52. நிறை நோக்கு

மனிதர்கள் எத்தனையோ மதங்கள் அத்தனை என்றார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.


மனிதர்கள் எத்தனையோ மதங்கள் அத்தனை என்றார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். மதம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு கருத்து என்று பொருள். கருதுதல் கருத்தாகும். கரு என்பது தொடக்க நிலையைக் குறிக்கிறது. அந்தக் கருதான் உடலும், உயிரும் தாங்கி விரிகிறது. வளர்ந்து பக்குவமடைந்த கரு, மேலும் பல கருக்களின் உற்பத்திக்குக் காரணமாகிறது. இதேபோல்தான் ஒற்றைக் கருத்தே, பின்னர் பல்வேறு கருத்துகளுக்கும் பிறப்பிடமாக அமைகிறது.

உலகம் மற்றும் உயிர்களின் தோற்ற, இயக்கத்துக்கான கரு குறித்த கருத்துகளே தத்துவங்களாக விரிவடைந்தன. இவ்வாறு விரிவடைந்த கருத்துகளின், தத்துவங்களின் ஒருவகைத் தொகுப்பு மதமாகிறது. மனிதருக்கு மனிதர் இந்தக் கருத்து மாறுபடுகிறது. ஏன், ஒரு மனிதருக்கேகூட பல்வேறு தருணங்களில் பல்வேறு கருத்துகள் வந்துபோகின்றன. எப்போது எந்தக் கருத்து நம்மிடம் ஆளுமையாக இருக்கிறதோ அப்போது அதன் சொல்படி நாம் நடந்துகொள்கிறோம். உண்மை ஒன்றாக இருக்க அதனைப் பற்றிய கருதுகோள்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இந்த வேற்றுமையைப் பார்த்த நமது நாட்டு ஞானிகள், இதற்குள்ளே இருக்கும் ஒற்றுமையையும் கவனித்தார்கள். அதைத்தான் ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி (உண்மை ஒன்றுதான், அறிஞர்கள் பலவிதங்களில் மொழிகிறார்கள்) என்று கூறினார்கள். எல்லா நதிகளும் ஒற்றைக் கடலில்தான் கலக்கின்றன என்று சமத்துவம் பேசினார்கள், பேணினார்கள்.

ஒற்றுமை அல்லது சமத்துவம் என்பது எல்லாவற்றையும் ஒரேபோல, ஆங்கிலத்தில் ஸ்டீரியோஃபோனிக் என்று சொல்வார்களே அதைப்போல, ஒரே மாதிரி செய்துவிடுவதல்ல. மாறாக, வெவ்வெறு கருத்துகள் இருந்தும் அடிப்படையில் ஒத்துப்போவது, தன்னைப்போல் பிறரைச் சமமாக பாவிப்பது என்பதே இதன் உட்பொருள். இதனைப் புரிந்துகொள்ளாமல், நாம் நினைப்பதையே மற்றவர்களும் நினைக்க வேண்டும், நமது கருத்துக்கு ஏற்பவே மற்றவர் கருத்தும் இருக்க வேண்டும் என்ற மனப்போக்கு, பக்குவமடையாத மனங்களில் ஆட்சி செலுத்துகிறது. இந்த மனப்போக்கு உள்ளவர்களின் எண்ணிக்கை பெருகுவதாலும், அவர்கள் தங்களது மனமாற்றத்தைவிட மற்றவர்களின் மதமாற்றத்துக்கே முக்கியத்துவம் அளிப்பதாலும் மதவெறி தலைக்கேறி, போர்கள் நிகழ்கின்றன. ஒருபுறத்தில் பயங்கரவாதமும் மறுபுறத்தில் வெறுப்புணர்வும் பரவுகின்றன. இதுபோன்றவர்களுக்கு மதம் என்பது தாம் கொண்டிருக்கும் கருத்து அல்ல, யானையை பீடிக்கும் ஒருவித வெறிநோயைப் போன்றதே மதம் ஆகும். இதனால்தான், மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் என்று இறைவனிடம் வள்ளலார் இறைஞ்சுகிறார்.

