மைசூரின் புலி

"நூறாண்டுகள் நரியைப்போல வாழ்வதை விட ஒரே ஒரு நாள் புலியைப் போல வாழ்வதே சிறப்பு".

"நூறாண்டுகள் நரியைப்போல வாழ்வதை விட ஒரே ஒரு நாள் புலியைப் போல வாழ்வதே சிறப்பு”.

இப்படிச் சொன்னதுகூட ஒரு புலிதான். அது மைசூரை ஆண்ட புலி. ஒரு வெள்ளிக்கிழமையன்று பிறந்தது அந்தப் புலிக்குட்டி (நவம்பர் 10, 1750 / துல்ஹஜ் பிறை 10, ஹிஜ்ரி 1163). ஆமாம். நீங்கள் நினைத்தது சரிதான். திப்பு சுல்தான் என்ற புலியைப் பற்றித்தான் பேச இருக்கிறேன்.

திப்பு சுல்தான் ஒரு யுத்தமேதை. இதுதான் நாம் அவரைப்பற்றித் தெரிந்துகொள்ளவேண்டிய முதல் விஷயமாகும். ஆம். ஆங்கிலேயரின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர் அவர். திப்பு என்றாலே அவர்களுக்கு சிம்மசொப்பனம். ஜாதி மத வித்தியாசம் பார்க்காத நீதிமானாகவும், நல்ல முஸ்லிமாகவும், பன்மொழி வித்தகராகவும், கவிஞராகவும், கொடைவள்ளலாகவும், 80,000 சதுரமைல்களுக்கு மேல் வியாபித்திருந்த மைசூர் ராஜ்ஜியத்தின் மன்னராகவும் இருந்தவர் திப்பு!

திப்பு சுல்தான்

திப்புவின் கொடியில் மட்டுமல்ல, அவரது அரண்மனையில், வாள்களில், துப்பாக்கிகளில், பீரங்கிகளில் எனப் பல ஆயுதங்களிலும், பொருள்களிலும் புலியின் தலை பொறிக்கப்பட்டிருந்தது. வெள்ளைக்காரன் மீது பாய்ந்து புலி கடிப்பதைப் போன்ற தானியங்கி யந்திரம் ஒன்றை ஃப்ரெஞ்ச் பொறியியலாளர் ஒருவரை வைத்துத் திப்பு உருவாக்கினார். ’திப்புவின் புலி’ என்றறியப்பட்ட அந்த பொம்மை இன்றும் லண்டனில் உள்ள விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் ஒரு ஃப்ரெஞ்சு நண்பரோடு காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று புலியொன்று பாய்ந்து வந்தது. அப்போது திப்புவின் துப்பாக்கி வேலை செய்யவில்லை. புலி வந்த வேகத்தில் திப்புவின் கத்தியும் கீழே விழுந்துவிட்டது. ஆனால் மனம் தளராமல் அதை மீண்டும் எடுத்து அந்தக் கத்தியாலேயே புலியை திப்பு குத்திக் கொன்றார். அன்றிலிருந்து அவர் ’மைசூரின் புலி’ என்று அறியப்பட்டார்.

இந்த நிகழ்ச்சி நடந்தது என்றும் நடக்கவில்லை என்றும் இரண்டுவிதமான கருத்துக்களை வரலாற்று ஆசிரியர்கள் முன்வைக்கின்றனர். ஆனால் திப்புவின் மனதில் ஒரு புலி இருந்தது நிச்சயம். அது எப்போதுமே இந்தியாவை ஆள நினைத்த பரங்கியர்களை நோக்கியே பாய்ந்தது என்பதும் உண்மை.

திப்பு சுல்தானின் வரலாறு இந்திய விடுதலைப் போரோடு நெருங்கிய தொடர்புள்ளது. அது மட்டுமின்றி, திப்புவின் ஆட்சிமுறையிலும் நமக்கான செய்திகள் பல உள்ளன. குறிப்பாக குற்றம் செய்தவர்களுக்கு திப்பு கொடுத்த தண்டனை பற்றிச்சொல்லவேண்டும். அது ரொம்ப சுவாரஸ்யமான வரலாற்று வினோதம் என்றுகூடச் சொல்லுவேன்.

