3. காலக்கண்ணாடியின் ரஸவாதம்

கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?போனதெல்லாம்
3. காலக்கண்ணாடியின் ரஸவாதம்

‘நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் 
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ? 
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம் 
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? 

வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம் 

கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல்
புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?’ - மகாகவி பாரதியார்

அப்போது நான் ஆசான் பாலுமகேந்திராவின் சினிமாப் பள்ளியில் ஃபிலிம் மேக்கிங் கோர்ஸ் படித்துக்கொண்டிருந்தேன். ஒரு நாள் செக்கோஸ்லோவாகியா இயக்குனர் ஜிரி மென்செலின்(Jiri Menzel) ‘க்ளோஸ்லி வாட்ச்டு ட்ரெய்ன்ஸ்’ (Closely Watched Trains) என்ற திரைப்படத்தைப் பற்றி ஆசானிடம் சிலாகித்துக்கொண்டிருந்தேன். அதன் சினிமேட்டோக்ராபிக்கல் காம்போசிசனை முக்கியமாக குறிப்பிட்டேன். அதன் பாதிப்பு ஆசானிடம் இருப்பதாக சொல்லி ஆச்சரியப்பட்டேன். அத்திரைப்படத்தை தான் புனே திரைப்படப் பள்ளியில் சினிமேட்டோக்ராபி படித்தபோது பார்த்ததாகச் சொல்லி மிகவும் குஷியானார். அத்திரைப்படம் இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்ட செக்கொஸ்லோவாகியாவின் ஒரு ரயில் நிலையத்திற்கு பயிற்சியாளனாக வந்துசேரும் ஒரு இளைஞனின் முதல் காம எதிர்கொள்ளலைப் பற்றி பேசுகிறது. இத்திரைப்படம் ஹாஸ்யத்தையும் துன்பவியலையும் பிசைந்து எழுதிய இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த செக் எழுத்தாளர் காட்சி கவிஞன் பொஹுமில் ஹ்ராபலின் (Bohumil Hrabal) நாவலைத் தழுவியது. ஆசான், திரைப்படத்தில் அந்த இளைஞன்  ரயில்வே அலுவலக முத்திரையை இளம் பெண்ணின் பின்புறத்தில் விளையாட்டாக குத்தும் காட்சி இன்னும் தனக்கு மனதில் நிழலாடுவதாக சொல்லி பெருமூச்சுடன் கன்னத்தில் கைவைத்து காலக்கண்ணாடியின் ரஸத்தைப் பூசலானார்.

பிறகு வந்த நாட்களில் நானும் ஆசானும் செக்கின் புதிய அலை சினிமாவின் முக்கிய இயக்குனரான ஜிரி மென்செலின் மற்ற திரைப்படங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அதில் ஜிரி மென்செல் இயக்கி ஆசான் அதுவரை பார்த்திராத ஒரு குறும்படத்தை அவருக்கு திரையிட்டுக் காட்டினேன்.அது;

Ten Minutes Older : The Cello (2002) / Jiri Menzel (Segment 'One Moment')

ஜிரி மென்செல்
ஜிரி மென்செல்

‘காலத்தைப் பிரதிபலித்தல்’ என்ற ஒரே கருவை மையமாக வைத்து ஐரோப்பாவின் எட்டு மிக முக்கியமான இயக்குனர்கள் தனித்தனி குறும்படங்களாக இயக்கி தொகுத்த இக்குறும்பட தொகுப்பில் ‘ஒரு கணம்’ என்ற தலைப்பில் கனிந்த நிலையில்  வாழ்ந்த-வாழும்-வாழப்போகிற காலத்தை துண்டுதுண்டான காட்சிகளாக முன்பின்னாக நினைவு கூறும் நிஜ நடிகர் Rudolf Hrusínský-ன் மனதை அழகாகப் படம் பிடிக்கிறார் ஜிரி மென்செல். பத்து நிமிடமே நீளும் இக்குறும்படம் அம்மனிதனின் ஆலகால வாழ்வை நுட்பமாக எடுத்தியம்புகிறது.

