50. விவேக நாதம்

இப்பேர்ப்பட்ட ஞானிகள் நிறைந்த நாட்டுக்கு (இறைவன் குறித்து போதிக்க) கிறிஸ்தவ பாதிரியார்களை அனுப்புகின்ற நாம் எவ்வளவு முட்டாள்தனமானவர்கள் என்பதை உணர்கிறோம்

செப்டம்பர் 11 – அமெரிக்காவின் வாயிலாக அகிலத்தைப் புரட்டிப்போட்ட அற்புத தினம். உலக மக்கள் அனைவரும் ஒரே குடும்பத்தினர் (வசுதைவ குடும்பகம்) என்ற பாரதத்தின் அதி உன்னத சகோதரத்துவ தத்துவத்தை உலகம் உணர்ந்துகொண்ட தினம். பாம்பாட்டிகளின் தேசம் என்று அதுவரை பரிகசித்துவந்த பாரதத்தை மேலைநாட்டினர், பாருக்கே வழிகாட்டி என்று கொண்டாடத் தொடங்கியதற்குப் பிள்ளையார் சுழி போட்ட தினம். 1893-ம் ஆண்டின் அன்றைய தினத்தில்தான் கீழைநாட்டின் ஞானசூரியன் மேலைநாட்டில் உதயமானது. ஆம்! சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் அன்றைய தினம் நடைபெற்ற சர்வ சமய மாநாட்டில்தான், தனது நாவசைவால் பாரதத்தின் ஞானக்கதிர்களை உலகெங்கும் பாய்ச்சினார்.

“அமெரிக்காவின் சகோதரிகளே, சகோதரர்களே” (சிஸ்ட்ர்ஸ் அண்ட் பிரதர்ஸ் ஆஃப் அமெரிக்கா) என்ற அவரது முதல் வாசகமே, அரங்கில் அமர்ந்திருந்த சுமார் இரண்டாயிரம் அறிஞர்களையும் ஒரே நேரத்தில் சுண்டியிழுத்து, எழுந்து நின்று கரவொலி எழுப்பச் செய்தது. ஓசை அடங்கியதும் சுவாமிஜி சொன்ன வார்த்தைகள் அங்கிருந்தோர் ஊனைத் துளைத்து உணர்வில் தைத்தன. “உலகின் மிக இளைய நாட்டை (அமெரிக்காவை), உலகுக்கு சகிப்புத்தன்மையையும் உலகப் பார்வையையும் போதித்த வேத ரிஷிகளின் மரபில் வந்த, உலகின் பழைமையான மதத்தைச் சேர்ந்த ஞானிகள் நிறைந்த தேசத்தின் (இந்தியாவின்) சார்பில் வாழ்த்துகிறேன்” என்றார். மேலும், “வெவ்வேறு பகுதிகளில் தோன்றி ஓடும் வெவ்வேறு நதிகளின், அவை நேரானவையோ குறுகலானவையோ, நீர் அனைத்தும் இறுதியில் ஒரே கடலில் சேருவதைப்போல, மனிதர்கள் பின்பற்றும் அனைத்துப் பாதைகளும் (மதங்களும்) இறுதியில் அந்த ஒற்றை இறைவனைச் சேர்கின்றன” என்றும் “என்னை நோக்கி வருபவர்கள் எவ்வடிவத்தில் இருந்தாலும் அவர்களை நான் சென்றடைகிறேன், அனைத்து மனிதர்களும் பல்வேறு பாதைகளில் போராடி வந்தாலும் என்னையே வந்தடைகின்றனர்” என்றும் சிவ மஹிமா ஸ்தோத்திரத்தில் கூறப்படும் வாசகங்களையும் எடுத்துரைத்தார். சர்வ சமய மாநாடு என்பதன் நோக்கம், சுவாமிஜியின் வாக்குகளில் பிரகாசித்தது.

சுவாமிஜியின் சிகாகோ உரை குறித்து, சர்வ சமய மாநாட்டின் தலைவர் ஜான் ஹென்றி பர்ரோஸ் இவ்வாறு புகழ்ந்துரைத்தார் – “மதங்களின் தாயாகிய இந்தியா, சுவாமி விவேகானந்தரால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டார். காவி உடை அணிந்த அந்தத் துறவி அவையோரை மிகவும் கவர்ந்தார்”. சுவாமிஜியின் உரை குறித்து அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான நியூயார்க் ஹெரால்டு எழுதிய விமர்சனம் என்றும் நினைவில் கொள்ளத்தக்கது. “சுவாமி விவேகானந்தர் சர்வ சமய மாநாட்டில் பங்கேற்ற மாபெரும் மனிதர் என்பதில் சந்தேகமில்லை. அவரது உரையைக் கேட்ட பிறகு, இப்பேர்ப்பட்ட ஞானிகள் நிறைந்த நாட்டுக்கு (இறைவன் குறித்து போதிக்க) கிறிஸ்தவ பாதிரியார்களை அனுப்புகின்ற நாம் எவ்வளவு முட்டாள்தனமானவர்கள் என்பதை உணர்கிறோம்” என்று எழுதியிருந்தது.