1857ல் நடந்த சிப்பாய்க்கலகத்தைத்தான் விடுதலைக்கான முதல் யுத்தம் என்று நாம் நம்பிக்கொண்டும், சொல்லிக்கொண்டும் இருக்கிறோம். ஆனால் அதற்கு அரை நூற்றாண்டுக்கு முன்னரே ஹைதர் அலியும், திப்புசுல்தானும் இந்திய விடுதலைப் போரைத் துவக்கிவிட்டனர். ஆங்கிலேயே காலனியச் செயல்பாடுகளுக்கு எதிராக வாளேந்திப் போரிட்டு, தாய்நாட்டை அந்நியர்களிடமிருந்து காப்பாற்ற உயிரையும் கொடுத்தவர்கள் அவர்கள்.

மராட்டிய பேஷ்வாக்களையும் ஹைதராபாத் நிஜாம்களையும் அவ்வப்போது ஆங்கிலேயர் பகடைக் காய்களாக உருட்டி விளையாடினர். கம்பெனிக்காரர்கள் வியாபாரம் செய்ய வந்தவர்கள், தங்களுக்கு அவ்வப்போது வேண்டிய அளவு ‘கொடுத்து உதவுபவர்கள்’ என்பதாகவே நிஜாம்களும் பேஷ்வாக்களும் ஆங்கிலேயரை நம்பி ஏமாந்து, தாய்நாட்டுக்கு துரோகம் செய்தனர். ஆனால் ஒண்டவந்த வெள்ளைக்காரப் பேய் நாடு பிடிக்கவே வந்துள்ளது என்பதை ஹைதரும் திப்புவும் தெளிவாக உணர்ந்திருந்தனர். அந்த தீர்க்கதரிசனம் நிஜாம்களுக்கும் பேஷ்வாக்களுக்கும் இல்லாமல் போனது துரதிருஷ்டமே.

எழுதப் படிக்கத்தெரியாத ஹைதர் அலி தன் மகனை பன்மொழி அறிஞராக்கினார். உருது, பாரசீகம், அரபி, கன்னடம், ஆங்கிலம், ஃப்ரெஞ்சு ஆகிய மொழிகளில் திப்பு பாண்டித்தியம் பெற்றார்! அதுமட்டுமல்ல. திப்புவுக்கு சின்ன வயதிலேயே ஃப்ரெஞ்ச் ராணுவம் மூலம் போர்ப்பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. நெப்போலியன்கூட திப்புவை சந்திப்பதாக இருந்தது. அது நடந்திருந்தால் இந்தியாவின் வரலாறு வேறு மாதிரி எழுதப்பட்டிருக்கும். ஆனால் அதற்குள் நெப்போலியனின் விதி முடிந்துவிட்டது. ஆங்கிலேயரை எதிர்க்க ஃப்ரெஞ்சுப் படைகளை அடிக்கடி திப்பு பயன்படுத்திக்கொண்டார்.

யுத்த தந்திரங்கள், வியூகம் அமைத்தல், எதிரியின் பலம், பலவீனங்களைத் துல்லியமாக அறிந்து வைத்திருத்தல் போன்றவற்றில் சின்ன வயதிலிருந்தே திப்பு நிபுணராக இருந்தார். முதல் மைசூர்ப்போரில் கலந்துகொண்டு கலோனல் ஸ்மித் என்ற ஆங்கிலேய தளபதியையும் 50,000 பேர் கொண்ட அவனது படையையும் வென்றபோது திப்புவின் வயது பதினைந்து! ஒருநாள் திடீரென திப்பு அதிரடியாக ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த சென்னைக்குள் படைகளுடன் நுழைந்தார். ஆங்கிலேயப் படையினர் பயந்துபோய் ஒரு கப்பலில் ஒளிந்துகொண்டனர். புலியைக் கண்டால் யாருக்குத்தான் கிலி வராது! ஆனால் அப்படி ஒரு உயிரச்சத்தை ஏற்படுத்தியபோது திப்புவுக்கு வயது பதினேழு!


சர் ஹெக்டர் மன்றோ

கலோனல் பெய்லி

கலோனல் ப்ரைத்வெய்ட். இதெல்லாம் என்ன என்கிறீர்களா?

சீறிப்பாயும் திப்புவின் வீரத்தின் முன்னால் பயந்து ஒளிந்துகொண்ட, ஓடிப்போன, தோற்கடிக்கப்பட்ட ஆங்கிலேயத் தளபதிகள் சிலரின் பெயர்கள் இவை!  வீரத்தில் மட்டுமின்றி உணர்ச்சியை எழுப்பவல்ல பேச்சிலும் திப்பு வல்லவராக இருந்தார். அவருடைய பேச்சைக் கேட்ட அவரது படையினர் அவருக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்தனர். மன்னராக மட்டும் இல்லாமல் மக்கள் மனதில் ஒரு நாயகனாகவும் இருந்தார்.

மங்களூர் அமைதி ஒப்பந்தம்


இரண்டாம் மைசூர்ப்போர் முடிவுக்கு வந்தபோது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதில் பொல்லிலூரில் பிரிட்டிஷ்படைக்குப் படுகேவலமான, வரலாறுகாணாத தோல்வியைவழங்கினார் திப்பு! ஆங்கிலேயர் 4000 பேருக்குமேல் இறந்திருந்தனர். இந்தியாவுக்கு வந்த நாளிலிலிருந்து கிழக்கிந்தியக்கம்பனி கண்ட மிகமோசமான தோல்வி அதுதான். இந்திய வரலாற்றில் அந்த ஒப்பந்தம் மதிப்புமிகுந்த ஆவணமாகும். ஏனெனில் ஒப்பந்தத்திலிருந்த பத்து பிரிவுகளும் திப்பு சொல்லச்சொல்ல பிரிட்டிஷாரால் எழுதப்பட்டன! அப்படி நடந்தது அதுவே இறுதிமுறையாகும். ஆங்கிலேயர்களின் உள்ளத்தில் திப்பு ஏற்படுத்திய அச்சத்தையெண்ணி ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படவேண்டும் என்கிறார் வரலாற்று ஆசிரியர் சுனந்தா ரகுநாதன்.

தொலைநோக்குப் பார்வை

போரில் முதன்முதலாக இரும்பு உறையிடப்பட்ட ராக்கட்டுகளை அனுப்பியவர் திப்புதான். 1991ல் திப்பு பற்றிய நினைவுப்பேருரையில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் இதை நினைவுகூர்ந்தார். திப்புவின் ராக்கட்டுகள் ஒவ்வொன்றும் 1000 கஜதூரம் சென்று தாக்கவல்லவையாக இருந்தன. திப்புவின் மேதைமை இப்போது புரிந்திருக்கும். ஸ்ரீரங்கப்பட்டினத்தில் நடந்த இறுதிப்போரில் திப்பு ஏவிய இரண்டு ராக்கட்டுகளை பிரிட்டிஷார் இன்னும் உல்விச் பீரங்கிப்படை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைத்துள்ளனர்.


ஆனால் திப்பு எப்போதுமே யுத்தம் பற்றி மட்டுமே யோசித்துக்கொண்டிருக்கவில்லை. “விவசாயம்தான் நாட்டின் உயிர்நாடி ரத்தம்” என்று 1788-ல் திப்பு அனுப்பிய சுற்றறிக்கையை இன்றும் பார்க்கலாம். மக்களுடைய வாழ்நிலையை உயர்த்துவதற்கு எல்லா முயற்சிகளையும் திப்பு எடுத்தார். விவசாயம், வாணிபம், அணைகட்டுதல், சாலைகள் அமைத்தல், பொதுமக்கள் பயன்பாட்டுக்கான கட்டிடங்கள் கட்டுதல், துறைமுகங்கள் அமைத்தல் என திப்புவின் பணி நீண்டு கொண்டே போனது. இலங்கை, ஆப்கனிஸ்தான், துருக்கி, ஈரான், ஃப்ரான்ஸ் போன்ற நாடுகளுடன் வாணிபத்தையும் அவர் விரிவுபடுத்தினார்.

