10. ஆனந்த யாழும் காலச்சக்கரமும்

தும்பைப் பூ மேகங்கள் குட்டி குட்டியாய் வானத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன.
10. ஆனந்த யாழும் காலச்சக்கரமும்

Father and Daughter (2000) / Director Michael Dudok de Wit

தும்பைப் பூ மேகங்கள் குட்டி குட்டியாய் வானத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன. மனம் பஞ்சு போலாகிறது. மண்ணிலிருந்து இரு உருவங்கள் தத்தமது மிதி வண்டிகளில் ஒரே சீராகப் பயணிக்கின்றன. சாம்பலும் பழுப்புமான புறச் சூழல். அகம் மிதி வண்டிச் சக்கரங்களின் லயத்தில் சுருதி கூட்டுகின்றன. சைலபோன் இசை மெல்ல அலையலையாய் வாஞ்சையோடு அந்நிலத்தில் பரவுகிறது. தகப்பன் தன் குட்டிப் பாப்பாவோடு சாலையில் பயணிக்கிறார். அவளும் தகப்பனும் அவரவர் மிதிவண்டிகளில் வேகம் கூட்டுகின்றனர். பெடல்களில் காலத்தின் சுற்றுதல் பிரதிபலிக்கிறது. ஊரின் அழகான ஓரிடம் அது. நெடிய மரங்கள் இரண்டு மூன்று உயர்திணை வாழ்வை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. தகப்பன் தன் மிதிவண்டியை மரத்தையொட்டி நிறுத்துகிறார். மகளும் தகப்பனைப் போலவே செயல்பட அங்கே தாயுமானவனின் குணம் விரவுகிறது. மகளை மண்டியிட்டு முத்தமிட்டுவிட்டு அவளை அக்கரையின் மீதே நிறுத்தி வைத்துவிட்டு இவர் ஏரிக்கரையிலிருந்து இறங்கி நீரைநோக்கி நடக்கிறார்.

படகு ஏரிக்கரையில் மிதந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறார். மீண்டும் ஏரிக்கரைக்கு ஏறிவந்து மீண்டும் மகளை அழுந்த முத்தமிடுகிறார். பிள்ளை குதூகலமடைகிறது. தகப்பன் துடுப்பு வலித்து நடு ஏரியை நோக்கி மிதந்து போவதை மகள் கரையில் நின்று பார்க்கிறாள். அடிவானம் அகல அகல விரிய தகப்பன் துடுப்பு போடுகிறார். மகளோ நிலை கொள்ளாமல் கரையில் அலைந்து கொண்டிருக்க சூரியன் சூட்டைக் கொளுத்துகிறான். நீண்ட நேரமாகியும் தகப்பன் வராது போகவே மகள் தனது மிதிவண்டியிலேறி வீட்டை நோக்கிய பாதையில் தனியே போகிறாள். கொஞ்சம் வளர்ந்தவுடன் மீண்டும் அதே ஏரிக்கரைக்கு வந்து தகப்பன் போய் மறைந்த அந்த ஏரியை மகள் வேடிக்கை பார்க்கிறாள். பகலவனின் கதிர்கள் கண்மணிப் பாப்பாவை நிர்மலமாக்குகின்றன. அவரைக் காணாது மீண்டும் அதே வழி திரும்புகிறாள்.

இன்னும் கொஞ்சம் வளர்ந்தவுடன் மீண்டும் அதே நிகழ்வு. இம்முறை கரையின் மேடு உயர்ந்திருக்கிறது. எதிர்க் காற்று வீசுகிறது. வயது முதிர்ந்த கனிந்த பாட்டியொன்று தனது சைக்கிளை நடந்து தள்ளமுடியாமல் தள்ளிக்கொண்டுவருகிறார். ஏரியில் நீர் தளும்பி அலையடிப்பதைப் பார்க்கிறார். மனம் ஏக்கம் கொள்கிறது. பாரமும் கோபமுமாக விருட்டென்று கிளம்பிப்போகிறார். கனிந்த மூதாட்டி காற்றில் அலைய இவளோ இளஞ்சக்தியை மிதிவண்டியில் செலுத்துகிறாள்.

அடுத்த பருவத்தை நோக்கி இயற்கையோடு இயற்கையாக அவளும் நகர்கிறாள். அது ஒரு மழைக்காலம். இம்முறை தகப்பனை தேடி ஏரிக்கரைக்கு வரும்போது நடுத்தர வயது பெண்மணியொருத்தியைக் கடந்து வருகிறாள். பியானோவின் ஒலி காலத்தில் அவளின் தகப்பன் மீதான ஏக்கத்தை மீட்டுகிறது. கூட செல்லோவும் அடிமன தனிமையை கிளறிவிடுகிறது. ஏரியில் நீர் மெல்ல பெருகிக்கொண்டே இருக்கிறது. மகளோ இளம்பருவத்தின் வேரூன்றலில் இருக்க மிதிவண்டியோ மழைத் தரையில் நகரமாட்டாமல் தடுமாறுகிறது.

