9. வெளிச்சம் மங்கும் மின்மினிகள்

மராத்தி இலக்கியத்தில் முதுகலையும் மக்கள் தொடர்பியல் படிப்பில் முதுகலையும்
9. வெளிச்சம் மங்கும் மின்மினிகள்

குறும்படம் - பிஸ்டுல்யா / இயக்கம் - நாகராஜ் மஞ்சுளே

தாய் பெரிய அம்மிக்கல்லை தலையில் சுமந்து கொண்டு ஊரின் ஒதுக்குப்புறத்திலிருந்து உள்ளூரை நோக்கி நடந்து வருகிறாள். கூடவே அவளுடைய மகன் சிறுவன் பிஸ்டுல்யா நடந்துவருகிறான். அவர்களின் உடைகள் வெளுத்துப் போயிருக்கின்றன; அவர்களின் வாழ்வைப் போலவே. மலைகளை நோக்கி நீளும் தார்ச்சாலையில் ஸ்டீயரிங்கைப் போல் வளைந்த ஒரு கம்பியை கண்டெடுக்கிறான் பிஸ்டுல்யா. வேகவேகமாய் முன்னகர்ந்த அம்மையின் விளிப்பிற்கிணங்க குதூகலமும் பசியுமாக செவிமடுத்து ஓட்டமெடுக்கிறான்.

கோட்டை மதிற்சுவர் போல் தோற்றமளிக்கும் உயர்சாதி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைகிறாள் பிஸ்டுல்யாவின் தாய். பின்தொடரும் பிஸ்டுல்யா எதிர்ப்படும் பள்ளி செல்லும் ஒரு பாப்பாவை நின்று ஒரு கணம் பார்த்து விட்டு நகர்கிறான். கையில் வைத்திருக்கும் ஸ்டீயரிங்கை ஒரு காரைப்போல பாவித்து ஓட்டிவருகிறான். அம்மிக்கல்லை விற்க உரக்க கூவுகிறாள். அக்குரலில் பசியின் ஓலமும் அடிநாதமாக ஒளிந்திருக்கிறது. சீட்டுக்கட்டு விளையாடும் மனிதர்களைத் தாண்டி நடந்து வருகிறாள். ஒரு வீட்டினுள் மின் மிக்சி அரைக்கும் சத்தம் கேட்கிறது. கிராமம் நகரமயமாகிறதா இல்லை ஒடுக்கப்பட்டவர்கள் மேலும் விளிம்பு நிலையை நோக்கி தள்ளப்படுகிறார்களா என்று தெரியவில்லை.

உடலில் வேர்வை வழிய மூச்சு வாங்கி அயற்சியாகி ஒரு வீட்டின் கல்மேடைத் திண்ணையில் வந்து அம்மிக்கல்லை இறக்கிவைத்துவிட்டு அமர்கிறாள் பிஸ்டுல்யாவின் அம்மா. அவ்வீட்டுப் பெரியம்மாவிடம் குடிக்க தண்ணீரும் கொஞ்சம் உணவும் கேட்கிறாள். கிட்டிய தண்ணீரை தான் குடித்துவிட்டு கொசுறு உணவை மகனுக்கு கொடுக்கிறாள். பசி தீர்க்க உள்ளூருக்குள் சென்று மேலும் உணவு திரட்டப் போவதாக சொல்லிவிட்டு கொண்டு வந்த விற்காத அம்மிக்கல்லை பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு மகனுடன் நகர்கிறாள்.