மைசூரின் பட்டு, சந்தனம், ஏலக்காய், மிளகு, யானைகள், தந்தம் முதலியனவற்றுக்கு மேற்கத்திய சந்தையில் பெரும் கிராக்கி. இவற்றின் வாணிபமும் அதில் கிடைக்கும் லாபமும் அந்நியருக்குக் கிடைத்துவிடக்கூடாது என்பதில் திப்பு மிகவும் உறுதியாகவும் உஷாராகவும் இருந்தார். ஏற்றுமதி இறக்குமதிகள் யாவும் இடைத்தரகர்கள் இல்லாமல் ஸ்ரீரங்கப்பட்டினத்திலிருந்தே நடக்க ஏற்பாடுகள் செய்தார். தனி நாணயங்களும், வங்கி முறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. சிறிய முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் கிடைக்குமாறு அவரது வங்கி அமைப்புகள் செயல்பட்டன. ஒருவகையான கூட்டுறவு வங்கிமுறை அது என்றே சொல்லலாம். 

துப்பாக்கிகள், மஸ்கட்டுகள், பீரங்கிகள், துணி – இப்படி தளவாடங்களும் அன்றாட பயன்பாட்டுக்கான பொருள்களும் தயாரிக்கக்கூடிய பட்டறைகள் தலைநகரில் ஏற்படுத்தப்பட்டன. வியாபாரத்துக்காக என்றும், போருக்காக என்றும் தனித்தனியாக கப்பற்படைகள் அமைக்கப்பட்டன. உள்ளூரில் கிடைக்கும் பொருள்களைக்கொண்டே 100 கப்பல்கள் செய்ய 1793ல் திப்பு ஒரு உத்தரவு போட்டார். 

பட்டு உற்பத்தியிலும் தோட்டக்கலையிலும் திப்புவுக்குக் காதல் என்றே சொல்லலாம். வெளிநாட்டு ஆட்சியாளர்களுக்கு கடிதம் எழுதியபோதெல்லாம் அங்கே கிடைக்கும் புதுவகை விதைகள் மற்றும் தாவரங்களையும் அனுப்புமாறு கேட்டுக்கொள்வார்! மிக அதிகவிலை கொடுப்பவருக்கே நிலம் என்ற நிலையை திப்பு மாற்றினார். உழுபவர்களுக்கு நிலங்கள் இலவசமாகக் கொடுக்கப்பட்டன. கஷ்டமான காலகட்டத்தில் அவர்களுக்கு ‘தகாவி’ எனப்படும் கடன்களும் வழங்கப்பட்டன.
புதுமையான தண்டனை

குற்றவாளிகளுக்கு பலவிதமான தண்டனைகள் காலங்காலமாகக் கொடுக்கப்பட்டு வருகின்றன. அபராதம் கட்டுதல், சிறைத்தண்டனை, சாட்டையடி, தூக்கு தண்டன என. ஆனால் திப்பு ஒரு புதுவித தண்டனையை அறிமுகப்படுத்தினார். உலக வரலாற்றில் அப்படி இதுவரை யாருமே செய்ததில்லை. அது என்ன?