திரைத்துறையினருக்கான ‘திரும்பிப் பார்த்தல்’ வீடியோ காட்சிகளைப்போலத் தோன்றினாலும் இது அதுவல்ல. இக்குறும்படத்தை போஸ்ட் மாடர்னிசக் கூறான சுயத்தைப் பிரதிபலித்தல் (Self Reflexive) என்ற தளத்தில் வைத்தும் பார்க்கலாம். செக் நடிகர் ருடோல்ஃப் ஹ்ருசின்ஸ்கி-யின் திரைப்பட பிம்பங்களின் தொகுப்பின் வழியாக ஒரு சாமான்யனின் வாழ்வனுபவங்களாகவும் இக்குறும்படத்தைப் பார்க்கலாம். எது எப்படியோ வயது முதிர்ந்த ஒருவர் தன் கடந்த மற்றும் கடக்கப் போகின்ற காலங்களை கனிவான நிலையில் அசைபோடுகிறார். கவித்துவம் ஸ்பரிசமும் கொண்ட கானமாக மனதில் இசை மீட்டுகிறது. இந்த மனதின் இசை குறும்படத்தில் ஒலிக்கும் செல்லோ மற்றும் பியானோவுடன் கைகோர்த்து நம் மனதில் நிழலாக ஆடுகிறது.

ஆசான் தனது மறுபடியும் திரைப்பட டைட்டில் கார்டில் இப்படி ஒரு வரி போட்டிருப்பார்; ‘என்னை நானாக்கிய எல்லாப் பெண்களுக்கும் சமர்ப்பணம்’

புகைப்படம் நன்றி : ஆர்.சிவாஜி ராவ் 
புகைப்படம் நன்றி : ஆர்.சிவாஜி ராவ் 

இக்குறும்படம் அப்படிப்பட்ட கருவைத் தான் உள்ளடக்கியிருக்கிறது. இது நமது காதல் மன்னனுக்கும் பொருந்தி வரக்கூடிய கருதான். பாலுமகேந்திராவுக்கும்-ஜிரி மென்செலுக்கும்-கமலஹாசனுக்கும் உள்ள பொருத்தப்பாடாகவும் இதை கைக்கொள்ளலாம்.

44-ஆவது கோவா ஃபிலிம் ஃபெஸ்டிவலில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர் ஜிரி மென்செல். ஜிரியை விழாவில் பாராட்டிப்பேசியவர் நமது கமலஹாசன். ஹாஸ்யம் என்பது தீவிரமான விஷயங்களிலிருந்து பிறக்கவேண்டும் (‘good comedy should be about serious things') என்ற கமலின் வார்த்தைகளை முன்னமே மொழிந்தவர் ஜிரி மென்செல். செக் கலாசாரத்தை தனது படங்களில் பிரதியெடுத்த ஜிரி மென்செல் ஒரு தேர்ந்த நாடக இயக்குனர் மட்டுமல்லாது ஒரு சிறந்த நடிகரும்கூட. பாலுமகேந்திராவுக்கும் ஜிரிக்கும் உள்ள படைப்பாக்க ஒற்றுமை என்பது கவித்துவ யதார்த்தம் (Lyrical Realism) என்ற காட்சிப்படுத்தும் தன்மைதான். பாலுமகேந்திராவைப் போலவே ஜிரியும் திரைப்படப் பள்ளியில் (Prague Film School) பயின்றவர்.

அதீத அயற்சியும், ஓய்வை வேண்டி நிற்கும் மனமும், காமம் தின்னும் காதலும், பிரிவாற்றாமையும், வேட்கையும், முதிய பருவமும், குணமுரண்களுமாய் ஒரு மனிதனின் வாழ்வை அழகாகவும் ஆழமாகவும் படம் பிடிக்கிறது இந்த ‘ஒரு கணம்’. வார்த்தைகளற்ற மெதுவாக அலையும் சட்டகங்கள் கொண்ட இக்குறும்படம் ஹ்ருன்ஸ்கியின் திரைப்பட ஃபுட்டேஜ் மட்டுமல்ல. நம் நிலையழியும் வாழ்வுகூடத்தான். காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் கோலமும் பொய்களோ? அங்கு குணங்களும் பொய்களோ? - இது பாரதி. நெஞ்சிலிட்ட கோலமெல்லாம் - இது ஆசான் பாலுமகேந்திரா. நான் ஆசானிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்த ‘தலைமுறைகள்’ திரைப்படத்தின் ஆரம்ப காலத் தலைப்பு அதுதான்.