மகனை ஒரு வீட்டின் முன் நிறுத்தி இரத்தல் குரலில் உணவு கேட்கிறாள். உணவு மறுக்கப்படுகிறது. கற்பனைக் காரை  குதூகலமாக ஓட்டிவரும் பிஸ்டுல்யாவை எரிச்சலுடன் திட்டுகிறாள். இரத்தலுக்கு குழந்தையின் குதூகலம் தடையாக இருக்கலாம் என்று நினைக்கிறாள். ஒரு வீட்டின் முன் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. அங்கு நின்று இவள் உணவு கேட்கிறாள். இவளின் குரலுக்கு இரங்குவார் அங்கும் யாரும் இல்லை. அவ்வீட்டுச் சிறுவன் பிஸ்டுல்யாவின் கற்பனை வண்டியை ஆசைப்பட்டுக் கேட்க இவளோ தன் மகனின் கையிலிருந்து அதைப் பிடுங்கிக் கொடுத்துவிட்டு புதுபண்டத்தை உண்ணக்கொடுக்குமாறு கேட்கிறாள். வண்டி கைமாற உணவு பரிமாறுதல் நடக்கிறது. ஸ்டீயரிங்க் பறிபோன ஏக்கத்தில் பிஸ்டுல்யா வெறுமையுடன் நின்றுகொண்டிருக்க உணவை வாங்கிய கையோடு அவனின் தாய் விறுவிறுவென்று அவ்விடம் விட்டு நகர்ந்து போகிறாள். நீயாக செய்ததா என்னும் கேள்விக்கு அழகான வெள்ளந்தித் தலையாட்டலை பதிலாக தந்தவன் தற்போது சிறுவர்கள் வண்டி அலங்காரத்தை சிதைக்கும்போது மருகுகிறான். அகலமுடியாமல் குதூகலம் வடிய கடந்துபோகிறான்.

பிஸ்டுல்யா வகுப்பறையில் நின்று கொண்டிருக்கிறான். பாடம் படித்துக் கொண்டிருக்கும் மற்ற குழந்தைகள் நன்றாக வெளுத்த சீருடைகளை அணிந்திருக்கின்றனர். இவனோ அழுக்குடையுடன் வாத்தியாரிடம் வசவு வாங்கிக் கொண்டிருக்கிறான். பள்ளிக்கு நினைத்த மாதிரி வருகிறாய் போகிறாய் எனவும் பள்ளிக்கான முறைகளில் குறை வைத்துள்ளதாகவும்  இது சரிப்படாது உன் தகப்பனை அழைத்து வா எனவும் சொல்கிறார் ஆசிரியர். அதைக் கேட்கிற பிஸ்டுல்யா தன் தகப்பன் இறந்துவிட்டார் என பதில் சொல்கிறான். எப்படி அது; ஒரு மாதத்திற்கு முன்பு உன் தகப்பனை கூட்டி வந்தாயல்லவா என்று வினவும் குருவுக்கு சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது தவறி விழுந்து இறந்து விட்டார் என வெள்ளந்தியாக தலையாட்டிக்கொண்டே பதில் சொல்கிறான் பிஸ்டுல்யா. அப்படீன்னா உன் அம்மையை அழைத்து வா என்றும் சான்றிதழ்கள் இன்னும் நீ கொடுக்கவில்லை என்றும்  இனிமேல் பள்ளிச் சீருடையில்தான் வகுப்புக்கு வரவேண்டும் என்றும் கட்டளையிடுகிறார் ஆசிரியர். என்ன சொல்வதென்று புரியாமல் வெள்ளந்தியாக பரிதாபமாக தலையாட்டிக் கொண்டே நிற்கிறான் பிஸ்டுல்யா.

