தான். தன் தாத்தாவையும், அப்பாவையும் பற்றி லீ பின்னாட்களில் சொன்னார், “என் தாத்தா, அப்பா இருவருக்குள் நான் யாரை அதிகமாகக் கொண்டாடினேன் என்ற கேள்விக்கு இடமே இருக்கவில்லை.....என் தாத்தா உழைப்பால் செல்வம் குவித்தவர். என் அப்பாவோ, தனக்கென்று எந்தச் சாதனைகளும் இல்லாத பணக்கார வீட்டுப் பிள்ளை.”        

சிறு வயது அனுபவங்கள், வளரும் சூழ்நிலை, நெருங்கிப் பழகும் உறவுகள், சேர்ந்து விளையாடும் நண்பர்கள் – இவை நெஞ்சில் ஆழமாகப் பதிகின்றன. நம் குணநலன்களைத் தீர்மானிக்கின்றன. லீ வளரத் தொடங்கினார். அவர் ஆளுமையைச் செதுக்கிய தாக்கங்கள் ஐந்து – அப்பா வழித் தாத்தா, அம்மா வழித் தாத்தா, அப்பா, உடன் விளையாடிய மீனவச் சிறுவர்கள், படித்த வீர தீரக் கதைகள். 

இவர்களுள் முதல் இடம் பிடிப்பவர் அப்பாத் தாத்தா ஹூன் லியாங். அவருக்குப் பேரப்பிள்ளை லீ செல்லக் குழந்தை. ஆங்கில நாகரிகத்தின் பாதிப்பு அதிகமான அவர், பேரனுக்கு ஹாரி (Harry) என்னும் ஆங்கிலத்தனமான பெயர் வைத்தார். இப்படித்தான் கூப்பிடுவார். எப்போதும் கச்சிதமாக உடை அணிதல், ஆங்கிலேய பாணியில் ஃபோர்க், ஸ்பூன் உபயோகித்துச் சாப்பிடுதல், பிறரிடம் கண்ணியமாகப் பழகும் முறை, நேரம் தவறாமை ஆகியவை அத்தனையும் லீ நெஞ்சில் பதிந்தன. உபயம் – தாத்தா தந்த பயிற்சி.

அடிமட்டத்தில் மருந்துக் கடை எடுபிடியாக வாழக்கையைத் தொடங்கிய தான் சந்தித்த தோல்விகள், ஏமாற்றங்கள், தடைக்கற்களை வெற்றிப் படிக்கற்களாக்கிய முயற்சிகள், தன் காலை இழுத்தோர், உதவிக்கரம் கொடுத்தோர் – அத்தனையையும் பேரனுக்குச் சொன்னார். உழைப்பால் உயர்ந்த அவர்மேல் லீ மனதில் மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது. நேர்மையும், கடும் உழைப்பும் இருந்தால் சிகரங்கள் தொடலாம் என்னும் எண்ணம் மனதில் ஆழமாகப் பதிந்தது.

1929, 1930. ஹூன் லியாங் வாழ்வில் பெரும் சறுக்கல் வந்தது. அமெரிக்காவில் பெரும் தொய்வு (Great Depression) என்னும் பொருளாதாரச் சரிவு தொடங்கியது, உலகமெங்கும் பரவியது. சந்தைப் பங்குகள், வீடுகள், நிலங்கள் விலை அதல பாதாளத்துக்கு இறங்கின. இவற்றில் முதலீடு செய்திருந்த கோடீஸ்வரர்கள் ஓட்டாண்டிகள் ஆனார்கள். அன்றைய நாட்கள் ரப்பர் தோட்டங்களில் லாபம் கொட்டிய காலங்கள். தாத்தா, தன் செல்வத்தின் பெரும்பகுதியை ரப்பர் தோட்டங்களில் முதலீடு செய்திருந்தார். ரப்பர் விலை வரலாறு காணாத அளவு குறைந்தது. பணத்தை இழந்தபோதும், தாத்தா மனதை இழக்கவில்லை. தன் பழக்க வழக்கங்களில் சமரசம் செய்யவில்லை. வருமானத்துக்குள் வசதியாக, நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையுமாக வாழ்ந்தார். இந்த அனுபவம் லீக்கு அற்புதப் பாடமாக அமைந்தது.

லீ- க்கு தம்பி பிறந்திருந்தான். அப்பாத் தாத்தாவால் அனைவர் செலவையும் சமாளிக்கமுடியாத நிலை. ஆகவே, லீ, பெற்றோர், தம்பி நால்வரும் அம்மாத் தாத்தா வீட்டுக்குப் போனார்கள். இவர் பெயர் சுவா கிம் டெங் (Chua Tim Heng). பண விஷயத்தில் இவர் கெட்டிக்காரர். எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடாமல், தன் பணத்தை ரப்பர் தோட்டங்கள், கடைகள் எனப் பல்வேறு வகைகளில் முதலீடு செய்திருந்தார். ஆகவே சுவா கிம் டெங் அதிகம் பாதிக்கப்படவில்லை. தன் மகள் குடும்பத்தை உடன்வைத்துக் காப்பாற்றும் வசதி அவருக்கு இருந்தது.

அம்மாத் தாத்தா வீட்டுக்குத் தன் ஆறாம் வயதில் லீ வந்தான். முதல் கொஞ்ச நாட்கள், மனம் நிறையக் குழப்பங்கள். அவன் இதுவரை வளர்ந்த அப்பாத் தாத்தா ஹூன் லியாங் வீடும், அம்மாத் தாத்தா சுவா கிம் டெங் வீடும் இரு துருவங்களாக இருந்தன. ஹூன் லியாங் ஆங்கில நாகரிகத்தின் உபாசகர், அதுதான் உலகத்திலேயே உயர்ந்தது என்று நினைத்தவர், உடை, உணவு என்னும் சின்னச் சின்ன விஷயங்களில்கூட பிரிட்டிஷாரைப் பின்பற்றியவர்.

சுவா கிம் டெங் ரத்த நாளங்களில் முழுக்க முழுக்கச் சீனப் பாரம்பரியமும், கலாச்சாரமும் ஓடின. இந்தச் சூழ்நிலையில், சீனக் கலாச்சாரத்தின் பெருமைகளை லீ உணர்ந்தான். ஆங்கிலக் கலாச்சார ஆரம்ப அறிமுகத்தால் அவன் முதலில் சீனப் பண்பாடுகளைச் சந்தேகத்தோடுதான் பார்த்தான், அணுகினான். ஆனால், ஒவ்வோரு நாகரித்துக்கும் ஒரு தனித்துவம், உயர்வு இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டான. அவனுடைய மன ஜன்னல்கள் திறந்தன. புதிய கருத்துக்களைப் பரிசீலித்து ஏற்கும் பக்குவம் பிறந்தது.

அப்பாவின் தாக்கம் தன்னிடம் அதிகமாக இல்லை என்று லீ சொல்லுவான். ஆனால் இது நிஜமில்லை. அப்பா லீ சின் கூன், சொகுசாக வாழ்ந்தவர்.  இத்தகையவர்கள் தம் குழந்தைகள் தம்மைப்போல இருக்கக்கூடாது, மாபெரும் சாதனையாளர்கள் ஆகவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். தங்கள் குழந்தைகளிடம் அளவுக்கு அதிகமான கண்டிப்பு காட்டுவார்கள், கோபம் காட்டுவார்கள், அவர்கள் சிறிய தவறுகள் செய்தாலும், கடுமையாகத் தண்டிப்பார்கள். லீ அப்பாவும் இப்படித்தான்.