மதம் என்பது மனிதன் தன்னைத்தானே மேம்படுத்துவதற்கான கருவியாக இருக்க வேண்டும். மாற்றானை மடியவைப்பதற்கான களனாக  இருந்துவிடக் கூடாது. மதம் என்பது மனிதனைப் பக்குவப்படுத்துவற்கான சாதனமாக இருக்க வேண்டும். மாற்றானை பதைக்கச்செய்யும் ஆயுதமாக இருந்துவிடக் கூடாது. இதில் பாரதம் உறுதியாக இருந்ததால்தான், குறிப்பிட்ட மதம் என்பதைவிட மதங்களை மீறிய ஆன்மீகத்தை உயர்த்திப் பிடித்தது. வழிபடு கடவுள் வேறாக இருந்தாலும், பின்பற்றும் மதம் வெவ்வேறாக இருந்தாலும், ஆன்மீகம் என்ற தளத்தில் ஹிந்துக்கள், அதாவது இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்தனர். இந்தப் பக்குவத்தைத்தான் அக்காலந்தொட்டே உலகுக்கு அருட்கொடையாக பாரதம் வழங்கி வருகிறது. இதனால்தான் அக்காலத்திலேயே தத்துவ பூமிகளாக விளங்கிய கிரேக்கமும் (கிரீஸ்), ரோமாபுரியும் (இத்தாலி) பாரதத்துக்குத் தலைவணங்கின. சமயத்தையும், பண்பாட்டையும் சமைத்த பழங்கால நாகரீக பூமிகளான மிச்ர தேசமும் (எகிப்து), பாரசீகமும் (ஈரான்) பாரதத்தை உயர்வாய் மதித்தன.

உலக மக்கள் அனைவரும் ஒரே இனம், நாம் ஒவ்வொருவருமே தெய்வத்தின் அம்சங்கள் என்பதே பாரத ஆன்மீகத்தின் அடிநாதம். இதைத்தான் நவீன யுகத்தில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் சுவாமி விவேகானந்தர் முழங்கினார். வசுதைவ (வசுதா ஏவ) குடும்பகம், அதாவது உலகில் உள்ள அனைவருமே ஒரே குடும்பத்தினர் என்பதே பாரதீய தத்துவங்களின் மையக் கரு. இதையே மகாகவி காளிதாஸர், ஸ்வதேசம் புவனத்ரையம் என்றுரைத்துள்ளார். இதன் பொருள், மூவுலகும் நம் சொந்த ஊரே. இவற்றின் உட்பொருளைத்தான் பச்சைத் தமிழில் யாதும் ஊரே யாவரும் கேளிர் (எல்லாம் நம்நாடே, எல்லோரும் நண்பர்களே) என்றார் சங்கத் தமிழ்ப் புலவர் கணியன் பூங்குன்றனார். இவ்வாறு கொள்கை ரீதியில் உலக ஒற்றுமை, நல்லிணக்கத்தை உலகுக்கு உபதேசித்த பாரதத்தின் மக்களிடையே, நடைமுறை ரீதியில் ஒற்றுமை, நல்லிணக்கம் இல்லாதது கொடுமையான முரண். எனினும் நமது முன்னோர்கள், பெரியோர்கள் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். இடையில் நாம்தான் வழிதவறியிருக்கிறோம்.

ஜாதி, மதம், மொழி, பாலின அடிப்படையில் நம்மிடையே பாகுபாடுகள் நிலவுகின்றன. வேற்றுமைக்குள் ஒற்றுமை கண்ட முன்னோர்களின் வாரிசுகளாகிய நாம், ஒற்றுமைக்குள் வேற்றுமை காண்கிறோம். மனிதர்களுக்குள் இருக்கும் தெய்வீகத்தை உணர நம் முன்னோர்கள் பயிற்சியளித்தார்கள் என்றால், மனிதனுக்குள் இருக்கும் மிருகத்தனத்தை நாம் தட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறோம். ஜாதி வேற்றுமைகள், மதச் சண்டைகள், பெண்ணடிமைத்தனம் ஆகியவை இடைக்காலத்திலும் மொழிவெறி பிற்காலத்திலும் புகுந்துகொண்ட தீமைகள். இவற்றை அழிக்க வேண்டிய நாம் இவற்றுக்காக அழிந்துகொண்டிருக்கிறோம்.