அம்மிக்கல்லை கொத்திக்கொண்டிருக்கும் தாயிடம் முறையிடுகிறான். அவளோ எனக்கு உடம்பு சரியில்லை அமைதியா போய்விடு இல்லைன்னா வாங்கி கட்டிக் கொள்ளப் போகிறாய் என்று சீறிவிழுகிறாள். அப்பாதான் படிக்க சொன்னார் என்று மகன் சொல்ல உங்கொப்பனையே போய் புத்தகங்களையும் சீருடையையும் கேள் என்று அனாதரவான நிலையை பதற்றமாகச் சொல்கிறாள். பேந்த பேந்த முழிப்பவனை நாம ஒன்னும் படிச்ச குடும்பத்திலிருந்து வரவில்லை என்று ஏழ்மை வம்சத்தை முன் வைக்கிறாள். மகளைக் கொஞ்சுபவளிடத்தில் இறைஞ்சுகிறான். அவளோ கடுப்பாகி வசவுகளைப் பொழிந்துவிட்டு கல்லெடுத்து இவனை அடித்து விரட்டுகிறாள். மேலும் தன்னை விற்று வேண்டுமானால் படிக்க பள்ளிக்குச் செல் என்று மனம் குமுறுகிறாள். வர்க்க அடுக்குகளின் சக்கரங்களில் நெரிபடும் மனித இருப்புகள் மானுட அறத்தை கேள்விக்குள்ளாக்குகின்றன. அருகிலிருக்கும் குடிசைவாசி இளைஞன் ஏண்டா உங்கம்மாவை தொல்லைப் படுத்துகிறாய் என்று செல்லமாக கேட்கிறான். அவளோ முறைக்கிறாள்.

கட்டாந்தரையில் அமர்ந்து சிறுகற்களை அழகாக அடுக்கிக்கொண்டு வார்த்தையொன்றை கட்டமைத்துக்கொண்டிருக்கும் அண்ணனிடம் என்ன எழுதிக்கொண்டிருக்கிறாய் என்று பிஸ்டுல்யாவின் தங்கை கேட்கிறாள். அவனோ கற்றுக்கொள்ள விரும்புகிறாயா என்று கேட்டுவிட்டு கற்களை மெல்ல தொடர் வரிசையில் அடுக்கி வார்த்தையொன்றை உருவாக்குகிறான். அது அவனின் தங்கையின் பெயரான ‘லலி’. இவன் பாசத்துடன் உச்சரிக்க அவள் அன்புடன் அகம் மகிழ்கிறாள்.

சுக்ரியா உன் தகப்பன் குடித்துவிட்டு கீழே கிடக்கிறார் என்று தன் மூத்த நண்பனிடம் சொல்லிக்கொண்டு வருகிறான் பிஸ்டுல்யா. அவன் இவனை உற்றுப் பார்க்க சத்தியமாக என்று தான் கண்ணால் பார்த்ததை சொல்கிறான் பிஸ்டுல்யா. ஊரின் ஒதுக்குப்புறமான அவ்விடத்திற்கு இருவரும் வந்துசேருகின்றனர். அங்கு இவர்களை எதிர்கொள்பவர் அந்த மூத்த நண்பனிடம் உங்க அப்பா வரவில்லையா என்று கேட்க இல்லை; அவர் இன்று நிறைய குடித்திருக்கிறார் என்றும் அதற்குப் பதிலாக பிஸ்டுல்யா பார்த்துக்கொள்வான் என்றும் அவருக்குப் பதில் சொல்கிறான். அவரோ சரியாகப் பார்த்துக்கொள்ளனும் சாயந்தரம் உனக்கு இனிப்புகள் வாங்கித் தருகிறேனென்று ‘உறுதிமொழி’ கூறுகிறார். மூத்தவர்கள் இருவரும் வேலையாய் நகர இவனோ தனக்கு இனிப்புகள் வேண்டாமென்றும் அதற்குப் பதிலாக பாடப் புத்தகங்கள் வாங்கித் தருமாறும் கேட்கிறான்.