இவ்விதம், மனிதர்களின் தெய்வீக நிலையை பாரதீய ஞானத்தின் மூலம் செப்டம்பர் 11-ம் நாள் சுவாமிஜி உலகுக்கு உணர்த்தினார் என்றால், 2001-ம் ஆண்டில் அதே செப்டம்பர் 11-ம் தேதியன்று அதே அமெரிக்காவில் உலகுக்கு மனிதர்களின் அரக்க குணத்தை வெளிப்படுத்தியது பயங்கரவாதம். ஆம்! அன்றுதான் நியூயார்க்கின் இரட்டை கோபுரம், அல் காய்தா பயங்கரவாதிகளால் விமானத்தைக் கொண்டு மோதி தகர்க்கப்பட்டு, விலைமதிப்பற்ற பல உயிர்கள் பலியாகின. இந்த பயங்கரவாதச் சூழல், சுவாமிஜியின் கருத்துகள் உலக அரங்கில் ஓங்கி ஒலிப்பதற்கான தேவையைச் சுட்டிக்காட்டுகிறது.

சுவாமிஜி வெறும் கொள்கை வேதாந்தி அல்லர், நடைமுறை வேதாந்தி. உலக சகோதரத்துவத்தை உச்சாடனத்தால் அல்ல, உயர் செய்கைகளால் உருவாக்க முனைந்தவர். சமுதாயத்துக்குத் தொண்டாற்ற எஃகு போன்ற தசைகளை இறைவனிடம் வேண்டியவர். அமைதியை நிலைநாட்டுவதற்கான போராட்டத்துக்குத் தயங்காதவர். பகவத் கீதை பாடம் கேட்கவந்த பலவீனமான இளைஞனிடம், ‘முதலில் கால்பந்து விளையாடி உனது உடல் வலிமையைப் பெருக்கு, பிறகு கீதை படிக்கலாம். ஏனெனில், அறத்தை நிலைநாட்டப் போரிடு என்று போதிக்கிறது கீதை. அதனைப் படித்தால் மட்டும் போதாது, செயலில் சாதிக்க உடல் வலிமையும் தேவை’ என்று முழங்கியவர் சுவாமி விவேகானந்தர்.

சிகாகோ உரையைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும், அதன் பின்னர் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் தொடர்ந்து ஆங்கிலச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி, ஹிந்து மதம் உள்ளிட்ட பாரதீய மெய்ஞானத்தின் பெருமையை உலகறியச் செய்தவர். மேலும், இறைவன் குறித்து வெளிஉலகுக்குப் போதிக்க பாதிரியார்களை அனுப்பிவந்த அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகளில், அந்நாட்டு மக்களுக்கு, இறைவனை தனக்குள் உணர்ந்துகொள்ளும் வேதாந்தம், யோகம் ஆகியவற்றைப் பயிற்றுவிக்கும் வேதாந்த மையங்களை நிறுவியவர். மாக்ஸ் முல்லர், பால் டூஸன் போன்ற மேலைநாட்டு இந்தியத் தத்துவயியல் அறிஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். மார்கரெட் எலிஸபெத் நோபிள் என்ற ஐரிஷ் பெண்மணியைச் சீடராக ஏற்று, சகோதரி நிவேதிதா என உலகறியச் செய்தவர். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இன்றளவிலும் வேதாந்தம் உள்ளிட்ட பாரதீய தத்துவ ஞானங்களை பயிற்றுவித்து பாதுகாப்பதுடன், கல்விப் பணி, சமூகத் தொண்டு ஆகியவற்றிலும் சிறந்து விளங்கும் ராமகிருஷ்ண இயக்கத்தையும் (ராமகிருஷ்ண மிஷன்), ராமகிருஷ்ண மடங்களையும் நிறுவியவர் சுவாமி விவேகானந்தர்.

ராமகிருஷ்ண மடம், பேலூர்

ஹிந்து மதத்தின் பெருமையை உலகறியச் செய்தவர் சுவாமி விவேகானந்தர் என்றால், அவரை உலகுக்கு வழிகாட்டும் துறவியாக அறிமுகம் செய்தவர், அவரது குருவும் மாபெரும் ஞானியுமான ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். பாரதத்தின் குரு-சிஷ்ய பரம்பரை எப்படி இருக்கும் என்பதற்கு உன்னத எடுத்துக்காட்டு இவர்கள் இருவரும். குருவால் சீடருக்குப் பெருமை, சீடரால் குருவுக்குப் பெருமை. இருவருமே ஒரே நாணயத்தின் இரு பக்கங்களைப்போல. சிவ-சக்தியின் வித்தியாசமான வெளிப்பாடுகள் இவர்கள் இருவரும். சிறுவயதில் சிவ சிவ என்றதுமே குறும்புகளைத் துறந்து தியான நிலையில் ஆழ்ந்துவிடுபவர் விவேகானந்தர் என்றால், காளி மீதான பக்தியால் பரவச நிலையில் திளைப்பவர் ஸ்ரீராமகிருஷ்ணர். ரிஷிகளுக்கே உபதேசம் செய்யும் ஞானகுருவாய் தட்சிணாமூர்த்தி சிவன் இருப்பதைப்போல, உலகை வலம்வந்து பல்வேறு தத்துவ ஆசிரியர்களுக்கே வேதாந்தத்தையும் உலக சகோதரத்துவத்தையும் போதித்த நவீன சிவகுருவாய் விவேகானந்தர் விளங்குகிறார். அதேநேரத்தில் அவரது சக்தியாய், ஞான ஆற்றலாய் வெளிப்பட்டது ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உபதேசங்களும், மேதைமையுமே.

விவேகானந்தர் பரிவ்ராஜகர் (சுற்றிவரும் துறவி) என்றால், ராமகிருஷ்ணரோ பரமஹம்ஸர் (உயர் ஞானத்தில் திளைப்பவர்). மாற்று முறையில் யோசித்தால், விவேகானந்தர் பாரதீய மெய்ஞானத்தை உலக அரங்கில் பரப்பிய இயங்கு சக்தி (சக்தி அல்லது விஷ்ணு) என்றால், அவரது சிந்தனையில் நிலைத்துநின்று வழிகாட்டிய நிலை சக்தி (சிவம்) ஸ்ரீராமகிருஷ்ணர். கடவுள் இருக்கிறாரா என்ற கேள்வியுடன் தன்னிடம் வந்த நரேந்திரன் என்ற இளைஞனுக்குக் கடவுளைக் காட்டியதுடன், அனைவருக்குள்ளும் ஆண்டவனைக் காணும் அனுபூதியையும் ஊட்டி விவேகானந்தராக உயர்த்தியவர் ராமகிருஷ்ணர். அதேநேரத்தில், தனக்குக் கிடைத்த உலகப் புகழையும், அபரிமித செல்வாக்கையும் குருநாதருக்கே அர்ப்பணம் செய்து, அவரது பெயரால் மாபெரும் இயக்கத்தை குரு காணிக்கையாக வடிவமைத்தவர் விவேகானந்தர்.

சூரிய ஒளி மிகுந்திருக்கும் காலத்தின் தொடக்கமும், விளைச்சலை அறுவடை செய்யும் பருவத்தின் தொடக்கமுமான உத்தராயண புண்ய காலத்தின் மகர சங்கராந்தி (தைப் பொங்கல்) தினத்தன்று, 1863-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி, கயஸ்தா க்ஷத்திரிய வகுப்பைச் சேர்ந்த விஸ்வநாத தத்தர் – புவனேஸ்வரி தேவி தம்பதியருக்கு ஒன்பது குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தார் நரேந்திரர். பெயர்தான் எத்தனை பொருத்தம், மனிதர்களின் தலைவர் என்றல்லவோ நரேந்திரர் என்பதற்குப் பொருள்! கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிய விஸ்வநாத தத்தரோ சீர்திருத்தவாதி. புவனேஸ்வரி தேவியோ தெய்வ பக்தி மிகுந்தவர். நரேந்திரனிடம் இரண்டு குணங்களுமே மிகுந்திருந்தன. சிறுவயதிலேயே துறவிகளையும், சாமியார்களையும் கண்டால் அவருக்கு கொள்ளைப் பிரியம். அதேநேரத்தில் துடுக்குத்தனமான பேச்சும், சேட்டைகளும் அதிகம். தொடர்ச்சியாக பெண் குழந்தைகள் பிறந்ததைத் தொடர்ந்து, ‘சிவபெருமானிடம் பிள்ளை வரம் கேட்டால், தனது பூதகணத்தில் ஒன்றையல்லவா அனுப்பியிருக்கிறார்’ என்று நரேந்திரன் பற்றி அவரது தாயார் புவனேஸ்வரி தேவி பரிகாசமாய் கூறுவதுண்டு.

இளைஞனாக வளர்ந்த நரேந்திரனுக்கு, பிரும்ம சமாஜத்திலும் கேசவ சந்திர சேன் தொடங்கிய நவ விதான் அமைப்பிலும் ஈடுபாடு ஏற்பட்டது. சிறுவயதில் தாம் மேற்கொண்ட உருவ வழிபாடு முட்டாள்தனமாகத் தோன்றியது. அதேநேரத்தில் வேதம், உபநிஷதங்கள், தத்துவங்கள் ஆகியவற்றிலும் சம்ஸ்கிருத, வங்காள மொழி இலக்கியங்களிலும் ஆர்வம் மிகுந்திருந்தது. இவற்றுடன் மேலைநாட்டுத் தத்துவங்கள், ஐரோப்பிய வரலாறு ஆகியவற்றையும் விரும்பிப் படித்தார். அக்காலகட்டத்தில் கடவுள் இருக்கிறாரா, அவரை நேருக்கு நேர் காண முடியுமா என்ற கேள்வி இளைஞர் நரேந்திரரைக் குடைந்தது. காணுகின்ற பெரிய மனிதர்களிடமும், தத்துவவாதிகளிடமும் இந்தக் கேள்வியைக் கேட்டார். ரவீந்திரநாத் தாகூரின் தந்தையும் பிரும்ம சமாஜத்தின் அப்போதைய தலைவருமான தேவந்திரநாத் தாகூரிடம் இக்கேள்வியைக் கேட்டபோது, ‘கடவுளைக் காண உனக்கு யோகியின் கண்கள் வேண்டுமப்பா’ என்ற பதில்தான் கிடைத்தது. ஆனால் இருவர் மட்டும் கடவுளைக் காண்பிக்கக்கூடிய ஆற்றல் பெற்ற மனிதரை நரேந்திரனுக்குக் காட்டினர். அந்த இருவரில் ஒருவர், கொல்கத்தா ஸ்காட்டீஷ் சர்ச் கல்லூரியின் முதல்வரும் தத்துவ ஞானியுமான வில்லியம் ஹேஸ்டீ. மற்றொருவர், பிரும்ம சமாஜத்தில் இருந்து பிரிந்து கிறிஸ்தவராக மதம் மாறி பின்னர் மீண்டும் ஹிந்துவாகி நவ விதான் அமைப்பை நிறுவியவரும் பிரபல எழுத்தாளருமான கேசவ சந்திர சேன். இருவருமே சுட்டிக்காட்டிய அந்த அற்புத மாமனிதர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர்.

படிப்பறிவில்லாத ஏழை பிராமணரான ஸ்ரீ ராமகிருஷ்ணர், தக்ஷிணேஸ்வர் என்ற இடத்தில் உள்ள காளி கோவிலில் பூசாரியாக இருந்தார். வில்லியம் ஹேஸ்டீ ஒருமுறை வில்லியம் வேட்ஸ்வொர்த்தின் கவிதை குறித்து நரேந்திரன் உள்ளிட்ட மாணவர்களுக்குப் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது, அதில் வரும் உலகை மறந்த பரவசநிலை (Trance) என்ற சொல்லுக்கு எடுத்துக்காட்டு காளி கோவில் பூசாரியான ராமகிருஷ்ணர் என்றும், அவரை மாணவர்கள் ஒருமுறை பார்த்து வர வேண்டும் என்றும் கூறினார். இதேபோல், ‘கடவுளை நேருக்கு நேர் காண முடியுமா?’ என்ற நரேந்திரனின் கேள்விக்கு, ‘ராமகிருஷ்ணரைப் போய்ப் பார்’ என்றார் கேசவ சந்திர சேன். கிறிஸ்தவராக மதம் மாறிய இவரை தமது அறிவுரைகளால் மீண்டும் தாய் மதத்தில் இணைத்தவர் ஸ்ரீராமகிருஷ்ணர். தனது கல்லூரி ஆசான் ஹேஸ்டீ மற்றும் அப்போதைய தத்துவ ஆசான் சேன் ஆகியோரின் தூண்டுதலால் ஸ்ரீ ராமகிருஷ்ணரைச் சந்தித்தார் நரேந்திரர்.

1881-ல் நிகழ்ந்த அந்தச் சந்திப்பு, ஆன்மீகத் தளத்திலும் இந்திய வரலாற்றிலும் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. கடவுளைக் கண்டிருக்கிறீர்களா என்ற நரேந்திரரின் கேள்விக்கு, ‘உன்னைக் காண்பதைப் போலவே அவரையும் காண்கிறேனப்பா’ என்று பதில் கூறியதோடு மட்டுமின்றி, ‘உனக்கும் காண்பிக்கிறேன்’ என்று நரேந்திரரைத் தொட்டார் ராமகிருஷ்ணர். உடலெங்கும் மின்சாரம் பாய்ந்ததுபோன்ற உணர்வு. நரேந்திரருக்குத் தூக்கிவாரிப் போட்டது. அது ஒரு தெய்வீக அனுபவம்தான் என்று உள்ளுணர்வு சொன்னது. ஆனாலும், அறிவு அதனை ஏற்க மறுத்தது. இந்த மனிதர் ஏதோ மாய தந்திர வேலை காண்பிக்கிறார் என்றே தோன்றியது. இருப்பினும், குழந்தை போன்ற ராமகிருஷ்ணரின் முகம் மீண்டும் மீண்டும் நரேந்திரரை தட்சிணேஸ்வர் காளி கோவிலுக்கு வரவழைத்தது. தொடக்கத்தில் ராமகிருஷ்ணரை தனது குருவாக ஏற்க மறுத்த நரேந்திரர், காளியைக் கண்டதாக ராமகிருஷ்ணர் கூறுவதும், பரவச நிலையை அடைவதும் வெறும் கற்பனை என்றும் மனப்பிறழ்வால் ஏற்படும் மாயக்காட்சிகள் என்றும் மறுதலித்தார். பரமாத்மாவுடன் ஜீவாத்மாவாகிய தம்மை இணைத்து ராமகிருஷ்ணர் கூறுவதும், அந்தப் பாவத்தில் (மனவோட்டத்தில்) திளைப்பதும் சுத்த முட்டாள்தனம் என்றும் விமர்சித்தார். ஆனால், சிறிது சிறிதாக ராமகிருஷ்ணரில் நரேந்திரர் கரைந்தார்.

1884-ல் விஸ்வநாத தத்தரின் திடீர் மறைவால், நரேந்திரரின் குடும்பம் செல்வச் செழிப்பிலிருந்து ஒரேயடியாக வறுமையின் பிடிக்குள் தள்ளப்பட்டது. தாயார், சகோதரிகள், தம்பி ஆகியோரைக் காப்பாற்றும் பொறுப்பு கல்லூரிப் படிப்பை முடித்திருந்த நரேந்திரரின் தோள்களில் விழுந்தது. அப்போது ஸ்ரீராமகிருஷ்ணரிடம் சென்ற நரேந்திரர், தனக்கு எப்படியேனும் பணம் (பொருள்) அளிக்குமாறு காளியிடம் வேண்டிக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். நீயே பிரார்த்தனை செய் என்றார் ராமகிருஷ்ணர். அதன்படியே காளி விக்ரகம் முன்பு நரேந்திரர் பிரார்த்தனை செய்தபோது, ‘உண்மை ஞானத்தையும் பக்தியையும் கொடு’ என்றே வேண்டிக்கொண்டார், தனக்குப் பொருள் வேண்டும் என்று கேட்கவில்லை. ராமகிருஷ்ணர் கூறியபடி மூன்று முறை பிரார்த்தனை செய்தபோதும் இதேதான் நிகழ்ந்தது. அப்போது ராமகிருஷ்ணர் சொன்னார், ‘நரேந்திரா உன் வாழ்வின் நோக்கம் இதுதான்’ என்று. அதையேற்று ராமகிருஷ்ணரின் சீடரானார் நரேந்திரர்.