ஹிமாலயம் சமாரம்ப யாவத் இந்து ஸரோவரம் யம் தேவம் நிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம் பிரசக்ஷதே என்கிறது பழங்கால சம்ஸ்கிருத சுபாஷிதம் ஒன்று. இமயமலை தொடங்கி இந்துமாக்கடல் வரையிலாக, தெய்வத்தால் நிர்மாணிக்கப்பட்ட இந்த நாடு ஹிந்துஸ்தானம் எனப்படுகிறது என்பது இதன் பொருள். ஹிந்துஸ்தான் என்றால் ஹிந்துக்களின் பூமி என்று பொருள். ஹிந்து என்பது இங்கே மதத்தைக் குறிக்கவில்லை. உண்மையில், ஹிந்து மதம் என்பதே குறிப்பிட்ட ஒரு மதத்தைக் குறிக்கும் சொல் அல்ல. பல்வேறு இந்திய மதங்களின் தொகுப்பே இது. ஹிந்துக்கள் எனப்படும் மக்களின் மதம் என்ற பெயரில் இங்கு தோன்றிய மதங்கள் அனைத்தும் ஹிந்து மதம் என்ற பொதுப் பெயரில் அழைக்கப்பட்டன, அழைக்கப்படுகின்றன. இமயமலை தொடங்கி ஹிந்து மகாசமுத்திரம் (இந்தியப் பெருங்கடல்) வரையான நிலப்பரப்புக்குள் வாழ்பவர்கள் ஹிந்துக்கள். அந்த வகையில், ஹிந்துக்கள் என்பதும் தற்போது இந்தியர்கள் என்பதும் ஒரே பொருளைத்தான் தருகின்றன.

இதனை ஆ சிந்தோ சிந்துபர்யந்தம் யஷ்ய பாரதா பூமிகா மாத்ரு பூஹு பித்ரு பூஹு புண்ய ஸ்சைவ ஸ வை ஹிந்து இதி ஸ்மிருதாஹ் என்கிறது மற்றொரு ஸ்லோகம். சிந்து நதி தொடங்கி, சிந்துமாக்கடல் (இந்தியப் பெருங்கடல்) வரையான இந்தப் பூமியை, யார் தங்கள் தாய் நாடாகவும், தந்தையர் நாடாகவும், புனித நாடாகவும் கருதுகிறோர்களோ அவர்கள் ஹிந்துக்கள் என்பது இதன் பொருள். ஆக, இந்தியாவை தாய் நாடாக, மூதாதையர் பூமியாக, புனித பூமியாக யாரெல்லாம் கருதுகிறார்களோ அவர்கள் எல்லாம் ஹிந்துக்கள்தான். இதில் எந்தவொரு வேறுபாடும் இல்லை. இதனைத்தான் பாரதியார், பாரத நாடு பாருக்கெல்லாம் திலகம் நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர் என்று நம் எல்லோருக்கும் சொல்லிச் சென்றார்.