ஊர் அடி பம்பில் தண்ணீர் அடித்துக் கொண்டிருக்கிறாள் பிஸ்டுல்யாவின் தாய். பின்னனியில் அமைதியாக வீற்றிருக்கிறது ஏதோ ஒரு ஆலயம். தெருக்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. குடம் நிறைந்த பிறகு ஒரு சிறு கல்லையெடுத்து கணக்கிற்காக முந்தானையில் முடிந்து வைக்கிறாள். பிஸ்டுல்யா தன் பொறுப்பிலிருக்கும் பையிலிருந்து சிகரெட்டு ஒன்றை எடுத்து பற்ற வைத்து இழுக்கிறான். சிதிலமான அந்தப் பெரிய வீட்டு மாடங்கள் காலத்தில் வாழ்ந்த வாழ்வை உறைய வைத்திருக்கிறது. பையோடு வரும் அந்தப் பக்கத்து குடிசைவாசி திறந்து கிடக்கும் பையைக் காட்டி பிஸ்டுல்யாவைத் திட்டுகிறான். கொண்டுவந்த பையை வைத்துவிட்டு ஏற்கனவே அங்கிருந்த பையை எடுத்துச் செல்கிறான். இவனை பாதுகாவலனாய் வைத்துவிட்டுப்போன போக்கிரி மாமா சிறு பையொன்றை எடுத்துவந்து பெரும்பையினுள் திணிக்கிறார். நேரம் கடக்கிறது. தன்னை அங்கு கூட்டி வந்த மூத்த நண்பன் அந்தப் பையை எடுக்க வரும் போது போலீஸ்காரர்களிடம் வகையாக சிக்குகிறான். பிஸ்டுல்யாவையும் பிடித்துச் செல்கிறார்கள்.

சாப்பாட்டுக் கடைக்குள் நுழைகிறாள் பிஸ்டுல்யாவின் தாய். அங்கு ஒரு சிறுவன் கூல்ட்ரிங்க்ஸ் குடித்துக் கொண்டிருக்கிறான். கல்லாவில் உட்கார்ந்திருக்கும் முதலாளி இவளைக் கண்டவுடன் பணத்தை எடுத்துக் கொடுக்கிறார். இவளோ இன்றைக்கு இவ்வளவு குடம் தண்ணீர் இறைத்திருக்கிறேன் என்று தன் மடியில் முடிந்து வைத்திருந்த கற்களை கல்லாவின் மீது ஒட்டப்பட்டிருக்கும் உணவு விலைப் பட்டியலின் மீது கொட்டுகிறாள்.

போலீஸ் ஸ்டேஷன். மூத்த நண்பன் விசாரணக்கு ஆட்பட்டிருக்கிறான். பரத்தையின் மகனாக இருக்கிறான் எவ்வளவு அடித்தும் ஒன்றும் சொல்ல மாட்டேன் என்கிறான் என்று இன்ஸ்பெக்டரிடம் முறை வைக்கிறார் இளைய ஏட்டு. அந்தப் பையனை கூட்டிட்டு வாங்க என்று இன்ஸ்பெக்டர் கட்டளையிட பிஸ்டுல்யா கழுத்துப் பிடியாக அழைத்து வரப்படுகிறான். வாயை திறக்கக்கூடாது; யாரையாவது காட்டிக் கொடுத்தாயென்றால் பிக்குனானா உன்னை கொன்று போட்டுவிடுவார் என்று சன்னமான குரலில் பிஸ்டுல்யாவிற்கு எச்சரிக்கை விடுகிறான் ஆட்பட்ட அந்த மூத்த நண்பன். இன்ஸ்பெக்டர் கேஸ் எழுதுகிறார். கிசுகிசுத்தவனை காவலில் வைக்குமாறு கட்டளையிடுகிறார். பிஸ்டுல்யாவிடம் வேறு யாரெல்லாம் உங்களுடைய கேங்கில் இருக்கிறார்கள் சொல் என்று அதட்டி ஓங்கி கன்னத்தில் ஒரு அறை விடுகிறார். அந்த அறைச் சுவர்களில் காந்தியின் படம், வேர்ல்டு மேப், ஜேப்படி திருடர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்ட பலகை, காவல்துறையின் அன்றாட அலுவல்கள் விவரணை ஆகியவைகள் நிறைந்திருக்கின்றன.