ஒரு நாள், லீ தாத்தா தலைக்குத் தடவும் பிரிலியன்ட்டைன் (Brilliantine) க்ரீமை யாருக்கும் தெரியாமல் எடுத்து விளையாடிவிட்டான். விலை உயர்ந்த க்ரீம் வீணாகிவிட்டது. அப்பாவுக்குத் தெரிந்தது. மகனைக் கழுத்தைப் பிடித்துத் தூக்கினார். வீட்டில் இருந்த கிணற்றுக்குப் போனார். ”இனிமேல் இப்படி விஷமம் செய்தால், கிணற்றுக்குள் தூக்கிப் போட்டுவிடுவேன்” என்று கத்தினார். லீ பயந்து நடுங்கினான். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு லீ விஷமங்கள் செய்வதை நிறுத்தினான். அப்பா அவனுக்குச் சொல்லாமல் சொல்லிக் கொடுத்த பாடம், ”தவறுகள் செய்யாமல் மக்களைத் தடுக்க ஒரே வழி, கடுமையான தண்டனைகள் கொடுப்பதுதான்.”

அடுத்த சில வருடங்களில், லீயின் பெற்றோருக்கு இன்னும் மூன்று  மகன்களும், ஒரு மகளும் பிறந்தார்கள். மூத்த அண்ணன் லீ, மூன்று தம்பிகள், ஒரு தங்கை. இவர்கள் தவிர, அம்மாத் தாத்தா வீட்டில் ஏற்கெனவே ஏழு பேரக் குழந்தைகள் இருந்தார்கள். ஆக மொத்தம், வீட்டில் பன்னிரெண்டு  குழந்தைகள்.

மிகப் பெரிய வீடு. ஆகவே, எல்லோரும் சேர்ந்து வாழத் தாராளமான இடமும், வசதிகளும் இருந்தன. எல்லா வீடுகளையும் போலவே, குழந்தைகள் சேர்ந்து விளையாடினார்கள், சண்டை போட்டுக் கொண்டார்கள், கொஞ்ச நேரத்தில் அதை மறந்து ஆட்டம் பாட்டம் போட்டார்கள். எல்லோரையும் விட லீ வயதில் மூத்தவன். அதனால், எப்போதும் குட்டித் தம்பி, தங்கைகளோடு விளையாடச் சலிப்பு வரும். தன் தோழர்களை அவனே கண்டுபிடித்தான்.

வீட்டுக்கு எதிர்ப்புறம் மீனவர்கள் தங்கும் குடிசைகள் இருந்தன. லீ அங்கே போவான். குடிசைக் குழந்தைகளோடு பட்டம் விடுதல், கோலி, பம்பரம் போன்ற விளையாட்டுக்கள். பந்தா பார்க்காமல் அவனை இந்த ஏழை மீனவச் சிறுவர்களோடு சமமாக விளையாட விட்டது, லீ - யின் பெற்றோர், தாத்தா ஆகியோரின் பரந்த உள்ளத்துக்கு ஒரு உதாரணம். இதன் மூலம், பணம், சமூக அந்தஸ்து, நாடு, மொழி, மதம் என்னும் வேலிகள் இல்லாமல் மனிதரை மனிதராக மதிக்கும் மனப்பாங்குக்கு லீ மனதில் குடும்பத்தார் வித்திட்டார்கள். 

மீனவக் குழந்தைகளின் நட்பு லீ மனதில் இன்னொரு பரிணாமத்தைக் கொண்டு வந்தது. மீனவர்கள் தரைமேல் பிறந்து தண்ணீரில் பிழைப்பவர்கள், கடலில் போகும் ஒவ்வொரு நாளும், திரும்பி வருவோமா என்று தெரியாத நிலையில்லா வாழ்க்கை. தினமும் துணிவை மட்டுமே துணையாய்க் கொண்டு வாழவேண்டிய கட்டாயம். இதனால், இவர்களிடம் இல்லாதது பயம். இருப்பது, சரியென்று தோன்றிவிட்டால், உலகமே எதிர்த்து நின்றாலும், கலங்காமல் போரிடும் அபாரத் துணிச்சல்.

