5. மதமா மனமா?

மனிதன் வினைகளை அனுபவிக்கப் பிறந்திருக்கிறான் என்று சொன்னால் ஆட்சேபிப்பவர்கள் இன்றைக்கும் உண்டு.
5. மதமா மனமா?

மனிதன் வினைகளை அனுபவிக்கப் பிறந்திருக்கிறான் என்று சொன்னால் ஆட்சேபிப்பவர்கள் இன்றைக்கும் உண்டு.

அவர்கள் யார்?

அவர்களை அடையாளம் கண்டு கொள்வது எளிது.

கண்ணுக்கு முன்னால் நிதர்சனமாகக் காணப்படும் உலகம்தான் உலகம். பிறவிதான் பிறவி. வாழ்க்கைதான் வாழ்க்கை. இதற்கு முன்னால் ஒன்றும் இதற்குப் பின்னால்  ஒன்றுமாக இருப்பதற்குச் சாத்தியம் இல்லை. இருக்கும் வரை இந்த உலக இன்பங்களை அனுபவிப்பதுதான் புத்திசாலித்தனம் என்ற லட்சியவாதிகள் அவர்கள்.  கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

தங்கள் தேவைக்காக எதையும் செய்யத் துணிவார்கள்.

அவர்களுக்கு மனசாட்சி இல்லையா  என்று கேட்டார்  நண்பர் சபீர்.

அவர்கள் எல்லாம் தமது ஆசைகள்தான் தங்களது மனசாட்சி என்றிருப்பார்கள். அவர்களது ஆசை என்ற அந்த மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்ய மாட்டார்கள். அது மட்டுமல்ல, அந்த மனசாட்சிக்காக எதையும்கூடச் செய்யத் துணிவார்கள் என்றேன். 

ஒன்றும் புரியவில்லையே என்று தொழுகைக்கு அணியும் தொப்பியைச் சரி செய்துகொண்டே கேட்டார் சபீர்.

சுயநலமே அவர்களது மனசாட்சி. அந்த சுயநலத்திற்கு விரோதமாக எதையும் செய்யமாட்டார்கள்.

அதாவது மற்றவர்களுக்கு உதவுவது பொதுநலம். அதை தன்னலமாகிய  மனசாட்சிக்கு விரோதமாகச் செய்யமாட்டார்கள்.

அதுபோல, ‘சுயநலம்’ என்ற மனசாட்சிக்காக எதையும் செய்வார்கள். பிறரை வஞ்சிப்பது ஏமாற்றுவது, பிறருக்காகக் குழி தோண்டுவது  உட்பட  பிறரை அழிப்பது வரை எதையும் செய்வார்கள். குற்றவாளிகள் பெருகி வருதற்குக் காரணம் இப்போது புரிகிறதா சபீர் என்றதும் “ஓஹோ’ என்று மேலும் கீழுமாகத் தலையாட்டினார்.

‘தன்னை அறியத் தனக்கு ஒரு கேடில்லை’ என்ற திருமூலரின் திருமந்திரப் பாடலைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா சபீர்?

எனக்கு குர்ஆனைத்  தவிர வேறு எதுவும் தெரியாது என்றார் சபீர்.

பிறருக்குத் தீமை செய்தால் தீமைகள்தான் வந்து சேரும் என்பது எல்லா மதங்களிலும் உள்ள மையக் கருத்துதான்.  அதில் உங்களுக்கு உடன்பாடு உண்டுதானே?

சந்தேகமே இல்லை. நல்லதோ கெட்டதோ, நாம் செய்வதுதான் நமக்குத் திரும்பி வரும் என்றார் நண்பர் சபீர்.

பிறகு ஏன் தயங்காமல் பிறருக்குத் தீங்கு செய்கிறார்கள், அதை யோசித்தீர்களா?  என்றேன்.

நல்லதுக்குத்தான் காலம் இல்லையே, என்ன செய்வது என்றார்.

நல்லதுக்குக் காலம் உண்டா இல்லையா என்பதைப் பின்னால் பார்ப்போம். இப்போது நான் கேட்கும் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் சபீர்.

கேளுங்கள்.

மனிதனைப் பக்குவப்படுத்துவதில் மனதிற்கு முதலிடமா, மதத்திற்கு முதலிடமா? மதமாகத்தான் இருக்க முடியும். மதத்தால் மனிதன் பக்குவப்பட்டிருந்தால் எதற்கு இத்தனை வன்முறைகள் நடக்கின்றன?

