2. அழுகையின் ரகசியம்

அழுகை ஒரு உரம் என்று பார்த்தோம். மரத்திற்கு உரம் மண். மரம் வைத்தவன் தண்ணீர் விடுவான் என்பார்கள்.
2. அழுகையின் ரகசியம்

அழுகை ஒரு உரம் என்று பார்த்தோம்.

மரத்திற்கு உரம் மண். மரம் வைத்தவன் தண்ணீர் விடுவான் என்பார்கள்.

எனது நண்பர் ஒருவர் தன் வீட்டுத் தோட்டத்தில் பல்வேறு மரம் செடி கொடிகள் வைத்திருக்கிறார். தோட்டக்காரனை  வைத்துக் கொள்வதில்லை. அவரே குனிந்து நின்று பாத்தி வெட்டுவார். நீர் பாய்ச்சுவார்.  ரசாயனமற்ற உரங்களை வாங்கி வந்து போடுவார். கிணற்று நீரும் போர் தண்ணீரையும் வைத்துக்  கொண்டு மாறி மாறி நீர்  பாய்ச்சுவார். அவர் மழையை  எதிர்பார்ப்பதில்லை. வானம் பார்த்த பூமி அல்ல,   மண்ணைப் பார்த்த பூமி, அவரது தோட்டம்!

ஆம் . பூமிக்குள் நீர் வற்றினால்தான் உண்டு.

நான் வெளியூர்களுக்கு குறிப்பாக  மலைப் பிரதேசங்களுக்குச் செல்லும் போது பசுமை கொழிக்கும்  பயிர்களைப் பார்த்து வியப்பதுண்டு. அத்தனைக்கும் நண்பரைப் போலக் கிணறு வெட்டித் தண்ணீர் பாய்ச்சி முடியுமா?

சுமார் இருபது ஆண்டுகளுக்குமுன்னால்

மதுரை அண்ணா நகர்ப் பகுதியில் உள்ள ஒரு ஒரு உறவினர் வீட்டுக்கு  நள்ளிரவில் ஆட்டோ அமர்த்திக் கொண்டுச் செல்ல நேரிட்டது.

அன்றைய தினம் மின்தடையால் தெருவிளக்குகளும் இல்லை!

சுமார் பத்துப் பதினைந்து தெரு நாய்கள் குரைத்துக் கொண்டே ஆட்டோவைத் துரத்திக் கொண்டு பின்னால் ஓடி வந்தன! 

நான் மட்டும் கால்நடையாகப் போயிருந்தால் அந்தக் கால்நடைகளே என்னை நார் நாராகக் கிழித்துப் போட்டிருக்கும்!

ஆட்டோக்காரர் படுவேகமாக ஆட்டோவைச் செலுத்தினார். எதற்கும் கால்களை சீட்டுக்கு  மேல தூக்கி வைத்துக் கொள்ளுங்கள் என்று எச்சரித்தார்.

நல்லவேளை! ஆட்டோவில் சென்றதால் பிழைத்துக்கொண்டேன்!

நாய்களிடமிருந்து தப்பித்தால் போதும் என்று அந்த உறவினர் வீட்டுக்குப்  போய்ச் சேர்ந்தேன்.  ஆட்டோவை விட்டு இறங்கியதுமே காலிங் பெல்லை வேகமாக  அழுத்தினேன்.

எழுந்திருக்கவில்லை. ஆட்டோக்காரர் தன்னை அனுப்புமாறு நச்சரித்தார். கொஞ்சம் பொறப்பா, ஒரு வேளை கதவு திறக்கப்படாவிட்டால் இதே ஆட்டோவிலேயே திரும்ப நேரிடுமே என்றேன்.

இம்முறை நண்பரது இரும்பு கேட்டை பிடித்து சற்றே உலுக்கிய போது உள்ளிருந்து ஒரு நாய் கர்ஜித்துக் கொண்டே நான்கு கால் பாய்ச்சலில் வந்து இரண்டு கால்களையும் இரும்பு கேட்டின் மீது தூக்கி வைத்துக் கொண்டு தாவிக் குதிக்க வழி தேடியது! அந்த ஒற்றை நாயின் உரத்த சத்தம் தெரு  நாய்களின் குரைப்புகளை  விஞ்சி எதிரொலித்தது.