சங்க இலக்கியங்களில், பத்துப்பாட்டில் ஒன்றான மதுரைக் காஞ்சியில், தலையானங்கானத்து செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடுகையில், புலவர் மாங்குடி மருதனார், பாரத நாடு குறித்து, தென் குமரி வட பெருங்கல் குண குட கடலா எல்லை என்று குறிப்பிடுகிறார். தெற்கிலே கன்யாகுமரியையும் வடக்கிலே பெருங்கல் பரப்பான இமயமலையையும், கிழக்கிலும் (குணக்கு) மேற்கிலும் (குடக்கு) கடல் பரப்பையும் எல்லையாகக் கொண்ட நாடு என்று இதற்குப் பொருள். இதேபோல், அகநானூற்றில், பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடுகையில், புலவர் காரி கிழார், வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும், குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும் குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும் என்று பாரதத்தின் எல்லை பற்றிக் கூறுகிறார். வடக்கிலே பனிபடர்ந்த நெடிய மலையும் (இமயமலை), தெற்கிலே குமரியாறும் (ஒருகாலத்தில் ஓடியது), கிழக்கிலே நீண்ட கரை மீது அலைகளை மோதுகின்ற கடலும், மேற்கிலே பழைமையான முதிர்ந்த கடலும் பாரதத்தின் எல்லைகளாக உள்ளன என்பது இதன் பொருள்.

வடக்கிலும், தெற்கிலும் இரு வேறு துருவங்களைப் போன்ற ஆன்மீகத் தத்துவங்களும், பண்பாடும் கோலோச்சவில்லை. மாறாக, வடக்கைப் போலவே தெற்கிலும் ஒருபோல, வெவ்வேறு ஆன்மீகத் தத்துவங்களும், பண்பாடுகளும் இணைந்து நடைபயின்றன. வேள்வி, வடவர்க்கு அதாவது தற்போது சிலரால் ஆரியர் என்று அழைக்கப்படுவோருக்கு மட்டுமே உரியது அல்ல. தென்னவர்க்கும் உரியது. இதனை பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி பாண்டியன், சோழ மன்னன் ராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆகிய பெயர்களால் அறியலாம். மகாபாரதப் போரின்போது கௌரவர், பாண்டவர் ஆகிய இருதரப்பிலும் சேராமல் நடுநிலையோடு இருதரப்புப் போர் வீரர்களுக்கும் இலவசமாக உணவு வழங்கியவன் என, சேர மன்னன் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் பாராட்டப்படுகிறான்.

சங்க இலக்கியங்களில் வேள்விகள் மற்றும் அவற்றைச் செய்யும் வேதியர் கடமைகள் குறித்து பல பாடல்கள், குறிப்புகள் உள்ளன. பரிபாடலில் திருமால் (விஷ்ணு) வேதத்தின் உட்பொருளாக வர்ணிக்கப்படுகிறார். ஏறத்தாழ வேதத்தைத் தமிழ் செய்ததுபோல் அது ஒலிக்கிறது. அதேநேரத்தில் சிவபெருமானை வேத முதல்வன், காரி உண்டிக் கடவுள் (ஆலகால விஷமருந்தியவர்), மணிமிடற்றோன் (நீலகண்டன்), பழையோன், கண்ணுதல் (நெற்றிக்கண்) கடவுள் என்றெல்லாம் சங்க இலக்கியங்கள் வர்ணிக்கின்றன. பிரும்மனை ஆதி அந்தணன் என்றும் அழைக்கின்றன. தேவர்களின் தலைவனாகிய இந்திரனுக்கு இந்திரக் கோட்டம் என்று கோவில் இருந்ததும், இந்திர விழா உள்ளிட்ட சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டதும் சங்க இலக்கியங்கள் மற்றும் சிலப்பதிகாரத்தின் மூலம் அறியப்படுகின்றது. வேத இலக்கியங்களின் துர்க்கைதான் தமிழ்ச் சங்க இலக்கியங்களில் கொற்றவையாகக் காணப்படுகிறாள்.

ராமாயணத்தில், பாண்டியனின் கபாடபுரம் (மதுரைக்கு முந்தைய தலைநகர்) பற்றி புகழ்ந்து பேசப்படுகிறது. மேலும், சீதைப் பிராட்டியை ஹனுமன் முதன்முதலில் கண்டபோது, தாம் மிருதுவாக் (மென்மொழியில்) என்றும் மதுரபாஷா (இனியமொழி) என்றும் அழைக்கப்படும் மொழியில் பேச வேண்டும் என்று முடிவெடுத்துப் பேசியதாகவும் ராமாயணம் தெரிவிக்கிறது. இந்த மிருதுவாக் என்பதும் மதுரபாஷா என்பதும் தமிழ் மொழியன்றி வேறென்ன? (ஒருவேளை, தொன்மதுரைச் சங்கத்தில் பேசப்பட்டதால்கூட மதுரபாஷா என்று பெயர் பெற்றிருக்கலாம். இந்திய மொழிகளிலேயே அழுத்தி உச்சரிக்கும் வல்லின வர்க்க எழுத்துகள் இல்லாததால், தமிழ் மென்மையான, இனிமையான ஒலிப்பைக் கொண்டிருப்பதாகப் புகழப்படுகிறது).

பாரதியார் சொல்வார் – தமிழர்களின் காத்தவராயன் சாமி என்பது, வேதத்தில் கூறப்படும் காற்றுக் கடவுளான வாயு பகவான்தான். இதேபோல் வாக் தேவியாகிய சரஸ்வதிதான் தமிழில் பேச்சு அம்மனாகிய பேச்சியம்மன். சில கிராம ஆலயங்களில் உள்ள தர்மராசா - யம தர்மராஜன். யமம் என்றால் நெறிமுறை என்று பொருள். நெறிமுறைப்படி தர்மத்தைக் காப்பவனே, காலன் என்ற யம தர்மராஜன். நமது மாரியம்மன்தான் வடக்கிலே சீதளாதேவி. நமது கிராமப்புறங்களில் உள்ள ஏழு அன்னையர் வழிபாடு, வடக்கில் சப்தமாதா வழிபாடாக உள்ளது. முனீஸ்வரர் சிவனாகவும், கருப்பணசாமி விஷ்ணுவாகவும் காணப்படுகிறார்கள். ஐயனார் அல்லது அய்யனார் எனப்படும் தமிழ் கிராமச் சாமி, சாட்சாத் பிரும்மன்தான். யோகியாகிய முனீஸ்வரனுக்கு கள்ளும், சுருட்டும் படைப்பார்கள். இவையெல்லாம் சித்த புருஷர்களுக்கு மனத்தைக் கிளறி கட்டுப்படுத்தும் மருந்துகள். கருப்பணசாமிக்கு ஆடு வெட்டி பலி போடுவார்கள். காப்பாற்றும் கடவுள் வலிமையாக இருப்பதுடன் நம்மீது தனிக் கருணை காட்ட வேண்டும் என்பதற்கான கிராமப்புற மக்களின் அபிலாஷைகளே இதுபோன்ற வழிபாட்டுக்குக் காரணம். ஆனால், அய்யனாருக்கு மது, மாமிசம் ஆகாது. அவர் மிகத் தூய்மையானவர். ஏனெனில் பிரும்மம் முழுத் தூய்மையானது. ஐயன் என்றால் தலைவன் என்று பொருள். ஆர் என்பது மரியாதைக்குரிய விகுதி. இந்த ஐயனார் பிரும்மா என்ற தனி ஒருவராக மட்டுமின்றி ஹரி, ஹரன் ஆகியோரின் புத்திரனாகவும் வர்ணிக்கப்படுவது, பிரும்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மூன்றும் சேர்ந்ததே பிரும்மம் என்பதைக் குறிக்கவே. விருமாண்டி என்ற விருமனும் பிரும்மன்தான்.