1885-ல் குருவின் வழிகாட்டுதலால், நிர்விகல்ப சமாதி நிலை என்ற யோக சாதனையை எட்டினார் நரேந்திரர். இதனையடுத்து அவரையும் இதர சீடர்களையும் முறைப்படி மடாலயத் துறவிகளாக்கி, மானுட சேவையே மகத்தான மகேசன் சேவை என்ற உறுதிமொழியை ஏற்கச் செய்தார் ராமகிருஷ்ணர். 1886-ல் மற்றொரு மாபெரும் பொறுப்பு நரேந்திரரின் தோள்களில் விழுந்தது. தொண்டைப் புற்றுநோயை இரண்டாண்டுகள் அனுபவித்த ராமகிருஷ்ணர், நரேந்திரரை மடாலயத்தின் தலைவராக இருந்து மற்ற சீடச் சகோதரர்களைப் பராமரிக்கும் பொறுப்பை ஒப்படைத்து, மகா சமாதியானார். ராமகிருஷ்ணர் இருந்தவரை மடத்துக்கு அடிக்கடி வந்த அன்பர்களும் ஆதாரவாளர்களும், அவரது மறைவுக்குப் பின் வருவதை நிறுத்திக்கொண்டனர். சீடர்களின் தினசரி சாப்பாட்டுக்கே வழியில்லாமல் போனது. பிக்ஷை ஏற்று உண்ணநேர்ந்த நிலையிலும் யாசகத்தால் பொருள் ஈட்டி, முதலாவது ராமகிருஷ்ண மடத்தை பாராநகரில் ஸ்தாபித்தார் நரேந்திரர்.

இந்த இடத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரின் வரலாற்றை சற்று நினைவுகூர வேண்டும். வங்காளத்தில் ஹூக்ளி மாவட்டத்தில் காமர்புகார் என்ற கிராமத்தில் 1836-ம் ஆண்டு குதிராம் சட்டோபாத்யாய – சந்திரமணி தேவி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் கதாதரன் என்ற ராமகிருஷ்ணர். அவர் பிறப்பதற்கு முன்பு, அருகில் உள்ள விஷ்ணு கோவில் மூலவரான கதாதரர், தானே குதிராமுக்கு மகனாகப் பிறக்கப்போவதாகக் கனவில் கூறியுள்ளார். இதேபோல், சிவன் கோவிலில் இருந்து ஒளியொன்று தன் கருப்பைக்குள் நுழைவதைப் போன்ற காட்சியை சந்திரமணி தேவி கண்டுள்ளார். இப்படி தெய்வீக அனுபவத்தில் பிறந்த குழந்தை, சிறு வயதிலேயே தானும் தெய்வீக அனுபவத்தைக் காணத் தொடங்கியது. தனது 6 வயதில் நெல் வயலில் நடந்து சென்ற ராமகிருஷ்ணர், கருமேகத்தின் பின்னணியில் வெள்ளைக் கொக்குகள் பறப்பதைக் கண்டு பரவச நிலையை எட்டினார். இதேபோல், சிவராத்திரி தினத்தின்போது சிவனாக வேடம் பூண்டபோதும், விசாலாட்சி அம்மனை ஒரு முறை வணங்கியபோதும் பரவச நிலையை அடைந்துள்ளார். 7 வயதில் தந்தையை இழந்த ராமகிருஷ்ணர், அண்ணன் ராம்குமாரின் பராமரிப்பில் வளர்ந்தார். ராமகிருஷ்ணருக்கு 16 வயது இருக்கும்போது கொல்கத்தாவுக்கு குடும்பம் குடிபெயர்ந்தது. சம்ஸ்கிருதப் பள்ளி நடத்தியதுடன் தக்ஷிணேஸ்வர் காளி கோவிலில் பூசாரியாக தொண்டாற்றிய அண்ணன் ராம்குமாருக்கு உதவிகரமாக இருந்த ராமகிருஷ்ணர், பின்னர் அண்ணனின் மறைவுக்குப் பின்னர் தானே கோவில் பூசாரியானார்.

23 வயதான ராமகிருஷ்ணருக்கு 5 வயதே ஆன சாரதா தேவியுடன் திருமணம் நடந்தது. (அக்காலத்தில் இதுபோன்ற பால்ய விவாகம் சகஜம்). திருமணத்துக்குப் பிறகும் தனது பிறந்த வீட்டிலேயே இருந்து 14-வது வயதில் ராமகிருஷ்ணரிடம் சாரதா தேவி சேர்ந்தபோது, அவருக்கு வயது 32. அப்போது காளியின் நேரடிக் காட்சிகளால் ஆன்மீக உச்ச நிலையில் இருந்த ராமகிருஷ்ணர், தமது மனைவியான சாரதா தேவியையும், சாட்சாத் காளி தேவியின் அம்சமாகவே பார்த்தார். சாரதா தேவியும் ராமகிருஷ்ணரின் வழிகாட்டுதலால் ஆன்மீகத் தேர்ச்சி பெற்றார்.