அதுதான் எனக்கும் புரியவில்லை என்று முகத்தைச் சுளித்தார் சபீர்.

மதம் மேலோட்டமாகத்தான்  மனிதனைப் பக்குவப்படுத்துகிறது. அது ஆழமாகச் சென்று மனிதனைப் பக்குவப்படுத்துவதில்லை. பக்குவப்படுத்தவும் முடியாது.

ஏன் முடியாது?

மதம் கடல் மட்டம் போன்றது. பரந்து விரிந்து உபதேசம் பேசும். ஆனால் ஆழ்மனம் என்ற அடிமட்டத்திற்குள் எவ்வளவோ இருக்கின்றன. அங்கே அவரவர் அனுபவம்தான் பேசும்.

மதம் என்பது மரம் என்றால் மனம் என்பது வேர். மதத்திற்கு அடிப்படை மனம்தான். மதத்தைத் தோற்றுவித்தது மனம் அன்றோ?

‘மனம் அது செம்மையானால் மந்திரம் தேவை இல்லை’ என்றார் அகத்தியர். மனம் அது செம்மையானால் மதமும் தேவையில்லை என்பது என் கருத்து. வேர் உறுதியில்லை என்றால் மரமே சாய்ந்துவிடுமே!

மனம் பக்குவப்படவில்லை என்றால் அந்த மதத்தால் எவருக்குமே பயன் இல்லையே சபீர்!

வேரைக்  கொண்டுதானே மரமே நிற்கிறது.

மனதைக் கொண்டுதான் மதமும் நிற்கிறது.

அப்படி என்றால் மதமே வேண்டாம் என்கிறீர்களா? மதங்கள் இல்லாவிட்டால் நீதி நெறிமுறை, தர்மங்கள் யாவுமே சீர்கெட்டுப் போய்விடுமே?

மதம் என்பது கடவுளின் பெயரால் மக்களை ஒருமுகப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டது. கடவுளை அறிந்தவர்கள் தங்களைப் போல எல்லோருமே அறிய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் உருவாக்கியவைதான் மதங்கள். தனிப்பட்ட இறை மனிதர்கள் ஏற்படுத்திய பக்தி இயக்கமே பின்னாட்களில் மதங்களாக்கப்பட்டு அவர்கள் பெயரால் கடைப்பிடிக்கப்படுகின்றன.

மனிதன் ஏற்படுத்தியது மதம் என்றாலும், அந்த மதக் கொள்கையால் மட்டும் மனிதனைக் கடவுள் மனிதனாக மாற்ற முடியாது. மதநடவடிக்கைகள் யாவும் மனிதனை ஒழுங்குபடுத்தும் முயற்சிகள்தான். ஒருவகையில் சிதறிப் போகாமல் ஆடுகளை ஓட்டிச் செல்லும் இடையன் போல மக்களை நல்ல நல்ல நெறிகளின் வழியாக இறை மனிதர்கள் ஓட்டிச் சென்றார்கள். அதனால்தான் ஏசு கிறிஸ்துவை நல்ல மேய்ப்பன் என்றார்கள்.

எல்லோரும் தன்னைப் போல இறை மனிதர்கள் ஆகவேண்டும் என்றே மதத் தலைவர்கள் விரும்பினார்கள். ஆனால் எத்தனை பேர் அப்படி ஆனார்கள், எல்லோரும் அப்படி ஆவதில்லையே

ஏன்? எல்லோருமே கடவுள் மனிதர்களாக ஆக முடியாதா என்று குறுக்கிட்டார் சபீர்.

ஆக முடியும். அதுதான் நம்மைப் போன்றவர்களின் எதிர்பார்ப்பும். அதற்காகத்தான் இந்த மனிதப் பிறப்பையே எடுத்து வந்துள்ளோம். ஆனால் அதைச் சொன்னால் எத்தனை பேர் கேட்கத் தயாராக இருக்கிறார்கள்? அதற்குத் தயாராக இருந்தால் வினைப் பயன்களையும் ஒத்துக் கொண்டிருப்பார்களே!

முன்வினை என்பதெல்லாம் ஊரை ஏமாற்றும் கட்டுக் கதைகள்  என்பவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்களே! உலக சுகபோகங்களை எல்லாம் தங்களுக்கே சொந்தமாக்கிவிட வேண்டும் என்பதே அவர்களது ஒரே  வேட்கை!