சுப்ரமணியனே முருகப்பெருமான். சு பிரஹ்மண்யம் என்றால் சிறந்த பிரும்மம் என்று பொருள். அவரே தெய்வங்களின் படைத்தலைவனான தேவசேனாபதி. வேதத்தின் பிரும்மணஸ்பதியே அரச மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் பிள்ளையார். இரண்டும் ஒற்றை ஆற்றலின் இரு வடிவங்கள் என்பதையே முருகனும், பிள்ளையாரும் சகோதரர்கள் என்ற கருத்துரு குறிக்கிறது. ஒற்றை ஆற்றலே பலவாக விரிகிறது என்பதைத்தான் சிவனில் பாதி சக்தி, சக்தியின் சகோதரன் விஷ்ணு, பிள்ளையாரும், முருகனும் சிவசக்தியின் குழந்தைகள், ஹரிஹர ஐக்கிய ரூபம்தான் ஐயனாராகிய பிரும்மன் என்பதெல்லாம் விளக்குகின்றன. கருத்துருக்களைச் சொல்வதற்கு நம் முன்னோர்கள் கதை புனைந்தார்கள். நாம் கதை நாயகர்களுக்காகச் சண்டை போட்டு, கருத்தைத் தொலைத்துவிட்டோம்.

ஆன்மா இல்லை என்ற நாத்திகமும், கடவுள் இல்லை என்ற நிரீஸ்வர வாதமும்கூட தத்துவ விசாரத்தின் முதல் படியாக பாரதீய மெய்ஞானத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இவை குறித்த இலக்கியங்கள் தமிழைவிட சம்ஸ்கிருதத்தில்தான் அதிகம் உள்ளன. வேதத்தின் ஷட்தர்சனங்களில் ஒன்றாகிய சாங்கியம், நிரீஸ்வர வாதம் பேசுவதை ஏற்கெனவே கண்டோம். அதேநேரத்தில் தமிழகத்தில் இயற்கைவாதம் இருந்தாலும்கூட இறையியல் அழுத்தமாகப் பதிந்திருப்பதை சங்க இலக்கியங்களில் காணப்படும் கருத்துகள், குறிப்புகள் மூலம் அறியலாம். ரிக் வேதத்தில் இடம்பெற்றுள்ள பல விஷயங்கள் தமிழகம் சார்ந்தவை என்பது சில ஆய்வாளர்களின் கருத்து. சங்க இலக்கியங்களில் வேத, புராணக் குறிப்புகள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. பாரதீய மெய்ஞானத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பை தமிழகமே வழங்கியுள்ளது. வேதாந்திகளாகிய சங்கரரும் (அன்றைய காலடி, சேர ஆட்சிக்கு உட்பட்டதே), ராமானுஜரும் தமிழர்களே. சங்கரர் திராவிட சிசு (தமிழ்க் குழந்தை) என்று திருஞானசம்பந்தரைக் குறிப்பிடவில்லை, தன்னையே அவ்வாறு குறிப்பிடுகிறார் என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அந்நியப் படையெடுப்புகளால் பாரதீய மத சம்பிரதாயங்களுக்கும், பண்பாட்டுக்கும் அச்சுறுத்தல் எழுந்தபோது தமிழகத்தின் நாயன்மார்கள், ஆழ்வார்கள் தோற்றுவித்த பக்தி இயக்கமே அச்சுறுத்தலை முறியடித்து வெற்றிக்கொடி நாட்டியது. திருவள்ளுவரின் திருக்குறள், பாரதீய மெய்ஞானத்தின் அடிப்படைக் கோட்பாடுகளான அறம் (தர்மம்), பொருள் (அர்த்தம்), இன்பம் (காமம்) ஆகிய மூன்றையும் சிறப்புற எடுத்துரைத்து, நான்கு புருஷார்த்தமாகிய வீடு (மோக்ஷம்) பேறுக்கு நம்மை இட்டுச் செல்கிறது. சம்ஸ்கிருதத்தில் பல சாஸ்திரங்களில் விளக்கப்பட்டதை ஒரே நூலில் திருக்குறள் விண்டுரைக்கிறது. இந்த அற்புத இலக்கியத்தை இயற்றிய திருவள்ளுவர், தற்போது தாழ்த்தப்பட்டோர் என்று அழைக்கப்படும் குலத்தைச் சேர்ந்தவர் என்பது ஆதியில் இங்கு ஜாதி ரீதியிலான அடக்குமுறைகள் இல்லை என்பதையே உணர்த்துகின்றன. இதேபோல் தாய்க்குலம் என்றும் அனைத்துப் பெண்களையும் அம்மா என்றும் நம் முன்னோர்கள் அழைத்திருப்பதும், இன்றும்கூட நம்மில் சிலர் அழைப்பதும் பெண்மைக்கு சமத்துவத்தையும் விஞ்சித் தருகின்ற முக்கியத்துவத்தைக் குறிக்கிறது. இவற்றின் உட்பொருள் உணர்வோம். ஆகையால், பலவிதங்களில் பேதம் பேசி மாய்ந்தது போதும், நமது
முன்னோர்கள் வாழ்ந்ததைப்போல், காலம் காலமாகத் தோன்றி நமது ஆசார்யர்கள், சித்தர்கள், ஆன்மீகப் பெரியோர்கள் வலியுறுத்தியதைப்போல ஒற்றுமை, நல்லிணக்கம் பேணுவோம்.