நண்பர் நாய்க்கு நல்ல ஊட்டச் சத்துக்களைப் போட்டு வளர்த்திருக்கும் பக்குவம் அதில் தெரிந்தது.

அப்போதுதான் இன்னொரு விஷயத்தையும் உணர்ந்தேன்.

தெரு நாய்களுக்கு உரிமையாளார்கள் யார்? தெரு நாய்களுக்கு அந்தத் தெருதான் பங்களா. அங்கே வந்து விழும் குப்பைகள்தான் அவற்றுக்குத் தீனி.

பங்களா நாய்களின் பணக்கார முதலாளிகள் நாய்களுக்கு உணவு படைப்பதற்கென்றே  வேலைக்கார மனிதர்களை அமர்த்தியிருப்பார்கள்.

நாய்களின் வயிற்றை நிரப்பித் தங்கள் வயிற்றை நிரப்பும் வறியவர்கள் அவர்கள்.

பராமரிப்பு இல்லாத தெரு நாய்கள் உணவு கிடைக்காமல் செத்துப் போவதில்லையே!

அப்போதும் எனக்கு அந்தப் பழமொழிதான் நினைவுக்கு வந்தது.

மரம் வைத்தவன் தண்ணீர் விடமாட்டானா?

அதற்குள் நண்பரே வந்துவிட்டார். கேட்டைத் திறந்ததுமே என்னைக் கட்டி அணைத்துக் கொண்டார்.

என் மேல் இத்தனை அன்பா? இந்த அர்த்த ஜாமத்தில்கூட இப்படிக் கட்டிப் பிடிக்கிறாயே நண்பா என்றேன்.

அதற்கில்லை நண்பா, நான் கொஞ்சம் விலகினாலும் என்னோட மேன் கில்லர் உன்னைக் கடித்துக் குதறி விடும் என்றார்!

ஐயகோ!

அப்போதுதான் நண்பர் எப்போதோ சொன்ன  விஷயம் நினைவுக்கு வந்தது!

நண்பர் வளர்க்கும் நாய் மேன் கில்லர் (man killer) என்ற இனத்தைச் சேர்ந்தது.

மனிதன் சிக்கினால் கடிக்காது. கொன்றுவிடும்!

இனித் தப்பிக்க முடியாது. பிழைத்தாலும் சரி, போனாலும் சரி என்று மரணத்துககுத் துணிந்தேன். கண்களை இறுக மூடிக் கொண்டு நண்பரின் தோளோடு தோளாகச் சாய்ந்தபடி வீட்டுக்குள் போய் நுழைந்து கொண்டேன்.

குடும்பத் தலைவனுக்கு அவனது மனைவி சமைத்து உணவிடுகிறாள். அவர்கள் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு வேலைக்காரர்கள் உணவு போடுகிறார்கள். ஆனால் தெருவோரத்திலும், கோயில் வாசல்களிலும் கிடக்கும் பரதேசிகளுக்கு எந்தப் பெண்டாட்டி சமைத்துப் போடுகிறாள்?

பந்தங்களை உதறிவிட்ட துறவிகளும் கூட உண்டு உயிர் பிழைத்து வாழ்வதில்லையா?

எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் உணவு படைக்கிறான் இறைவன்!

மரங்களுக்கோ,  புழு பூச்சிகளுக்கோ, துறவிகளுக்கோ,  தெரு நாய்களுக்கோ, எவரும் தேடிச் சென்று  உணவு படைப்பதில்லையே.

மழையே இல்லாது போனாலும் பயிர்களுக்கு மண்ணுக்குள் இருந்து ஒரு மழையைப் பொழிவிக்கிறான் இறைவன். 

நம் புறக் கண்களுக்குத் தெரியாது. 