பலவித பாவங்களில் (மனோநிலைகளில்) இறைவனின், அதாவது எல்லாம்வல்ல சக்தியின் இருப்பை உணர்ந்தார் ராமகிருஷ்ணர். அனைத்து மதங்களும் ஒரே உண்மையையே வெவ்வேறு விதங்களில் போதிக்கின்றன என்பதை அவரே நேரடி அனுபவத்தால் அறிந்தார். தாஸ்ய பாவத்தில் (தொண்டு மனநிலை) தன்னை ஹனுமானாக பாவித்துக்கொண்டு ராமர் விக்ரகத்தை ஆராதித்தார். ராமரின் சக்தியான சீதா தேவி தன் உடலில் புகுவதைப் போன்ற திருக்காட்சி கண்டார். 1861 முதல் இரண்டாண்டு காலம், பைரவி பிராமணி என்ற பெண் தாந்திரீக குருவிடம் தாந்திரீக சாதனைகளைப் பயின்றதுடன், மனத்தை அடக்கும் ஆற்றலைப் பெற்றார். பெண்களைத் தெய்வமென கொண்டாடும் உன்னத மனோநிலையையும் பெற்றார். யோகத்தின் மூலம் குண்டலினி சக்தியை உயர்த்தினார். அனைத்தின் மீதும் அன்பு செலுத்தும் மஹாபாவத்தில் (பெரிய மனநிலை) திளைத்தார். தாந்திரீகத்தின் மூலம் சித்திகளைப் பெற அவர் மனம் நாடவில்லை, இறை அனுபூதியையே நாடியது.

1864-ல், வைஷ்ணவ குரு ஜடாதாரி என்பவர் மூலம் விஷ்ணு பக்தியில் திளைத்தார். அப்போது ராமரைக் குழந்தையாகப் பாவித்து ஆராதிக்கும் வாத்ஸல்ய பாவம் (கருணை மனநிலை), ராதை உள்ளிட்ட கோபிகைகளுக்கு கிருஷ்ணர் மேல் இருக்கும் மதுர பாவம் (இனிய மனநிலை) ஆகியவற்றை சாதகம் புரிந்தார். காளியிடம் குழந்தைபோல் தன்னை ஒப்படைத்து சாந்த பாவத்தையும் (அமைதி மனநிலை) அனுபவித்தார். 1865-ல் தோத்தாபுரி என்ற அத்வைத சன்யாசியை குருவாக ஏற்று அத்வைத சாதனைகளைப் புரிந்தார். பிரும்மம் மாத்திரமே உண்மை, மற்றதெல்லாம் மாயை, நானும் பிரும்மமே, அனைத்தும் பிரும்மமே என்ற உயர் பக்குவத்தைப் பெற்றார். அத்துடன் நிர்விகல்ப சமாதி நிலையை, அதாவது இறைநிலையில் ஒன்றி தன்னிலை மறக்கும் நிலை என்ற அனுபவத்தைப் பெற்றார். பின்னர், சூஃபி துறவி ஒருவரிடம் இஸ்லாமிய தத்துவங்களைக் கற்றபோது, ஐந்து வேளை தொழுததுடன் உருவ வழிபாட்டையும் சில காலம் கைவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து கிறிஸ்தவர் ஒருவரிடம் பைபிள் பயின்று கிறிஸ்தவர் போலவும் வாழ்ந்து சாதகம் புரிந்தார். இவ்வாறு ஒவ்வொரு தத்துவங்கள், மதங்களின் வாயிலாக அவர் சாதகங்கள் புரிந்தபோதெல்லாம் அதற்கேற்ற தெய்வீகக் காட்சிகளைக் கண்டார். இவற்றின் விளைவாக அனைத்து மதங்களும், தத்துவங்களும் ஒரே உண்மையையே வெவ்வேறு வழிகளில் போதிக்கின்றன என்ற உயர் சமரச மனநிலையை ராமகிருஷ்ணர் எட்டினார்.

அனைத்திலும் ஆண்டவனே வதிகிறார், ஆன்மாவுக்கு ஆண் – பெண் பேதமில்லை, எங்கெல்லாம் ஜீவன் இருக்கிறதோ அங்கெல்லாம் சிவன் இருக்கிறார், ஜீவன்களுக்கு செய்யும் சேவையை ஈஸ்வரன் சேவை, எளிய மக்களுக்கு சேவை புரிவதே (தரித்திர நாராயண பூஜை) மிகச் சிறந்த வழிபாடு போன்ற உயரிய தத்துவங்களை சீடர்களுக்குப் போதித்தார். வெறும் போதனைகள் அல்ல, தான் வாழ்ந்துகாட்டி அதனைப் பிறருக்கு வழிகாட்டினார். இதற்கு ஓர் உதாரணம், ஒருமுறை ஒரு தாய் தனது மகன் அதிக இனிப்புகளை உண்கிறான், இதனால் உடல் நலனுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதால் அவனுக்கு அறிவுரை கூறுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு ஒரு வாரம் கழித்து வருமாறு ராமகிருஷ்ணர் கூறியுள்ளார். சரி என்று அவர்கள் ஒரு வாரம் கழித்து வந்தபோது, அந்தச் சிறுவனிடம் இனிப்புகளை அதிகம் தின்னக்கூடாது என்பதற்கான காரணங்களை அவனுக்குப் புரியும் வகையில் உபதேசித்தார். அருகில் இருந்த சீடர்கள் இதனை அன்றே உபதேசித்திருக்கலாமே என்று வினவினர். அதற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் சொன்னார், “அப்போது நானே அதிகம் இனிப்புகளை விரும்பி உண்டுகொண்டிருந்தேன். ஆகையால், முதலில் அந்தப் பழக்கத்தில் இருந்து என்னை விடுவித்துக்கொண்டுவிட்டு, இப்போது உபதேசிக்கிறேன்” என்று. ஊருக்குதான் உபதேசம் என்ற இன்றைய பல சாமியார்களை நினைத்துப் பார்த்தால், ராமகிருஷ்ணரின் அதி உன்னத பரிபக்குவத்தைப் புரிந்துகொள்ளலாம். மேலும், ராமகிருஷ்ணரின் கொள்கைச் செயலாக்கத்துக்கு, சாதி பேதமில்லை என்பதை வெறும் வார்த்தைகளால் அல்ல, தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த தனது சீடர் ஒருவரின் இல்லத்தின் கழிவறையை தானே சுத்தப்படுத்தி, மனிதர்கள் அனைவரும் சமம் என்பதை அவர் நிரூபித்ததையும் உதாரணமாகக் கூறலாம்.