பாரதம், உலகுக்கே ஆன்மீக வழிகாட்டி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. முதலில் நாம் நம்மை ஆத்ம பரிசோதனை செய்துகொள்வோம். பல விதங்களிலும் இருக்கும் பாகுபாடுகளை, பண்பாட்டுச் சீரழிவுகளைக் களைந்து நம்மை சீர்படுத்துவோம், மேம்படுத்துவோம். அதன் வழியில் உலகையும் வழிநடத்துவோம்.

முக்தி என்பது விடுதலை அடைவது. தீய எண்ணங்களில் இருந்தும், பலவீனத்தில் இருந்தும், அறியாமையில் இருந்தும், கீழ்மையில் இருந்தும், தீய செயல்களில் இருந்தும் நாம் விடுதலை அடைவோம். நன்மையையே நினைப்பதன் மூலமும் செய்வதன் மூலமும் நாம் வாழுகின்ற பூமியையே சொர்க்கமாக, பரலோக சாம்ராஜ்யமாக, வைகுண்டமாக, கைலாஸமாக, இறைவன் உறையும் உலகமாக உயர்த்துவோம். இறைவன் எங்கோ வானில் ஒளிந்துகொண்டிருக்கவில்லை. நம்மோடும், நாம் காணும் அனைத்திலும் கலந்திருக்கிறார். ஆண்டவன் உண்டு என்றால், அது நமக்குள்ளே உண்டு என்று பொருள், ஆண்டவன் இல்லை என்றால், நாம் கருதிக்கொண்டிருக்கும் மதங்களில் (கொள்கைகளில்) மட்டுமே அவர் இல்லை என்று பொருள்.

நிறைவாக, தத்துவ தரிசனத்தின் நோக்கத்தைக் கூறுகின்ற எனது கவிதையோடு இக் கட்டுரைத் தொடரை நிறைவு செய்கிறேன்.

நிறை நோக்கு

இருப்பது யாதென கேள்வி பிறந்தது
இருப்பது மறைவின் இன்னொரு தோற்றமோ
இருப்பது இயல்போ இயற்றிய படைப்போ
இருப்பதன் பின்னே இல்லைதான் உளதோ
இருப்பது இயன்ற பொருட்கள் சேர்க்கையோ
இருப்பது அறிவன் அறிவிலி பிணைப்போ
இருப்பது வினைகளின் இடர்படு களமோ
இருப்பது விதியின் இயல்புறு வலியோ
இருப்பது அணுக்கள் கலந்ததன் விளைவோ
இருப்பது அறிவின் அற்புத ஆற்றலோ
இருப்பது விருப்பினால் நடத்திடும் வேள்வியோ
இருப்பது நிலையிலாச் சலனத்தின் தொடர்ச்சியோ
இருப்பது ஒன்றின் கனவின் காட்சியோ
இருப்பது ஒன்றின் எல்லையிலா நீட்சியோ
இருப்பது ஒன்றின் ஆடலின் பொருட்டோ
இருப்பது ஒன்றுதான் உரைப்பது பலவிதம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com