மருத்துவச் சிகிச்சை இன்றியே நோய்களைக் குணமாக்கும் இறைவன் உயிர்களுக்கு  உணவும் நீரும் தரமாட்டானா என்ன!

ஒன்றை மனதில் கொள்ளுங்கள்.

யாரும் யாரையும் நம்பிப் பிறக்கவில்லை!

பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுமே இறைவனால்தான் பராமரிக்கப்படுகின்றன.

அம்மாவாக, அப்பாவாக, கணவனாக, மனைவியாக உணவு படைப்பான்.

அன்னக் காவடியானாலும் கூடப் பிச்சையிட்டு உணவு படைப்பான்.

யாரையும் அவன் கைவிடுவதில்லை.

ஆகையால்,

பூமியில் மானிடராய்ப் பிறத்தல் மட்டும் அரிதல்ல, ஒரு புல்லாகப் பூண்டாகவோ, புழுவாகவோ,  பறவையாகவோ,  மிருகமாகவோ எதுவாகப் பிறந்தாலும் அது ஒரு அரிய பிறவிதான்.

இந்த உண்மை இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும்.

இறைவனே இல்லை என்று சொல்வோருக்கு எப்படித் தெரியும்?

ஆனால்  இறைவனின் பராமரிப்புக்குத் தக்கவனாக மனிதனிடம் ஒரு இருந்தாக வேண்டும்.

என்ன தகுதி அது?

அழுகைதான் அந்தத் தகுதி!

“நீர் இன்றி அமையாது உலகு” என்றார் வள்ளுவர்.

கண்.. .. ணீர் இன்றி அமையாது உய்வு!

கண்ணீருக்கு அத்தனை மகிமை உண்டு.

கண்ணீரில் இரண்டு வகை உண்டு.

ஒன்று சந்தோஷத்தில் வருவது.

இன்னொன்று துக்கத்தில் வருவது.

இந்தச் சலவைச் சோப்பு அழுக்கை நன்றாக அகற்றுமா? என்று  கடைக்காரரிடம் கேட்கிறோம். ஆனால் அழுக்குப் போக்கும் அடிப்படை நீரைப் பற்றி யாருமே கேட்பதில்லை!

 நீர் இல்லை என்றால் எந்தச் சோப்புக்கும் அழுக்குப் போகாது.

சோப்பே இல்லாது போனாலும் உவர் மண்ணை நீரில் போட்டு கசக்கிப் பிழிந்தால்  அதுவே வாஷிங் பவுடராகி ஆடையின் அழுக்குகளை  அகற்றிவிடும்!

சோகம் மனதின் அழுக்கு.

சோகத்தில் விடும் கண்ணீர் சோப்பு நீர்போல மனக் கவலைகளைப் போக்கிவிடும்!

சந்தோஷத்தில் கண்ணீர் விட்டு அழுதால் இன்ப அதிர்ச்சிகளைப் போக்கிவிடும்.

அழுவதால் மனம் பாரம் குறைகிறது.

மனம் லேசாகிறது.

மனம் லேசானால் மறைந்து போன மகிழ்ச்சிகள் மீண்டும் தலைதூக்குகின்றன.  

ஈருடல் ஓருயிராக ஒரு தம்பதிகள் வாழ்ந்து வந்தார்கள்.

குடும்பங்களை எதிர்த்துக்கொண்டு காதல் மணம் புரிந்த கிராமத் தம்பதிகள் அவர்கள்.  பிள்ளைகள்  இல்லை!

இருவருக்கும் சின்ன வயதுதான்.

உனக்கு நான் பிள்ளை, எனக்கு நீ பிள்ளை என்று வாழ்ந்து வந்த காலத்தில் அந்தக் கணவரை விதி பறித்துக் கொண்டுவிட்டது!

கணவன் இறந்த பொழுதிலிருந்து அந்த மனைவி ஒரு பொட்டுத் தண்ணீர் கூடக் குடிக்கவில்லை.