புத்தரைப்போல எளிமையான சிறிய கதைகளைக் கூறி தமது சீடர்களையும், அன்பர்களையும், பக்தர்களையும் வழிநடத்தினார் ராமகிருஷ்ணர். நடைமுறை வேதாந்தம் குறித்த அவரது கதை பிரபலமானது. அனைத்தும் பிரும்மமே என்ற அத்வைத தத்துவத்தை குருவிடம் அரைகுறையாக அறிந்துகொண்ட சீடன் ஒருவன், ஒருநாள் வழியிலே சென்றபோது எதிரில் யானையைக் கண்டான். அதன் மேல் அமர்ந்திருந்து பாகன், யானைக்கு வெறி பிடித்துள்ளது ஒதுங்கிச் செல் என்று எச்சரித்தபோதிலும், அதுவும் பிரும்மம் நானும் பிரும்மம் என்று தொடர்ந்து பயணித்தான். விளைவு, யானை துதிக்கையால் அவனைத் தூக்கிப்போட்டது. குற்றுயிராகக் கிடந்த சீடன், தன்னைக் காண வந்த குருவிடம் கேட்டான். “நானும் பிரும்மம், யானையும் பிரும்மம். ஆனால் அது என்னை தூக்கி வீசிவிட்டதே”. அதற்கு குரு சொன்னார் – “யானைப் பாகனும் பிரும்மம்தானே. அவரது எச்சரிக்கையை நீ ஏன் கேட்கவில்லை?” என்று எதிர்க்கேள்வி கேட்டார்.

தனது குருவைப் போலவே சுவாமி விவேகானந்தரும் எளிய கதைகளைக் கூறி வழிநடத்துவதில் சமர்த்தர். அவரது கதைகளில் குறிப்பிடத்தகுந்தது ஆட்டுக்குட்டிகளுடன் வாழ்ந்த சிங்கக்குட்டி. மிகக் குழந்தைப் பருவத்தில் வழிதவறிய சிங்கக்குட்டி ஒன்று ஆட்டுக் கூட்டத்தில் இணைந்தது. அங்கே சில ஆட்டுக்குட்டிகளின் தாயிடம் தானும் ஓர் ஆட்டுக்குட்டியாக வளர்ந்தது. ஒருமுறை அந்தக் காட்டுக்குள் ஒரு சிங்கம் நுழைந்தபோது, மற்ற ஆடுகளுடன் சேர்ந்து தன் இனத்தைச் சேர்ந்த சிங்கம் ஒன்றும் ஓடுவதைப் பார்த்து வியந்தது. துரத்திச் சென்று அந்த சிங்கத்தைப் பிடித்தபோது, அது நடுங்கியது, என்னை விட்டுவிடு என்று கெஞ்சியது. அதற்கு அந்தச் சிங்கம், “நீயும் என்னைப்போல் சிங்கம், ஆட்டைப்போல் அஞ்சி ஓடுகிறாயே?” என்று கேட்டது. அப்போதும் தன்னை ஆடு என்றது அந்தச் சிங்கம். பிறகு நீர்நிலை ஒன்றுக்கு அழைத்துச் சென்று இரண்டின் உருவத்தையும் காண்பித்து, “பார்த்தாயா நானும் சிங்கம், நீயும் சிங்கம். ஆடு போல் மே,மே என்று கத்துகிறாயே. என்னைப்போல் கர்ஜனை செய்” என்றது. இப்போது தெளிவுபெற்ற ஆடாக இருந்த அந்தச் சிங்கம், தன்னை உணர்ந்து கம்பீரமாக கர்ஜனை செய்தது. இந்தக் கதையைக் கூறி, இவ்வாறுதான் அந்தச் சிங்கம் ஆட்டு மந்தைக்குள் வாழ்ந்து தன்னையும் ஆடு என்று கருதியதைப்போல, உடலுக்குள் வாழ்ந்துவரும் ஆன்மாவாகிய நாம், நம்மை உடலாகக் கருதி மயங்குகிறோம். ஆனால், நாம் அந்த இறைவனின் அம்சமாகிய ஆன்மா என்பதை உணர்ந்துகொண்டால் தெய்வீக நிலையை அடையலாம் என்றார் சுவாமி விவேகானந்தர். அவர் தொடங்கிவைத்த ராமகிருஷ்ண இயக்கம், ஆன்மீகம் மட்டுமின்றி கல்வி, மருத்தும், சமூகத் தொண்டு ஆகியவற்றிலும் உலகின் முன்னணி இயக்கமாகத் திகழ்கிறது.