திருடிவிட்டாயா, சரி, நீ இன்ன வீதியில் இத்தனை மரக்கன்றுகளை நடவேண்டும். அவை இந்த அளவு உயரத்துக்கு வளரும்வரை அவைகளை நீரூற்றிப் பராமரித்து வரவேண்டும். இதுதான் தண்டனை! மைசூர் ராஜ்ஜியம் முழுவதும் திப்புவின் தண்டனைகள் வேர் விட்டு, கிளைவிட்டு, இலை விட்டு, பழம் விட்டு, நிழல்விட்டு பரவிக்கிடந்தன! ஆஹா, எவ்வளவு அழகிய தண்டனைகள்! கொடுத்த தண்டனையின் மூலமாகக்கூட நாட்டுக்கு நன்மை விளைய வேண்டும் என்று நினைத்தவன் மேதையல்லவா!

இதுமட்டுமா? மது, விபசாரம், ஒரு பெண் பல ஆண்களை மணப்பது ஆகியவற்றை அவர் தடை செய்தார். கைவிடப்பட்ட சிறுமிகளையும் குழந்தைகளையும் வாங்குவதோ விற்பதோ கூடாது என்றும், திருமணங்களில் அனாவசியமாக ஆடம்பரச் செலவுகள் செய்யக்கூடாது என்றும் உத்தரவுகள் கொடுத்தார். மலபாரில் தாழ்த்தப்பட்ட ஜாதிப்பெண்கள் ஜாக்கெட் அணிந்து மானம் மறைப்பதற்கு அனுமதி இல்லாமலிருந்தது. அவர்களும் மேலாடை அணியவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து, மானம் மரியாதைக்கு ஜாதி மத பேதம் கிடையாதென்ற உண்மையை உணர்த்தினார் திப்பு.

அனுமதி கேட்காமல் ஒரு வியாபாரியின் இடத்திலிருந்து காய்கறிகளைப் பறித்து வந்துவிட்ட தன் மூத்த மகன் ஃபதேஹைதருக்கு தண்டனை கொடுத்தார்! மன்னனின் மகனே என்றாலும் அனுமதி பெறாமல் அடுத்தவர் பொருளில் கைவைக்கும் உரிமை கிடையாது என்பதை அவனுக்கு புரியவைத்தார்.

’ஜாமியல் உமூர்’ என்ற பெயரில் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் ஒரு பல்கலைக்கழகம் தொடங்க ஆசைப்பட்டார். ’ஃபௌஜி அக்பர்’ என்ற பத்திரிக்கையைத் தொடங்கினார். அவருடைய தனிப்பட்ட நூலகத்தில் மட்டும் 2000 கையெழுத்துப் பிரதிகள் இருந்தன. அவற்றில் ஒன்று பேரரசர் அவ்ரங்கசீப் கையால் எழுதப்பட்ட திருக்குர்’ஆனாகும்.

திப்பு எப்போதுமே ஜாதிமதம் பாராமல் அவரவர் திறமைக்கு ஏற்ற பதவிகளை அளித்தார். பூர்ணய்யாவும் கிருஷ்ணாராவும் திவான் என்ற முக்கிய பதவியில் இருந்தனர். காவல் துறையின் ஒற்றர்பிரிவிற்குத் தலைவராக ஷாமாஅய்யங்காரும், வரிவசூல் துறையின் பொருளாளராக சுப்பாராவும் இருந்தனர். அரசுமுறைத் தூதர்களாகச் சென்றவர்களில் அப்பாஜி, சீனிவாசராவ் முக்கியமானவர்கள்.


திப்புவின் கோயில் கொடைகள்

ஃப்ரெஞ்சுக்காரர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க மைசூரில் முதன் முதலாக தேவாலயம் ஒன்றைக் கட்டிக்கொடுத்த முஸ்லிம் ஆட்சியாளர் திப்புதான். அவரது நன்கொடைகளையும் பரிசுகளையும் பெற்றுகொண்ட கோவில்கள் அனேகம். அவற்றில் சிலதைப்பற்றி மட்டும் இங்கே பார்க்கலாம். 