அவர்களிடத்தில் போய்க் கடவுளைப் பற்றி எல்லாம் பேச முடியுமா? ஆத்திகம் என்பது உலக இன்பங்களை அனுபவிக்கவிடாமல்  தடுக்கும் அடைப்புகள் என்பார்கள்.

ஆமாம், அப்படிப்பட்டவர்கள்தானே இன்றைக்குச் சுகபோகமாக வாழ்கிறார்கள். அவர்களைப் பார்க்கும்போது நமக்கும் கடவுள் இல்லை என்றுதானே எண்ணத் தோன்றுகிறது என்றார் சபீர்.

நான் வாயடைத்துப் போனேன்!

இருவரும் சற்று நேரம் மவுனம் சாதித்தோம்.

கடவுள் உண்டு. அவன் எப்படிப்பட்டவன் என்ற விளக்கமெல்லாம் அளித்துக் கடவுளை உண்டாக்கியவன் மனிதன்தான்.

பலமாகக் கைதட்டினார் சபீர்.

முழுதாய் கேட்டுவிட்டுக் கைதட்டுங்கள்.

அப்படிப்பட்ட  மனிதனையே உண்டாக்கியது கடவுள்தான் இல்லையா?

என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? என்று அதிர்ந்து போனார்.

ஆமாம் சபீர். ஒவ்வொரு மதத் தலைவர்களும் தன்னைப் படைத்த கடவுளைத் தேடித் தேடித்தானே தங்களுக்குள் கண்டு கொண்டார்கள்.  தேடியவர்களுக்குத்தான் கடவுளும் காட்சியளித்தார். அதைத்தான் மற்றவர்களுக்கும் எடுத்துச் சொன்னார்கள். 

தனக்குள்ளே கடவுளைத் தேடும் உணர்வுகளைத் தூண்டிவிட வந்தவைதான் மதங்கள். கோயில்களைக் கட்டி புறவழிபாட்டின் மூலமாக பக்தி மார்க்கத்தை பரப்பினார்கள். மொத்தமாக எல்லோருக்கும் கடவுள் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவை மதங்கள், இல்லை என்று சொல்லவில்லை.

ஆனால் பூஜை, புனஸ்காரங்கள், விழா, வழிபாடுகளால் மட்டும் தனி மனிதனுக்குள் கடவுள் உணர்வுகளை உண்டாக்கிவிட முடியாது. அது, தானே தனக்குள் தவமிருந்து  கண்டறிய வேண்டிய மிகப் பெரிய விஷயம்.

எதற்காக இத்தனைப் பாடுகள். பேசாமல் அந்தக் கடவுளே  நேரடியாகத் தோன்றிவிட்டால்தான் என்ன? என்றார் சபீர்.

கடவுள் எங்கும், எதிலும், எப்போதும் தோன்றிக் கொண்டேதான்  இருக்கிறான். மனிதன்தான் கண்டும் காணாதவனாக இருக்கிறான்.

கடவுளா, எங்குமா, எதிலுமா  எதிரில் இருக்கிறானா? என்ன சொல்கிறீர்கள்? ஏன் குழப்புகிறீர்கள்? என்றார் சபீர்.

அது ஒரு மாலை நேரம்

நானும்  நண்பர் சபீரும் ஒரு பூங்காவில் அமர்ந்திருந்தோம்.

தொலைவில் இருந்த பள்ளிவாசலில் இருந்து தொழுகைக்கான அழைப்புக் கானம்  ஒலிபெருக்கியில் மிதந்து வந்தது.

உடனே நண்பர் சபீர் தனது கண்களை மூடிச் சற்று நேரம் தொழுகை  செய்ய ஆரம்பித்தார். நானும் கண்களை மூடிப் பிரார்த்தனை செய்தேன்.

கண்களைத் திறந்து பார்த்த சபீர், தொழுகை நேரம் என்பதால் நான் கண்களை மூடித் தொழுகை  செய்தேன். நீங்கள் எதற்காக இப்போது கண்களை மூடினீர்கள்? என்று கேட்டார்.

தொலைவில் தெரியும் உங்கள் மசூதியை நானும்தான் எங்கள்  திருக்கோயிலாக எண்ணிப் பிரார்த்தனை செய்தேன், ஏன் கூடாதா சபீர்? என்றேன்.

அவர் முகம் பரவசமாகியது!

ஆனால் அது நீடிக்கவில்லை!