‘ஒரு கணம்’ குறும்படத்தின் உள்ளடக்கம் இதுவே. நீர் அளைதல் முடிந்து ஜிரி மென்செல் கையொப்பம். ஒரு கணம் என்று டைட்டில் கார்டு. முதியவர் ஒருவர் ஆப்பிள் தோட்டத்தில் குளிரில் ஊடுபாவும் கதிருடன் மந்தகதியில் ஆப்பிள்களின் மீது தலை சாய்ந்தவாறு விரவிக்கிடக்கிறார். மல்லாந்து படுத்தவாறே மரத்தில் பழுத்திருக்கும் ஒரு ஆப்பிளைப் பார்க்கிறார். நினைவுகள் மேலெழும்புகின்றன. இளம் வயதில் அதே தோட்டத்தில் பெரிய தள்ளுவண்டியில் ஆப்பிள்களை தள்ளிக்கொண்டு வருகிறார். மகிழ்வாக ஓரிடத்தில் வந்தமர்ந்து முடிகோதி தனது முதிய பருவத்தை நோக்கி புன்னகையை வீசுகிறார்.

நினைவு மீள மீண்டும் ஆழ கல்லூரிக்கு தாமதமாக வரும் அந்த இளைஞன் வகுப்புத் தோழியிடம் அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு சத்தமில்லாமல் பதவிசாக போய் தனது இருக்கையில் அமர்கிறான். வானுயர மைதானத்தில் குழந்தையைப்போல் ஏத்தலக்கா பூத்தலக்கா எனும் சீசா விளையாட்டு விளையாடுகிறான். படித்துப் பட்டம் வாங்கிய கையோடு தனிமையில் சமையலறையில் அமர்ந்து கத்தியில் காய்கறிகளை விட்டுவிட்டு மரப்பலகை மேஜையை குத்திக்கொண்டிருக்கிறான். கைக்குழந்தையோடு முகம் இறுக்கமாக தனது மனைவியுடன் பேசிக்கொண்டிருக்கிறான். ஒரு கையில் தீப்பந்தத்துடனும் மறுகையில் குத்தீட்டியுடனும் இரவில் தனிமையில் நடுஆற்றில் நின்றுகொண்டு  மீனை குத்திப் பிடிக்கிறான். இளைஞன் பதின் மனநிலையிலிருந்து தந்தைமை மனநிலைக்கு இடம் பெயர்வதைப் பார்க்கிறோம். இடையிடையே இரு பருவங்களுக்கிடையே ஊடாடுவதையும் பார்க்கிறோம். காட்டில் காய்ந்த செதுக்கிய மர உருளைகளின் மீது அமர்ந்துகொண்டு ஆப்பிளை லாவகமாக தூக்கிப்போட்டு பிடித்துக்கொண்டிருக்கிறான். கண்ணாடியில் முகம் பார்த்து தலைவாரி சிகரெட் பைப்பை வாயில் வைத்து ஒரு கணம் நின்று பார்க்கிறான். ஒப்பனை மேஜையின் மீது காதலியின் புகைப்படம் இருக்கிறது. சோலையில் ஓடி படுத்தவாறே எதையோ கண்ணுற்று அதிர்ச்சியாகிறான். நினைவு மீள முதியவர் நின்றுகொண்டிருக்கிறார். தற்போது முதியவரின் இளமைப் பருவம் சிகரெட் பைப்பை பற்றவைத்து புகைத்துக்கொண்டிருக்கிறது.

டைட்டில் கார்டு மேலெழ அதில்;

'பத்து நிமிடங்கள்

கொஞ்சூண்டு நேரந்தான்'