அடுத்த முறை தோழிகளின் துணையோடு மிதிவண்டிப் பிரயாணம். வரிசையான ஏரிக்கரை மரங்களைக் ஒய்யாரமாகக் கடந்து வருகிறார்கள். தோழிகள் முன்னகர இவளோ அதே ஏரிக்கரை மேட்டில் தன்னை மறந்து நின்று கொண்டிருக்கிறாள். சகிகளின் அழைப்பிற்கிணங்க அங்கிருந்து நகர்கிறாள். இவளின் பால்யத்தில் விடைபெற்றுச் சென்ற தகப்பன் இப்போது வரை திரும்பி வரவில்லை. இம்முறையும் சைக்கிள் வீல் கம்பிகள் மெல்ல காலத்தையும் ஏக்கத்தையும் சுழற்றுகின்றன. அதே போன்ற ஒரு நடுத்தர வயது பெண்மணியொருத்தி மிதிவண்டியில் தனியே இவளைக் கடந்து போகிறாள். அவள் இவளைக் கடக்கிறாளா அல்லது அந்தப் எதிர்ப்படும் பெண்மணிகள் இவளைக் கடக்கிறார்களா தெரியவில்லை. ஆனால் கடப்பது என்பது அவ்வளவு கடப்பாடு அல்ல என்பதை அவ்வியக்கம் காட்டுகிறது.

பருவம் மாறுகிறது. இம்முறை அவ்வழியில் இவள் தனது காதலனுடன் கடந்து போவது தனியே சைக்கிளில் பயணிக்கும் ஒரு துள்ளலான இளம் பெண்ணொன்றை. பௌணர்மி நாள் நிலா சாட்சிபூதமாய் வீற்றிருக்க மிதிவண்டி தனது விளக்கில் வெளிச்சம் பரப்புகிறது. இலையுதிர்க்காலம் தொடங்குகிறது. இம்முறை தனது குழந்தைகளை மிதிவண்டிகளின் பின்னிருக்கையில் அமர்த்தியபடி தன் கணவரோடு ஏரிக்கரைக்கு செல்கிறார்கள். கணவர் குழந்தைகளை நீரில் விளையாடவிட்டபடி அமர்ந்திருக்க இவளோ தனது தகப்பன் போன தடத்தை தனியே கரையில் நின்றபடி சோக யாழெடுத்து மீட்டுகிறாள். காலமேகங்கள் வெளிகளில் கரைகிறது. ஏரி உலர்ந்து உள்வாங்குகிறது. மரங்கள் கூட வயதில் காய்கின்றன.

இம்முறை குழந்தைகளில்லாமல் கணவரில்லாமல் இவள் மட்டும் தனியாக மிதிவண்டியில் ஏரிக்கரைக்கு வருகிறாள். ஏரி வற்றிக்கொண்டேபோய் தரை தட்டியிருக்கிறது. மரங்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் காய்ந்து போக கோரைகள் முளைத்தெழும் காலமிது. உலர் தெளி நீரில் ஆகாசப் பறவையொன்று நீந்த காலச் சக்கரம் மெல்ல உருள்கிறது. வயது மெல்ல காலத்தில் ஏறி இறங்க இம்முறை அவள் எதிர்கொள்வது இளம் பெண்ணொன்றை. ஏரி உள்வாங்கி காலம் வெளி வாங்கியிருக்கிறது. தண்ணீரற்ற அவ்வேரியில் வருமீனை நம்பிக் காத்திருக்கிறது ஒரு  பசித்திருக்கும் தனித்திருக்கும் கொக்கு.

சைக்கிளை தள்ள முடியாமல் தள்ளிக்கொண்டு வரும் மகள் மூதாட்டி. எதிரில் குதூகலமாக சைக்கிளில் விரைகிறது ஒரு குழந்தை. ஏரிக்கரைக்கு வருகிறாள் காலச்சுழற்சியின் மைய அச்சாகிப் போன தகப்பன்-மகள் பாசத்தைத் தேடி முதிய மகள். சைக்கிள் தரையில் நிற்காமல் கீழே விழுந்து கொண்டேயிருக்கிறது. கோரைகளைத் தாண்டி வறண்ட ஏரியின் மையப் பகுதிக்கு வருகிறாள். தகப்பன் மூழ்கிய படகு தரைதட்டிக் கிடக்கிறது. கருவறைக் குழந்தையைப்போல படகினுள் படுத்துக்கொள்கிறாள். பறவைகள் மனவினோதத்தை கூவிப் பாடுகின்றன. தாயுமானவனை தட்டி எழுப்புகின்றன. தாய்மை குழையும் ஓசை வரும் திசையில் ஓடுகிறாள். அவளின் பருவம் திரும்புகிறது. மனமாச்சரியம் மேலோங்க அங்கு நிற்கும் தகப்பனைக் கண்ணுறுகிறாள் மகள். உச்சிமுகர்ந்து மகளை அள்ளி அணைக்கிறார் தகப்பன். கண்ணீர் பெருக்கெடுக்க தகப்பனும் மகளும் ஓர்மைகூடி ஒன்றெனவாக பாசத்தின் எல்லையின்மையை ஆனந்த யாழ் மீட்டுகிறது.

