நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல்: வீடு வீடாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் முதல்வர் நாராயணசாமி

நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான முதல்வர் வி.நாராயணசாமி வெள்ளிக்கிழமை வீடு வீடாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல்: வீடு வீடாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி, 

நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான முதல்வர் வி.நாராயணசாமி வெள்ளிக்கிழமை வீடு வீடாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

கடந்த பேரவை தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி புதுவையில் வென்ற நிலையில் தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி முதல்வர் பதவி ஏற்றார். இந்நிலையில் அவர் போட்டியிட ஏதுவாக நெல்லித்தோப்பு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து வரும் நவம்பர் 19-ம் தேதி நெல்லித்தோப்பு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி வேட்பாளராக முதல்வர் நாராயணசாமியை கட்சித் தலைமை அறிவித்து விட்டது.

இந்நிலையில் அவர் வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு பிள்ளைத்தோட்டம் பகுதியில் பிரசாரத்தை தொடங்குவார் என தெரிவிக்கப்பட்டது. அத்தொகுதியில் சனிமூலையாக கருதப்படும் அப்பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் வழிபாடு நடத்திய பின் நாராயணசாமி திருவள்ளுவர் சாலையில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்.

காங்கிரஸ்-திமுக அரசின் 3 மாத சாதனைகள், செயல்பாடுகள், முந்தைய ஆட்சியின் செயல்பாடுகளை சீர்தூக்கி பார்த்து வாக்களிக்குமாறு அவர் பிரசாரத்தின் போது வலியுறுத்தினார்.

அவருடன் முன்னாள் முதல்வர் ஆர்வி.ஜானகிராமன், திமுக அமைப்பாளர்கள் இரா.சிவா, எஸ்.பி.சிவக்குமார், காங்கிரஸ் நிர்வாகிகள் ஏகேடி. ஆறுமுகம், பிரேமலதா, ஜான்குமார், எம்.எல்.ஏக்கள் தீப்பாய்ந்தான், விஜயவேணி, திமுக நிர்வாகிகள் உள்பட பலர் உடன் சென்றனர். பின்னர் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சித் தலைமை என்னை நெல்லித்தோப்பு தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளது. எங்கள் ஆட்சியின் 3 மாதகால சாதனைகள், செயல்பாடுகள், புதுவை மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு, அமைதி, தொழில்கொள்கை, சுற்றுலா வளர்ச்சி போன்றவை குறித்து பிரசாரம் செய்வோம்.

மக்கள் எங்களை நிச்சயம் வெற்றி பெறச் செய்வர். நானும் ஜான்குமாரும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்போம். திமுக, கூட்டணி கட்சியினர் எங்களுக்கு ஆதரவு தருவர். தேர்தல் பிரசாரத்துக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் மேலிட தலைவர்கள் குலாம்நபி ஆசாத், முகுல்வாஸ்னிக், சின்னாரெட்டி ஆகியோர் வருவதாக தெரிவித்துள்ளனர் என்றார் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com