அக்கம்பக்கத்தினர் எவ்வளோ முயற்சித்தும் அவள் மறுத்துவிட்டாள். தானும் இறுதி ஊர்வலத்தில் அவரோடு போயாக வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு பட்டினி கிடந்தாள்.

கணவனின் இறுதி ஊர்வலம் புறப்பட்டபோது அந்த மனைவி ஓலமிட்டு அலறியபடி மூர்ச்சையாகிவிட்டாள்!

ஊர்வலத்தை நிறுத்துங்கள் என்றார்கள் பெண்மணிகள்.

காலையிலிருந்தே இநதப் பொண்ணு கூடவே செத்துப் போகணும்னு புலம்பிட்டு இருந்துச்சு, மூச்சு இருக்கான்னு பார்த்துட்டு நகருங்க என்றார்கள்.

தூக்கிய பிணத்தை நிறுத்தக் கூடாதே!

சுமந்தவர்கள் தள்ளாடினார்கள்; ஊர் மக்களோ அல்லாடினார்கள்.

தலைவிரி கோலமாய்க் கிடந்தவளின் முகத்தில் முகத்தில் தண்ணீரை அடித்தார்கள்.

சற்றும் அசைந்து கொடுக்கவில்லை!

கூந்தலை விலக்கி அவளது மூக்கில் தனது விரலை வைத்துப் பார்த்தாள்  ஒரு மூதாட்டி.

மூச்சு ஓடுது. இப்ப நகருங்க என்று பச்சைக்கொடி காட்டவும்தான் பயணம் தொடந்தது.

அவள் மயக்கம் தெளிந்து அமர்ந்தபோது சுற்றத்தார் ஆறுதல் கூறி அரவணைத்தார்கள்.

கசப்பு உச்சத்தில் இனிப்பாக மாறிவிடும்!

அந்தப் பெண்மணியின் சோகங்களை அக்கம்பக்கத்தார்  காட்டிய அன்பு தலை கீழாக மாற்றியது.

சில தினங்களாக முகத்தைத் தூக்கியே வைத்துக் கொண்டிருந்தவள் துக்கம் விசாரிக்க வந்த பள்ளித் தோழியைப் பார்த்ததுமே தன்னையும் மறந்து சிரித்தாள்!

காரணம் அவள் எப்போதுமே இவளைச் சிரிக்க வைத்துக் கொண்டே இருந்தவள்!

தோழியைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதவள், கரகரத்தக் குரலோடு சோகத்தைப் பகிர்ந்துவிட்டு தோழியை உபசரிக்கும் முடிவோடு அள்ளி முடிந்துகொண்டு  எழுந்து நின்றாள் பாருங்கள்!

அப்போதுதான்  மாற ஆரம்பித்தாள்.

வேலைக்குப் போக ஆரம்பித்து அந்தக்  கடமையிலேயேத் தன் கவலைகளைக் கரைத்துக் கொண்டாள்.

நாட்கள் செல்லச் செல்ல கணவனை ஒரு வகையில் மறந்தே போனாள் அந்த மனைவி.

எப்போதோ ஓய்ந்திருக்கும்போது கணவனை எண்ணிக் கண்ணீர் வடிப்பாள்.

காற்றில் காய்ந்துபோகும் கண்ணீர் போல அவனது நினைவுகளும் அப்போதே மறைந்து போயின.

கண்ணீர் என்பது வெறும் உணர்ச்சிகளின்  வெளிப்பாடு மட்டுமல்ல. அது ஒரு அக உலகப் பயணம். இழந்தவர்களை எண்ணி அழும்போது நிஜமாகவே நம்மோடு அவர்களைப் பிணைத்துவிடும்!

இறந்தோரை மட்டுமல்ல, இருப்போரையும் அந்தக் கண்ணீர்தான் இணை பிரியாமல் வைத்திருக்கிறது.

இறந்தோரை அருவமாகவும், இருப்போரை உருவமாகவும் அன்பால் பிணைப்பது கண்ணீர் ஒன்றே!

ஞானம் தேடுவோம்…

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com