ஏனோ இக்கணம் இக்கவிதை மனதில் மெல்ல மேலெழுகிறது.

மகளதிகாரம் 1

பிறந்ததும்
ஒரு வெள்ளைத் துணி
ஏந்திக் கொடுத்தார்கள்
என் இளஞ்சிவப்புத் தேவதையை...
அதன் மூடிய இமைகளுக்குள்
இரு விழிகள்
அசைவது போலத்தான் இருந்தது
அதுவரையில் என் இதயம்...!

மகள் கோலம் வரைகையில்
அது முடியும் மட்டும்
நம்பிக்கையோடு
காத்திருக்கின்றன
சில தெய்வங்கள்...
கோலத்திலேயே வாழ்ந்துவிட!

அள்ளிக் கொடுத்தாலும்
ஆறாத மனம்
மகள் கிள்ளிக் கொடுத்ததில்
அடங்கிவிடுகிறது..

மகள் சாதம் பறிமாறியபோது
தட்டில் கொஞ்சம் சோறும்
நிரம்பி வழியும் சந்தோசமும்
இருந்தது.

ஒவ்வொரு இரவும்
தூங்கும் மகளின்
முகம் பார்த்துக் கொண்டிருப்பேன்
அது தவிர
தியானம் என்று
தனியாக எதுவும்
செய்வதில்லை நான்...!

***

மகளதிகாரம் 2

பொட்டு வைத்துப் போனாள்
பின்
அதற்கு நேராக
என் புருவங்களை
நகர்த்திக் கொண்டேன்...

மகள் பிறந்ததும்
முதலில்,
சுண்டு விரல்தான்
பிடித்துப் பார்த்தேன்.
அதன் நினைவாய்,
எங்கும், என்
சுண்டுவிரல் பிடித்தே வருகிறாள்

மகளின்
பாதங்களால்
நிறைகிறது
என் வீடு

மகள் முத்தமிட்ட எச்சில்
ஈர நினைவாகி விடுகிறது.

குவளை நீர் மொத்தமும்
சிந்திவிட்டாலும்
மகள் கொண்டு வந்ததில்
என் தாகம் தீர்ந்தது...

நெஞ்சில் தான் படுத்திருப்பாள்
அவள் இல்லாத நேரத்தில்
பதிலுக்கு தலையணை
கொடுத்துப் போனாள்...
மூச்சுத் திணறியது.

***

மகளதிகாரம் 3

நான் அழும்போது
மகள் தன் பிஞ்சுக் கைகளால்
என் கண்ணீர் குளத்தின்
மொத்தத் தண்ணீரையும்
வாரி இறைத்து
வற்ற வைத்துவிடுகிறாள்...

கோபித்துக்கொள்ளும் மகளிடம்
மண்டியிட்டு மன்னிப்புக் கேட்பேன்...
தெய்வங்கள் போலில்லை
உடனே மன்னித்துவிடுகிறாள் மகள்...!

மகள் வரைந்ததும்..வரைந்ததும்
இந்த பறவைகள் பறந்து விட்டால்
எப்போது முடிப்பது ஓவியத்தை!?

மகள் கோபத்தில்
இருக்கும் போது
மிக அருகில்
அமர்ந்து விடுவேன்
சமாதானத்திற்கு
தலை நிமிரும் போது
ஆளில்லை என்றால்
பாவம் வாடிவிடும்...

மகளதிகாரம் 4

நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்த மகள்
நடுவிலேயே தூங்கிவிட்டாள்.
நான் எவ்வளவு சொல்லியும்
இரவு முழுவதும் காத்திருந்தன
நட்சத்திரங்கள்
அவள் எப்படியும் எழுந்துவிடுவாள் என.

பூந்தொட்டித் தண்ணீரில்
நிலா தவறி விழுந்துவிட்டதென
காப்பாற்றச் சொல்லி நிற்கிறாள் மகள்
இப்போது அவளுள் தவறி விழுந்த என்னை
அந்த நிலா தான் காப்பாற்றியாக வேண்டும்...

அப்பா
அம்மா
அண்ணா
தனக்கு
என ,
நட்சத்திரங்களுக்குப்
பெயர் வைத்துக் கொண்டிருந்த மகளுக்கு
நான்கு நட்சத்திரங்களே போதுமானதாயிருக்கிறது.

- ஆன்டன் பெனி

அனிமேசன் வகைமையில் 2001-ஆம் ஆண்டின் சிறந்த குறும்படமாக ஆஸ்கார் விருதை வென்றிருக்கிறது ‘ஃபாதர் அண்ட் டாட்டர்’. இதனை இயக்கிய மைக்கேல் டுடொக் டே விட் தற்போது வெளியான ‘தி ரெட் டர்ட்ல்’ என்ற முழு நீள அனிமேசன் திரைப்படத்தின் இயக்குனராவார். மேலும் இவர் இயக்கிய ‘தி மாங்க் அண்ட் தி ஃபிஷ்’ என்ற குறும்படம் ஒரு பிரபஞ்சத் தன்மைகொண்ட படைப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com