தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில்தான் நாட்டின் எல்லைகள் பாதுகாப்பாக இருக்கின்றன: அமித் ஷா

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில்தான் நாட்டின் எல்லைகள் பாதுகாப்பாக இருக்கின்றன என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில்தான் நாட்டின் எல்லைகள் பாதுகாப்பாக இருக்கின்றன: அமித் ஷா

அமிருதசரஸ், 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில்தான் நாட்டின் எல்லைகள் பாதுகாப்பாக இருக்கின்றன என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அந்த மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் அகாலிதளம் - பாஜக கூட்டணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "வளமிகு பஞ்சாப்' என்ற நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று அமித் ஷா பேசியதாவது:

இந்திய எல்லைப் பகுதிகளில் எந்த நாட்டு ராணுவத்தினர் வேண்டுமானாலும் அத்துமீறி நுழையலாம்; தாக்குதல் நடத்தலாம் என்றொரு காலம் முன்பு இருந்தது. அது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சிக்காலம். நேரு குடும்பம் ஆட்சி அரியணையில் அமர்ந்திருந்த காலம்.

ஆனால், தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இந்திய எல்லையில் அத்துமீறினால் அதற்கு இருமடங்கு விலை கொடுக்க வேண்டியிருக்குமே என எதிரி நாடுகள் அஞ்சுகின்றன.

அதையும் மீறி, நமது எல்லையில் எந்த நாடேனும் அத்துமீறலை அரங்கேற்றினால், அந்த நாட்டுக்கே சென்று நமது ராணுவம் தாக்குதல் நடத்துகிறது. எந்தக் காரணத்தைக் கொண்டும் நாட்டு மக்களின் நலனில் பிரதமர் மோடி சமரசம் செய்துகொள்ள மாட்டார்.

நாடு சுதந்திரமடைந்த பிறகு விவசாயிகளின் நலனுக்காகவும், ஏழைகள், தலித் மக்களின் நலனுக்காகவும் அதிகம் பாடுபடுவது பிரதமர் மோடி தலைமையிலான அரசு மட்டுமே. ஏழைகளின் வாழ்வை மேம்படுத்துவதற்காக புதிய திட்டங்களை மோடி அரசு கொண்டு வந்துள்ளது. திட்டங்களைக் கொண்டு வருவதுடன் மட்டுமல்லாமல் அவை முறையாக மக்களைச் சென்றடைகிறதா என்பதும் தற்போது உறுதி செய்யப்படுகிறது.

பஞ்சாபைப் பொருத்தவரை, அகாலி தளம் - பாஜக கூட்டணி ஆட்சியில் அனைத்து துறைகளும் முன்னேறியுள்ளன. இந்த வளர்ச்சி தொடர வேண்டுமானால், நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அகாலி தளம் - பாஜக கூட்டணிக்கு நீங்கள் (மக்கள்) ஆதரவளிக்க வேண்டும்.

பஞ்சாப் மக்கள் மீது சிறிதும் அக்கறை இல்லாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றார் அமித் ஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com