அமெரிக்காவில் ஹிந்து சமயத்தின் பெருமையை நிலைநாட்டி, பின்னர் ஐரோப்பிய நாடுகளிலும் வெற்றிக்கொடி நாட்டிய சுவாமி விவேகானந்தர், வெற்றி வீரரைப்போல் கொழும்பு வழியாக கப்பலில் பாரதம் திரும்பியபோது, தமிழகத்தின் பாம்பன் மண்ணில்தான் அவரது காலடி முதலில் பதிந்தது. பாம்பன் கடற்கரையில் புரண்ட சுவாமி விவேகானந்தர், பாரதத் தாயின் மடியில் தவழ்ந்து தாம் ஆசிபெற்றதாக பரவசத்துடன் கூறினார். பின்னர் ராமேஸ்வரம், ராமநாதபுரம், மதுரை, கும்பகோணம், சென்னை என்று பல ஊர்களிலும் அவருக்கு வெற்றி பவனி நடத்தி வடமாநிலங்களுக்கு அனுப்பிவைத்தது தமிழகம். தமிழகத்தில் இருந்து கொல்கத்தா, பின்னர் அல்மோரா வரை சுவாமிஜி திக்விஜயம் செய்து சொற்பொழிவுகள் ஆற்றினார். இந்த உரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு கொழும்பு முதல் அல்மோரா வரை என்ற பெயரில் வெளிவந்துள்ளன. அவரது பல்வேறு உரைகளையும், கட்டுரைகளையும், கருத்துகளையும், ராமகிருஷ்ணரின் கதைகள், உபதேசங்களையும் ராமகிருஷ்ண மடங்களும், ராமகிருஷ்ண தபோவனமும் தொகுத்து பல நூல்களாக வெளியிட்டு வருகின்றன.

பாரதத்தின் பெருமையை அமெரிக்காவுக்குச் சென்று சுவாமி விவேகானந்தர் நிலைநாட்டியதற்கு மூலகாரணமே தமிழகம்தான். ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதிதான், சுவாமிஜி அமெரிக்கா சென்று, சிகாகோ சர்வ சமய மாநாட்டில் உரை நிகழ்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தியதுடன், அதற்கான அறிமுகக் கடிதத்தையும் தந்தார். அதற்கு முன்னர், 1892-ம் ஆண்டு டிசம்பர் 25, 26, 27 ஆகிய மூன்று தினங்கள் கன்யாகுமரி கடலின் நடுவே, பகவதி அம்மன் குமரி வடிவில் தவம் புரிந்த பாறையொன்றில், சுவாமி விவேகானந்தர் அன்னையின் அருளோடு தவமிருந்தார். இங்கேதான் ஆன்மீகத்தில் மட்டுமல்ல, சமூகப் பொருளாதார முன்னேற்றத்திலும் இந்தியர்களைத் தட்டியெழுப்பி, மீண்டும் முந்தைய மகோன்னத நிலைக்கு உயர்த்தத் தாம் பாடுபட வேண்டும் என்ற கைவல்ய ஞானத்தை சுவாமிஜி பெற்றார். இதுதான் சுவாமிஜியின் கன்யாகுமரி பிரதிக்ஞை எனப் புகழ்பெற்றது. இந்த உலகப்புகழ் பெற்ற பாறையில்தான், 1970-ல் விவேகானந்தர் பாறை நினைவு மண்டபம் எழுந்தது.

விவேகானந்தர் நினைவு மண்டபம்

சுவாமி விவேகானந்தர் தமது குருநாதர் ஸ்ரீராமகிருஷ்ணரை இறைவனின் அவதாரங்களில் மிகவும் உயர்ந்த அவதாரமாகக் கண்டார். குருநாதரைப் புகழ்ந்து அவர் இயற்றிய ஸ்லோகம் – அவதார வரிஷ்டானாம் ஸ்ரீராமகிருஷ்ணாய தே நமஹ – அவதாரங்களில் சிறந்தவரான ராமகிருஷ்ண தேவரை வணங்குகிறேன் என்கிறது. அதேநேரத்தில், தனது பிரதான சீடரான விவேகானந்தரை தான் வணங்கும் இறைவனே தனக்கு உதவி செய்ததற்காக அவதரித்திருப்பதாக ஸ்ரீராமகிருஷ்ணர் கருதினார். இவ்விதம் இறைநிலையை உணர்ந்து, அனுபவித்து, அனைவரும் அந்த இறைநிலையை எய்துவதற்கான வழியை ஸ்ரீராமகிருஷ்ணரும்-விவேகானந்தரும் குரு-சிஷ்ய ரூபத்தில் வாழ்ந்துகாட்டினார்கள். உலகின் குருவாய் பாரதம் எப்போதும் விளங்கிட ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர் சுவாமி விவேகானந்தர் உழைத்திட பேருதவி புரிந்தது தமிழகம்.

அத்தகு தமிழகத்தில், அந்தக் குருவும் சிஷ்யனும் ஒரே உருவில் தோன்றியதுபோல் பிறந்து, பாரதநாடு பாருக்கெல்லாம் திலகம் என்பதையும், அதன் உன்னத புதல்வர்கள் தமிழர்கள் என்பதையும் உணர்த்தினார் ஒரு மகான். அவர் குறித்து அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com