குழந்தைப் பருவத்திலேயே, போட்டி உணர்வும், துணிச்சலும் மீனவர்கள்  ரத்தத்தில் ஊறியவை. விளையாட்டுக்கள் கூட இவர்களுக்கு யுத்தங்கள். விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள். போராளி உணர்வும், எதை எடுத்தாலும் ஜெயித்துக் காட்ட வேண்டும் என்னும் வெறியும், இந்த மீனவச் சகோதரர்களிடமிருந்துதான் தனக்கு வந்தது என்று லீ சொல்லுவார்.

அம்மாத் தாத்தா வீட்டில் வசதிகள் உண்டு. ஆனால், ஆடம்பரங்கள் கிடையவே கிடையாது. பொம்மைகள் உண்டு. ஆனால், ஒவ்வொரு குழந்தைக்கும் ஒன்றிரண்டு பொம்மைகள்தாம். தன்னிடம் இருப்பதைப் பிறரோடு பகிர்ந்து கொள்வது, இருப்பதை வைத்துத் திருப்திப்படுவது போன்ற நல்ல குணங்கள் இதனால், சின்ன வயதிலேயே பிறந்தன, வளர்ந்தன. தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத காலம். குழந்தைகள் பொம்மைகளை வைத்துக்கொண்டு தங்கள் கற்பனைக் குதிரைகளைப் பறக்க விடுவார்கள். அந்த மாயாஜால உலகின் மயக்கத்தில் அளவில்லா ஆனந்தம் அடைவார்கள். லீ அடிக்கடி இப்படிப் பயணித்திருக்கிறான். 

லீ உள்ளத்தைக் கொள்ளை கொண்ட இன்னொரு உலகம், புத்தக உலகம். சிறுவர்களின் வீர தீரச் செயல்கள் கொண்ட புத்தகங்கள் அவனுக்குப் பிடிக்கும், அதுவும், இந்தப் புத்தகங்கள் படக்கதைகளாக இருந்துவிட்டால், சாப்பாடு, தூக்கம் எல்லாமே மறந்துவிடும். அவனுக்குப் பசி, பசி, அகோரப் பசி, பகாசுர அறிவுப் பசி. வீட்டில் இருந்த சிறுவர் புத்தகங்கள் அத்தனையையும் படித்து முடித்தான். உறவினர்கள், குடும்ப நண்பர்கள் வீடுகள் மீது படையெடுப்பு. அவற்றையும் கரைத்துக் குடித்தான். அப்புறம், ஒவ்வொரு வெள்ளிக்கிழமைக்காகக் காத்திருக்கத் தொடங்கினான. அன்றுதான், இங்கிலாந்திலிருந்து கப்பல்கள் வரும். அவை சிறுவர் புத்தகங்கள் தாங்கிவரும்.

நூல் படிப்பு அதிகச் செலவாகும் பழக்கமாகிக் கொண்டிருந்தது. குடும்பத்தார் ராஃபிள்ஸ் நூலகத்துக்குக் கை காட்டினார்கள். அங்கே ஏராளமான, வகை வகையான புத்தகங்கள் இருந்தன. லீ வயதுச் சிறுவர்கள் பெரும்பாலானோர் துப்பறியும் கதைகள் படித்தார்கள். ஆனால், லீ மனதைக் கவர்ந்தவை, வீர தீர சாகசச் செயல்கள்.

லீ வயது ஆறு. நல்ல பழக்கங்கள் கொண்ட சூட்டிகையான சிறுவன். ஆனால், சாது இல்லை. வால் பையன். எப்போதும் விஷமம் செய்து கொண்டேயிருப்பான். இவனுக்கு எப்படிக் கடிவாளம் போடலாம்? குடும்பம் சிந்தித்தது.         

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com