பிஸ்டுல்யாவின் அம்மாவிடம் அவனால் தனக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் அவள் விதவையாக இருப்பதால்தான் தங்களுடன் தங்க வைத்திருப்பதாகவும் சொல்லுகிறார் அவனால் நஷ்டமடைந்த ஜேப்படி தலைவர். மேலும் நீ என்ன பிராமண குலத்தில் பிறந்தவனா என்று பிஸ்டுல்யாவைக் கேட்கிறார். இவனால் இரு சிறுவர்கள் மாட்டிக்கொண்டார்கள் எனவும் நொந்து கொள்கிறார். நாலெழுத்து படிக்க வேண்டுமென்று இவன் தகப்பன்தான் ஆசைப்பட்டான் படித்தென்ன இவன் கலெக்டரா ஆகப்போகிறான் நம்மோடு இருந்தால் தொழில் கற்றுக்கொள்ளலாம் என்று அக்கூட்டத்தில் ஒருவர் சொல்லிக் கொண்டிருக்க பிஸ்டுல்யாவோ மற்றொருவரை முறைத்துக் கொண்டிருக்கிறான். அவர் அடிக்க விரட்ட அவனோ ஜேப்படிக் கூட்டத்திலிருந்து தள்ளிப்போய் நிற்கிறான்.

தலைவர் பிஸ்டுல்யாவின் அம்மாவின் விருப்பத்தைக் கேட்க அவளோ மகனை அவர்களோடு திருட்டுத் தொழில் கற்க அனுப்ப சரியென்று சொல்கிறாள். முதல் ஆறுமாதம் பயிற்சியில் வரும் வருமானம் தனக்கு என்றும் அதற்கு பிறகான திருட்டுப் பொருளெல்லாம் அவனுக்கேயென்று உறுதியளிக்கிறார் ஜேப்படித் தலைவர்.

பிஸ்டுல்யாவின் பயிற்சிக் காலம் ஆரம்பிக்கு முன் அவனை கட்டி வைத்து அடிக்கிறார்கள் அந்த ஜேப்படிக் கூட்டம். போலீசாரை விட நீங்கள் கொடுக்கும் அடி அதிகமாக இருக்கிறது என்று அழுது கொண்டே தலைவனின் கட்டளைக்கு அவனின் ட்ரேட் மார்க் வெள்ளந்தி தலையாட்டலோடு அடி பணிகிறான் பிஸ்டுல்யா. ஊருக்குள் சொம்பு மற்றும் கோழி திருடுவது, பஸ் ஸ்டேண்டில் பிக்பாக்கெட் அடிப்பது என்று பிஸ்டுல்யாவிற்கு பலமான பயிற்சியளிக்கப்படுகிறது.

அறியாமை இருள் அகலட்டும்

கடவுளே எங்களுக்கும் அறிவொளி கொடு

தீமையிலிருந்து காத்து

மகிழ்வான வாழ்வை எங்களுக்குக் கொடு

இப்படியொரு பாடலை பள்ளி அசெம்பளியில் குழந்தைகள் பாடக் கேட்கிறான் ஏக்கமாக பிஸ்டுல்யா. அந்த நாள் சந்தைக் கடையிலிருந்து பொருளொன்றை திருடிக் கொண்டு ஓட அவனை கடைக்காரர் விரட்டிப் பிடிக்க முயற்சிக்கிறார். இவனோ தலை தெறிக்க உள்ளூர் வீதிகளில் ஓடுகிறான். கிராமத் தெருக்கள் தாண்டி ஊருக்கு ஒடுக்குப்புறம் தாண்டி வந்து தடுமாறி விழுகிறான். கையில் வைத்திருந்த பொருள் மண்புழுதியில் விழுகிறது. துரத்தி வருபவர் பின்னால் இல்லை. பயமும் பதற்றமும் மெல்ல மறைய அந்த பொருளை எடுத்து உதறுகிறான். அது ஒரு சிறுமிக்கான பள்ளிச்சீருடை. மென்சோகம் இசைக்கிறது புல்லாங்குழல். அப்புழுதியினூடே பிஸ்டுல்யா ஓடி மறைகிறான்.