இளைஞன் பியானோவை வாசிக்கிறான். அதே ஆப்பிள் தோட்டத்தில் வைத்து படுத்தவாறே இரட்டை ஜடை போட்ட தனது காதலியை முத்தமிடுகிறான். வைக்கோல் பசுமைக்கு திரும்பும் அளவுக்கு அவளின் ஈரம் கசியும் உதட்டை முத்தமிடுகிறான். இதுவரை நினைவில் எழுந்த இக்காட்சிகளெல்லாம் கருப்பு வெள்ளையில் முளைக்கின்றன. மீள் காட்சிகள் அனைத்தும் வண்ணமயமாக அரும்புகின்றன . மீள் தளத்தில் ஒத்தையடிப்பாதை மாட்டுவண்டித்தடத்தில் குஷியாக ஓடிவரும் அம்முதியவர் விளைச்சலை வண்டியில் ஏற்றிவிட்டு சந்தைக்கும் போகும் அவசர மனநிலையில் அமர்ந்திருக்கும் தனது நடுத்தரவயது அழகான குண்டுப் பெண்மணி மனைவியை கட்டி அணைத்து முத்தமிட அவளோ கடுப்பாகித் திட்டுகிறாள். முத்த ஈரத்தை துடைத்துக்கொள்கிறார் இவர். மனம் மீண்டும் கருப்பு வெள்ளைக்கு பிரயாணம் போகிறது. ரெஸ்டாரண்ட் நடத்தும் அவ்விளைஞன் கஸ்டமர்களைக் கவனித்துக்கொண்டிருக்கும் தனது தாயை அவள் எதிர்பார்க்காத நேரத்தில் வாத்சல்யமாக கன்னத்தில் முத்தமிட அவளோ செல்லமாக அவனை அடிக்கிறாள். மனைவியை முத்தமிடுகிறான் அவளோ அவனை வெறுப்பில் தள்ளிவிட்டு வெளியேறுகிறாள். பிறகு இருவரும் படகு சவாரி போகின்றனர்.

தற்போது வேறொரு பெண்ணுடன் சற்றே முதிர்ந்த பருவத்தில் தனிமையில் சவாரி போகிறார். மனம் இறுகிக்கிடக்கிறது. தனி அறையில் அக்கன்னியோடு இணையத் துடிக்கும் இவரின் மனப்பதற்றத்தையும் குற்ற உணர்வையும் பியானோவின் ஒலி அழகாக தந்தியடிக்கிறது. அதே பெண்ணின் முகம் மீது காட்சி காலமாய் மறைய படுக்கையறையில் வேறொரு பெண்ணின் தனத்தின் கண் மீது கண்கொண்டு பூத்துக்கிடக்கிறார் நம் கதாநாயகர். அக்கூடலில் அவளிடம் தன் தாயின் அன்பைத் தேடுகிறார். அவ்வறையில் தன் மனைவியோடு கம்பீரமாக அவர் நின்றுகொண்டிருக்கும் புகைப்படமொன்று மாட்டப்பட்டிருக்கிறது. அவளின் தனக்கண்ணை ஆழ்ந்து நோக்கிக்கொண்டிருக்கும் அவரை முகக்கண்ணாடி ஒன்றை வைத்து பிரதிபலித்து கனவைக் கலைக்க முயற்சிக்கிறாள். விடுபடாததால் சன்னமாக இருமுகிறாள்.

அவரோடு சேர்ந்து நாமும் கனவு கலைகிறோம். நினைவு மீள்கிறது. ஆப்பிள் காய்கள் தொங்கிக்கொண்டிருக்கும் மரத்தின் அருகேயிருக்கும் இரும்பு முட்கம்பி வேலியின் பின்னிருந்து இவர் பார்க்கிறார். அங்கு இரண்டு இளம்பெண்கள் குட்டைப்பாவாடையணிந்து டென்னிஸ் மட்டையுடன் சின்ன மிதிவண்டிகளில் ஒய்யாரமாகப் போகின்றனர். பார்வையிலிருந்து மறையும்வரை அவர்களைப் பார்த்துக்கொண்டேயிருக்கும் இவரின் கன்னத்தை முட்கம்பி பதம் பார்க்கிறது. நமக்கு சுருக்கென்று வலிக்கிறது. பிறகு ஆப்பிள் மரத்தில் காயொன்றும் கனியொன்றும் அருகருகே காய்ப்பதையும் கனிவதையும் பார்க்கிறோம். அந்தப் பழம் நமது பெரியவரின் தொப்பி அணிந்திருக்கும் மண்டையின் மீது வீழ்கிறது. நினைவுக்கு வருகிறார். மெல்ல தலைதூக்கி மரத்தை அண்ணாந்து பார்க்கிறார்.