திப்புவின் ஆதரவால் சீர்பெற்று விளங்கிய திருக்கோயில்களில் முதன்மையானது ஸ்ரீரங்கநாதர் கோயிலாகும். திப்புவின் மாளிகையான பட்டன் மஹாலுக்கும் இந்தக் கோயிலுக்கும் இடையில் கூப்பிடு தூரம்தான். 200அடி தூரம்கூட இருக்காது. அக்கோயிலில், திப்புவின் பெயரைத் தாங்கிய, பிரசாதம் வைக்கும் வெள்ளிப் பாத்திரங்கள் ஏழும், பல தீபத் தட்டுக்களும், ஊதுவத்தி நிலைப்புத் தண்டுகளும் இருப்பதை இன்றும் காணலாம். (மைசூர் ஆர்க்கியலாஜிகல் சர்வே, அறிக்கை, 1912. பக்கம் 2). ஒருமுறை இந்தக் கோயிலில் மணி அடிக்கவில்லை என்பதற்காக, அதன் தர்மகர்த்தாவை திப்பு கடிந்துகொண்டார்! ஒரு முஸ்லிம் ஆட்சியில், இந்துக் கோயில் சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துவிடக் கூடாது என்பதில் திப்பு கவனமாக இருந்தார். (திப்புவின் அரசியல், பக்கம் 203).

நஞ்சன் கூடு என்ற சிவத்தலத்தில் இருந்த திருநஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்துக்கு திப்பு வழங்கிய மரகத லிங்கம் முக்கியமானது. பளிச்சிடும் பச்சைக் கல்லால் ஆன அந்த லிங்கத்துக்கு "பாதுஷா லிங்கம்' என்றே பெயரிடப்பட்டுள்ளது! (மைசூர் ஆர்க்கியலாஜிகல் சர்வே, 1940, பக்கம் 23).

மற்ற மதத்தவரிடம் இவ்வளவு அன்பு காட்டிய திப்பு, தனது மார்க்கத்தையும் விட்டுவிட வில்லை. முஸ்லிம்கள் குடியிருக்கும் ஒவ்வொரு ஊரிலும் ஒரு பள்ளிவாசலைக் கட்டி, முறைப்படி தொழுகை நடைபெற ஏற்பாடுகள் செய்தார்.

உயர்ந்த பதவிகள் கொடுக்கப்பட்டுக் கூடவே இருந்த பூர்ணய்யா போன்றவர்கள் செய்த துரோகத்தால் நாலா பக்கமும் ஆங்கிலேயப்படைகள் ஸ்ரீரங்கப்பட்டிணக் கோட்டையை சுற்றி வளைத்தன. துப்பாக்கிகளுடன் எதிரிகள் உள்ளே புகுந்தார்கள். உயிர் போவது நிச்சயம் என்று தெரிந்துவிட்டது. அப்போது ஒரு அதிகாரி கூறினார். “மஹாராஜா, வேறு வழியில்லை. நீங்கள் எதிரிகளிடம் சரணடைந்து விடுங்கள்”.


ஆனால் அதற்கு அந்த மாமன்னன் திப்பு சுல்தான் சொன்ன பதில்தான் இட்டுரையின் தொடக்கத்தில் உள்ளது. இப்போது சொல்லுங்கள், திப்புவை மைசூரின் புலி என்றது சரிதானே? இந்திய நாட்டின் முதல் விடுதலைப்புலி என்றுகூடச்சொல்லலாம் அல்லவா?

கட்டுரை எழுத உதவியவை:

1. Sultan Tippu. Fazl Ahmed. Shaikh Muhammad Ashraf, Lahore: 1960

2. Tipu Sultan. B. Sheik Ali. National Book Trust India, New Delhi: 1992

3. Tipu Sultan. Sunandha Ragunathan. Prodigy.Chennai: 2009.

4. திப்புவின் அரசியல். சுஜாவுதீன் சர்க்கார். சர்க்கார் நூலக வரிசை, சென்னை: 1983

5. மைசூர் ஆர்க்கியலாஜிகல் சர்வே

6. இணைய தளங்கள்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com