ஏனோ இக்கணம் இக்கவிதை மனதில் மேலெழுகிறது வலியோடு.

அறிக்கை

திரையரங்க வாயிலில் நின்று
சினேகிதங்களைத் தேடுகிற
அழுக்குடைக்காரனுக்குள்ளிருந்து
மகாரூபன்
மனிதத்தைப் பார்வையிடுகிறான்
பூரணாதிபதிக்கு எதுவும் தேவையில்லை
எனினும்
நிராகரிக்கின்ற பத்திரிகையாசிரியர்களிடம்
மீண்டும் படைப்புகளைக் கொண்டுசெல்கிறான்
கனிவோடு
நீதியரசன் எல்லாவற்றையுமே
மன்னித்துவிடுகிறான்
சிகரெட் கொடுத்து உபசரிக்காத நன்பனையும் கூட
எளிதில் நிறைவடைகிறவனால்
ஒரு தொல்லையுமில்லை - உதாரணமாக
உணவுக்காக உங்களிடம் வரும்போது
ஒரு குவளை தேனீரால் சாந்தப்படுத்திவிடலாம்
பொக்கிஷதாரனுடைய வாழ்க்கையை
நன்றியுணர்வற்று வேறு பலர் வாழ்கிறார்கள்
நடைபாதைச் சித்திரத்தின் மீது விழும் சில்லறை
அவன் சார்பிலானவையென்று எவருமறியார்
நம்பிக்கையாளனின் எதிர்பார்ப்பு
வீண் போவதில்லை எப்போதும்
நள்ளிரவில் வீடு திரும்பி தபால்பெட்டியைத் திறக்கையில்
ஒரு பல்லியின் மின்னும் கண்களின்
ஒளியையாவது பெறுவான்
மகாரூபன் - பூரணாதிபதி - நீதியரசன்
நிறைந்தவன் - பொக்கிஷதாரன் -
நம்பிக்கையாளன் என
எல்லோரும் பிரிந்து போக
ஒருவனே படுக்கையில் வீழ்கிறான்
எல்லோருக்குமான தரித்திரப் புனிதத்தோடு
ஒருவனே உறங்கத் தொடங்குகிறான்
இரவின் குளம்புகள்
வெற்றுக்குடல் மிதிக்கும்
குப்பைத்தொட்டி பச்சிளம் சிசுவை
குதறும் நாயாகிறது பசி.

-யூமா வாசுகி

மராத்தி இலக்கியத்தில் முதுகலையும் மக்கள் தொடர்பியல் படிப்பில் முதுகலையும் முடித்திருக்கிறார் இக்குறும்படத்தின் இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே. முதலில் இவர் ஒரு கவிஞர். பிறகு திரைக்கதை எழுத்தாளர். இந்த திறமைகளை இவர் இயக்கிய ஃபான்றி மற்றும் சாய்ரட் போன்ற முழுநீள திரைப் படங்களில் காணலாம். பைருரதன் தமனி சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற ‘உனச்யா கடவிருத்தா’ என்னும் மராத்திக் கவிதை தொகுப்பின் மூலம் அறியப்பட்ட நாகராஜ் மஞ்சுளே மராத்திய மண்ணின் தலித்திய வாழ்வை திரையில் பதிவு பண்ணுகிற வகையில் குறிப்பிடத்தகுந்த ஒரு திரைப்பட இயக்குனர் ஆவார். பிஸ்டுல்யாவில் சிறுவனாக நடித்த சுராஜ் பவார் சிறப்பு பாராட்டையும் கதைப்படம் அல்லாத வகைமையில் நாகராஜ் மஞ்சுளே இந்திய தேசிய திரைப்பட விருதையும் இக்குறும்படத்திற்காகப் பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com