வரலாறு படைத்த வரலாறு

பொதுவாகவே, வரலாற்றின் மீது நமக்கு அக்கறை இருப்பதில்லை. கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் வரலாற்றுத் துறைகள் தூங்கும் துறைகளாக, தூசி படிந்த துறைகளாகவே இருப்பது இன்றைய வரலாறு. வரலாறு என்றால் ஏதோ சலிப்பூட்டும் ஒன்று என்ற தவறான கருத்தில் இருந்து முதலில் நாம் வெளியே வர வேண்டும். திரிக்கப்படாத, மறைக்கப்படாத வரலாற்றை தேடிப் பிடிக்க வேண்டும்; தேடிப் படிக்க வேண்டும். அப்போதுதான் நாம் யார், நம் பெருமைகள் என்ன, சிறுமைகள் என்ன, பலம் என்ன, பலவீனம் என்ன என்பதெல்லாம் புரியும். நம்முடைய அக்கறையின்மையின் காரணமாக, அரசியல் நோக்கங்களுக்காகத் திரிக்கப்பட்ட, கூட்டப்பட்ட, குறைக்கப்பட்ட வரலாறுதான் நம்முன் வைக்கப்படுகிறது. அல்லது, திணிக்கப்படுகிறது. 

உலகம், சமயம், தத்துவம், இலக்கியம், விஞ்ஞானம், சாதனையாளர்கள் என்று எந்த வரலாறாயினும் அவற்றில் நமக்கான செய்திகள் உள்ளன. நம்முடைய கடந்த காலத்தின் நிகழ்காலம், இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கும் மதிப்பீடுகள் என்ன என்பதெல்லாம் அப்போதுதான் புரியும். அந்த வகையில், வரலாறு படைத்த பல சுவையான வரலாற்று நிகழ்ச்சிகளையும், தனி மனித சாதனைகளையும் பற்றி எழுதுவது நன்மை பயக்கும் என்று தோன்றியதால் இதைத் தொடங்குகிறேன். உண்மையின் ஒளியில் வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டியது நம் கடமை என்றே சொல்வேன். ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்று நான் சொல்லமாட்டேன். அது அப்படிதானா இல்லையா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். உணர்ச்சிபூர்வமாக அல்ல. அறிவுபூர்வமாக... ஆராய்ச்சிபூர்வமாக.

நாகூர் ரூமி.

நாகூர் ரூமி.

இயற்பெயர் முஹம்மது ரபி. புனைபெயர்: நாகூர் ரூமி. கல்வித்தகுதி: எம்.ஏ., பிஎச்.டி., கம்பன் - மில்டன் காவியங்களில் ஒப்பாய்வுக்காக, சென்னைப் பல்கலைக்கழக முனைவர் பட்டம். கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், சுயமுன்னேற்றம், மதம், ஆன்மிகம், வாழ்க்கை வரலாறு, தமிழாக்கம் என 43 நூல்கள் எழுதியுள்ளார். இவர் எழுதிய ‘இஸ்லாம் - ஓர் எளிய அறிமுகம்’ நூலுக்கு 2004-ம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச் சங்க விருதும், ஹோமரின் ‘இலியட்’ காவிய மொழிபெயர்ப்புக்கு 2009-ம் ஆண்டுக்கான நல்லி திசையெட்டும் மொழியாக்க விருதும் கிடைத்தது. கணையாழி தொடங்கி கல்கி, விகடன், குமுதம் என எல்லாப் பத்திரிகைகளிலும் எழுதியுள்ளார். இணையத்திலும் எழுதுகிறார். www.nagorerumi.com என்ற இவரது வலைத்தளத்திலும் இவரது ஆக்கங்களைப் படிக்கலாம். ஆம்பூர், மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் ஆங்கிலத் துறைத் தலைவராகப் பணியாற்றும் இவர், சென்னையில் பல ஆண்டுகளாக ஆல்ஃபா தியான வகுப்புகளை நடத்தி வருகிறார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு கருத்துகளைப் பரிமாறியுள்ளார்.

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை