7. தீராநதியின் மீளாத்துயர்

2008-ஆம் ஆண்டின் 65-ஆவது வெனிஸ் இன்டெர்னேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில்
7. தீராநதியின் மீளாத்துயர்

‘Cinematography is a writing with images in movement and with sounds.’
― Robert BressonNotes on the Cinematographer

2008-ஆம் ஆண்டின் 65-ஆவது வெனிஸ் இன்டெர்னேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் கோல்டன் லயன் அவார்டை வாங்கிய ‘லேண்ட் அண்ட் ப்ரெட்’(Tierra y Pan) என்ற இந்த மெக்ஸிகன் குறும்படத்தை இயக்கிய இதன் இயக்குனர் கார்லோஸ் அர்மெல்லா (Carlos Armella) இதன் பாடுபொருளாக ஒரு நிலையழியும் வாழ்வை அகாலத்தில் வைத்து காலாதீத பிம்பங்களாய் அதன் மறையும் கோலத்தை மாயையாக பதிந்திருக்கிறார். எட்டு நிமிட வசனமில்லா இக்குறும்படம் ஏழேழு ஜென்மத்திற்கும் நம்மை தொடர்புறுத்தும்.

‘The most ordinary word, when put into place, suddenly acquires brilliance. That is the brilliance with which your images must shine’ 
― Robert Bresson

வெனிஸ் திரைப்பட விருதில், தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை ‘பயொனீரிங் இண்டி ஃபில்ம்மேக்கர்’ என்று பாராட்டிய பங்க் ஃபில்ம்மேக்கர் அமோஸ் போவும், இத்தாலிய சினிமா வரலாற்றாசிரியர் ஜியான்னி ரொன்டொலினொவும், திரைப்பட தயாரிப்பாளர் (coffee and cigarettes directed by jim jarmusch) http://www.ifp.org/ -யின் இயக்குனராக இருந்தவருமான ஜோனா விசென்டும் ‘ஒரே இடத்தை உற்று நோக்குவதன் மூலம் இருப்பும் இன்மையுமான நாடகீயம் துயரத்தையும் தனிமையையும் முன்வைத்து வரையப்பட்டிருக்கிறது’ என்று சொல்லி ஒருமனதாக இக்குறும்படத்தை அதன் உருவத்திற்காகவும் உள்ளடக்கத்திற்காகவும் தேர்வு செய்தனர்.

‘My movie is born first in my head, dies on paper; is resuscitated by the living persons and real objects I use, which are killed on film but, placed in a certain order and projected onto a screen, come to life again like flowers in water’
― Robert BressonNotes on the Cinematographer

தன்னுடைய குறும்படம் வெனிஸ் விருதை வென்றிருக்கிறது என்று கேள்விப்பட்டவுடன் ஆச்சரியமும் மகிழ்வும் அடைந்ததாக சொல்கிறார் கார்லோஸ் அர்மெல்லா. மெக்ஸிகோவில் ப்யூப்ளா என்னுமிடத்தில் படப்பிடிப்பு நடத்தியதாகவும் வெறும் இருபதாயிரம் டாலர்கள் செலவழித்ததாகவும் மேலும் வசனங்களற்ற தன்மையினால் இக்குறும்படத்தை ஒரு பிரபஞ்சத்தன்மைக்கு கொண்டு வந்ததாகவும் சொல்கிறார்.

‘நம் வாழ்விலிருந்து ரத்தமும் சதையுமாய் பிய்த்து எடுக்கப்பட்ட ஒரு கதை ஊடக ஆளுமை உள்ள ஒருவரால் நேர்மையாக ஆத்ம சுத்தியோடு எந்த சமரசமும் இல்லாமல் கையாளப்படும்பொழுது அங்கு ஒரு நல்ல சினிமா உருவாக வாய்ப்பிருக்கிறது.’-பாலுமகேந்திரா

ரத்தமும் சதையுமான அப்படிப்பட்ட ஒரு கதைதான் இது. ஆழ்ந்த மௌனியாய் கேமரா தொடுவானை எட்ட ஆயத்தமாகி மெல்ல மெல்ல காலத்தையும் இடத்தையும் விஸ்தரிக்கிறது. அடிக்கட்டையில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட ஒரு சிறுநாயொன்று அரக்க பரக்க நிலைகொள்ளாமல் அலைமோதிக் கொண்டிருக்கிறது. குதூகலமாக அதை நோக்கி ஓடிவரும் குட்டைப்பாவாடை சிறுமியொருத்தி அதனுடன் விளையாடுகிறாள். பொட்டல் காடும் பழுப்பேறிய செம்மண் புழுதியும் இரைச்சலாகத் துவள வெளிச்சமும் இருளும் கூடிய மேகமூட்டங்களை ஆடையாக போர்த்திய மலைகளோடு அவ்விடம் பின்னனியில் கம்பீரமாய் நின்றுகொண்டிருக்க சட்டகம் விரிவு கொள்கிறது.

துள்ளி விளையாடும் இரு ஜீவன்களின் ஆத்ம களி நடனம் புரிய அவ்விடம் சொர்க்கத்தின் வருகையை பறை சாற்றிக்கொண்டிருக்கிறது. கொடிகளில் காய்ந்து கொண்டிருக்கும் துணிகள் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த ஒற்றை வீட்டின் அழகை எடுத்தியம்புகின்றன. வயிற்றுப் பிள்ளைத்தாச்சி ஒருத்தி பனிக்குடம் உடைந்து ரத்தப் பெருக்கோடு தள்ளாடி தள்ளாடி சத்தமிட்டவாறே நடந்துவருகிறாள். அந்நாய் அவளை கனிவுடன் பார்க்கிறது. சங்கிலியில் இருந்து விடுவிக்கப் போராடிய அதன் ஈனக்குரல் ஒரு பக்குவத்திற்குப் போகிறது. வலி பெறுக்கெடுத்த அம்மாவை கைத்தாங்கலாக வந்து அழைத்துப் போகிறாள் அந்த குட்டைப்பாவாடை சிறுமி.

காற்று பேரிரைச்சலோடு ஆக்ரோசத்தை அடிநாதமாகக் கைக்கொள்ள அச்சிறுமி அந்நாயைத் தாண்டி ஓடுகிறாள். சூல்கொள்ளும் மேகம் மௌன பாரத்தை பொழிய கொடித் துணிகளின் நெஞ்சு படபடவென்று துடிக்க ஆரம்பிக்கிறது. காரொன்றின் டயர் சத்தம் மண்ணில் உராய மறுபக்கம் குடிலொன்றின் முகப்பு அறிமுகமாகிறது. மூடப்படும் கார்க் கதவின் சத்தம் அடங்கும் முன் அச்சிறுமியின் தகப்பன் மின்னல் போல குடிசையை நோக்கி ஓடுகிறான். விரைவும் வேகமுமாக சிறுமியைப் பின் தொடர்கிறார் மருத்துவர். நாய் விடாமல் குரைத்துக் கொண்டிருக்க அச்சிறுமியோ வெளியில் கூடையொன்றை தரையில் போட்டு அதன் மேல் ஆயாசமாக அமர்கிறாள். அவ்வாசலில் அவளுக்குத் துணையாக அந்த வெற்று நிலமும் இருண்ட ஆகாசமும் மௌனமாக காத்துக் கிடக்கிறது.

சற்று நேரத்திற்குப் பிறகு மருத்துவர் அக்குடிலை விட்டு வெளியே வந்து தனது காரை நோக்கிப் போகிறார். மருத்துவப் பெட்டியை காரின் இருக்கையில் அமர்த்திவிட்டு மருத்துவ கோட்டை கழற்றி அதன் மேல் விட்டெறிகிறார். கார் விரைகிறது. குதூகலம் வடிந்த உடலோடு இசை தப்பிய நடையோடு வெளியே வரும் சிறுமி பொறுப்புடன் கொடியில் உலர்ந்து கொண்டிருக்கும் ஆடைகளை ஒவ்வொன்றாய் உருவி வீட்டிற்குள் எடுத்துப் போகிறாள். மணித்துளிகள் வடிய ஆரம்பிக்க வீட்டினுள்ளிருந்து வெளிவரும் அச்சிறுமியின் தகப்பன் இயலாமையில் ஓய்வுகொண்ட மனதோடு அந்நாயை சங்கிலியிலிருந்து விடுவிக்கிறான். அதுவரை போராடிக் கொண்டிருந்த அந்நாய் பிணைப்புச் சிறையிலிருந்து விடுபட்டு அவ்வெளியை விட்டே ஏகுகிறது.

சட்டகம் மேலும் விரிவு கொள்ள வீட்டினுள் சென்றவன் வெண்துணி போர்த்தப்பட்ட பச்சிளங் குழந்தையை ஒரு கையிலும் மறுகையில் மண் தோண்டி ஒன்றையும் ஏந்தி வருகிறான். வீட்டின் முன்புறம் சற்று தள்ளி வந்து குழந்தையை மண்தரையில் கிடத்திவிட்டு ஒரு குழியைத் தோண்டுகிறான். பொட்டல் காட்டின் தொடுவானத்தின் முன் அக்குடிசை மெல்ல சோகத்தில் உறைய ஆரம்பிக்கிறது. துயரம் தனது கணத்தை அதிகரிக்க அச்சிறுமிக்கு பொறுப்புணர்வு கூடி புதைக்கப்பட்ட அக்குறைப்பிரசவ ஆன்மாவிற்காக மண்டியிட்டு அச்சவக்குழியின் முன் பிரார்த்தனை செய்கிறாள். அவளின் மனம் குழந்தைதன்மையிலிருந்து அடுத்தகட்ட முதிர்ச்சியை நோக்கி நகர்கிறது. இருண்ட வானம் தற்போது வெளிச்சம் பரவ பளிச்சென்று நிர்மலமாக காட்சியளிக்கிறது. அடுப்பெரிக்க பயன்படும் மரக்கட்டைகள் தூரத்தே கிடக்க இரைச்சல் வண்டின் ரீங்காரம் இன்மையை இரைகிறது. தூரத்திலிருந்து ஓடிவரும் விசுவாசமும் நன்றியும் மிகுந்த அவ்வீட்டின் பாசமிகு பைரவ வாகனம் பிஞ்சின் சவக்குழியை கிளற ஆரம்பிக்கிறது. கிதார் இசை அதிர ஆரம்பிக்க படைப்பில் பங்களித்தோரின் பெயர்கள் ஓடி மறைய மனமும் மனமின்மையும் பிரபஞ்ச ரகசியங்களை நம் காதில் ஓத ஆரம்பிக்கின்றன.

ஏனோ இக்கணம் இக்கவிதை மனதில் மெல்ல மேலெழுகிறது.

ஒரு சிறு குருவி
 

என் வீட்டுக்குள் வந்து 
தன் கூட்டை கட்டியது ஏன் ?

அங்கிருந்தும் 
விருட்டெனப் பாய்ந்தது ஏன் ஜன்னலுக்கு ?
பார் ஜன்னல் கம்பிகளை உதைத்து
இப்பவும் விருட்டென்று தாவுகிறது அது 
மரத்திற்கு
மரக்கிளையினை
நீச்சல்குளத்தின் துள்ளுபலகையாக மதித்து
அங்கிருந்தும் தவ்விப்பாய்கிறது
மரணமற்ற பெருவெளிக்கடலை நோக்கி

சுரேலென தொட்டது அக்கடலை என்னை
ஒரு பெரும் பளீருடன்
நீந்தியது அங்கே உயிரின் 
ஆனந்த பெருமிதத்துடன்

நீந்தியபடியே திரும்பிப் பார்த்தது தன் வீட்டை 

ஓட்டுகூரையெங்கும்
ஒளியும் நிழலும் உதிர் சருகுகளும்
உள் அறைகளெங்கும்
சிரிப்பும் அழுகையும் மரணங்களும்

-தேவதேவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com