மீண்டும் டைட்டில் கார்டு

'பத்து நிமிடங்கள்

நம் வாழ்க்கை அப்படியொன்றும் பெரிதில்லை'

தற்போது கனவுக் காட்சிகள் தொடர்கிறது. வெற்றுடம்புடன் நடு ஆற்றில் நின்றுகொண்டு சுருட்டில் புகை வளித்துக்கொண்டிருக்கிறார் நம் பெரியவரின் நடுத்தர உருவம். மெல்ல மழை பொழிந்துகொண்டிருக்கிறது. சுருட்டை அணையவிடாமல் பாதுகாத்தவாறே மல்லாக்க நீந்திக்கொண்டே புகைக்கிறார். நமக்கு உடலில் சில் தொற்றி இதமாக சூடு பரவுகிறது. இடையூடாக கருப்பு வெள்ளையில் சிறுவயதில் பெருங்குவளையில் காஃபி அருந்துவதையும், வீதியில் யாருடனோ கோபாவேசமாக பேசுவதையும், கோட் சூட்டில் தனிமையில் அமைதியாக அமர்ந்து மது அருந்துவதையும், பெரும் புலால் ஒன்றை கடித்து தின்பதையும், வயலின் வாசிப்பதையும், கத்தையாக பணத்தை சட்டைப் பையிலிருந்து எடுப்பதையும், ஒற்றைக்கண்ணைக் கட்டிக்கொண்டு எதையோ கண்டுபிடித்துவிட்டதுபோல ஆச்சரியப்படும் முகத்தையும், கண்ணாடிப் பெருங்குவளையில் தழும்பும் பீர் நுரையை ஊதித்தள்ளுவதையும், தூக்குமாட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்யும் அவரின் நிராகரிப்பின் வலியும்... போன்ற காட்சிகள் காலத்தின் முன்பின்னாக இடைவெட்டாக வந்துவந்து போகிறது.

நெடிய மரங்களின் நடுவே அமர்ந்து நினைவில் ஆழ்ந்துகொண்டிருக்கும் பெரியவரின் நனவிலியை அவர் கையில் வைத்திருக்கும் அலாரக் கடிகாரம் கலைக்கிறது. மற்றொரு கையில் ஒரு சிறிய அழகான ரேடியோப் பெட்டியும் வைத்திருக்கிறார். மீண்டும் அதே சுருட்டு புகைப்புடன் நீந்துகிறார்.

படகோட்டியாக, போர்வீரனாக, காரோட்டியாக, தொப்பியை கம்பீரமாக அணிபவராக வயது ஏற ஏற தொடர்ந்து காட்டப்படும் அவரின் முகங்கள் அகவாழ்வை முக்காலத்தரையில் கோலமிட்டுக் காட்டுகின்றன. பியானோவின் ஒலி உச்சஸ்தாயிற்கு நகர நாடிதளர்ந்த அம்முதியவரின் காலம் மீண்டும் இளமைக்குத் திரும்புகிறது. ஆப்பிள்களை தள்ளுவண்டியில் கொண்டுவந்து ஓரிடத்தில் நிறுத்திவிட்டு சக்தி ததும்ப பார்க்கிறார்.

மீண்டும் அதே காட்சி.

இளைய வயதில் அதே தோட்டத்தில் பெரிய தள்ளுவண்டியில் வைத்து ஆப்பிள்களை தள்ளிக்கொண்டு வருகிறார். மகிழ்வாக ஓரிடத்தில் வந்தமர்ந்து முடிகோதி தனது முதிய பருவத்தை நோக்கி புன்னகையை வீசுகிறார்.

...பத்து நிமிடங்கள்

டைட்டில் கார்டு மேலெழ திரை இருள்கிறது.

நம் நினைவுகள் அந்தரவெளியில் அலைவுற ஆரம்பிக்கிறது.

எனக்கு இக்கணத்தில் கவிஞர் திரிசடையின் இக்கவிதையை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டுமென்று தோன்றுகிறது.

நேற்றையக் கனவு
என் நேற்றையக் கனவில்
அந்தப் பாலம் தகர்ந்தது.
வெகுநாள் வருந்தி,
வியர்வை சிந்தி,
கல்லுடைத்து,
வெயிலில் வெந்து,
பகிர்ந்துகொள்ள எவருமற்ற நிலையில்
தனியே ஏங்கி அழுது
சிறுகச் சிறுக நான் கட்டி முடித்திருந்த
அந்தப் பாலம்
நேற்று என் கனவில் தகர்ந்தது
மீண்டும் அதைக்கட்ட
எனக்குக் காலம் இல்லை.
காலம் இல்லையென்றால் கனவேது?
கனவு இல்லையென்றால் ஆக்கமேது?
என் கனவை உணர்ந்த ஒரு இதயம்
எனக்காக அதைக் கட்டும்
தன் கனவில்.

- திரிசடை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com