உலகெலாம் உணர்ந்து ஒதற்கரியவன்.. நில உலாவிய நீர்மலி வேணியன்... என்ற சேக்கிழாரின் பாடல் ஒன்று ஒலிபெருக்கியிலிருந்து மிதந்து வந்தது.

மயிலைக் கோயிலின் சாயரட்சை மணி ஓசையும் அத்தோடு சேர்ந்து கொண்டு மிதந்து வந்தது. 

சபீர் நான் உங்கள் பள்ளிவாசலை எங்கள் திருக்கோயிலாக எண்ணி வழிபாடு செய்தேன் . அதுபோல மணியோசை வரும் எங்கள் மயிலைக் கோயிலை உங்கள் பள்ளிவாசலாக எண்ணி இப்போது நீங்கள்  வழிபடமுடியுமா  என்று கேட்டேன்.

சபீர் விக்கித்துப்போனார்!

என்ன ஒரு கேள்வி கேட்டீர்கள் என்பது போல முறைத்துப் பார்த்தார் சபீர்.

பார்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரண ஆனந்தம் என்று கடவுளுக்கு விளக்கம் சொல்லியிருக்கிறார் தாயுமானவர். அதனால் ஒரு கிறித்துவ தேவாலயத்தையும், மசூதியினையும், ஜெயின் கோயில்களையும்  கடவுளாகப் பார்ப்பவர்கள் நாங்கள்.  அது போல உங்களாலும் பார்க்க முடியுமா?  என்று கேட்டேன்.

உஹும்…அது கூடாது என்றார்.

அங்குதான் மதம் இருக்கிறது சபீர். எல்லாவற்றையும் கடவுளாகப் பார்ப்பதற்கு எவர் அனுமதியும் தேவையில்லை, இந்து மதம்  ஒரு மதமே இல்லை, இது எல்லா மதங்களையும் நேசிக்கும். காரணம் எல்லா உயிர்களையும்  எல்லா மனிதர்களையும் இறைவனாகவேப் பார்க்கும் மதம். நான் கிறித்துவ தேவாலயங்களையும் வழிபடுவதுண்டு. மனிதர்களிடத்தில் மதங்களைப் பார்க்காதவன் இந்து.

இந்த சப்ஜக்ட்டை இத்தோடு விட்டு விடுவோம். விளையாட்டு வினையாகி விடப்போகிறது. கடவுள் உண்டோ இல்லையோ மதம் உண்டோ, இல்லையோ நமக்குள்ளே ஆழமான நட்பு என்ற ஒன்று இருக்கிறது. இது போன்ற  விவாதங்களால் நமக்குள்ளே மோதல்விடக்கூடாது, கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் சபைக்கு உதவாத வெறும் பேச்சு.  மதங்களுக்கும் அதுவே பொருந்தும்  என்றார் சபீர்.

இதுவும் இறைவனின் திருவிளையாட்டுதான் சபீர் என்றேன்.

என்ன சொல்கிறீர்கள்  என்றார் சபீர்.

வாழ்க்கையே ஒரு நாடக மேடை. அதில் நம்மை ஆடவிட்டு வேடிக்கை பார்ப்பவன் இறைவன். நமக்குள்ளே மத பேதங்களை ஏற்படுத்தி நம்மை ஆட்டுவிப்பவனும் அந்த  இறைவன்தானே!

வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு. நமக்குள்ளே கடவுள்  பக்தி நீடிக்கிறதோ இல்லையோ வேண்டாம். நட்பு நீடித்தால் அதுபோதும். அதற்கு ஒரு கேடும் வந்து விடக்கூடாது என்றார் சபீர்.

நட்பு என்பது  அன்புதானே. அந்த அன்புதானே இறைவன்!

அந்த ஆழமான  நட்பைத்தான் பலவித சோதனைகளுக்கு உட்படுத்துகிறான் இறைவன். பயப்படாதீர்கள். விளையாட்டு வினையாகி விடாது.  விளையாடுவது இறைவன். விளையாட்டுக்களை வினைகளாக்கிக் கொள்வதோ மனிதன்.

புரியவில்லையே! என்றார் சபீர்.

மனிதனிடம் உள்ள ஆணவம் என்ற அறியாமை இருக்கிறதே, அதுதான் அத்தனை விளையாட்டுக்களுக்கும் காரணம். அதற்கும் ஒரு சம்பவத்தை இப்போது  சொல்கிறேன் என்றேன்.

ஞானம் விரியும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com