பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க உலக நாடுகள் ஒன்றுபட வேண்டும்: பிரணாப் அழைப்பு

பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கு உலக நாடுகள் ஒன்றுபட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அழைப்பு விடுத்தார்.
பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க உலக நாடுகள் ஒன்றுபட வேண்டும்: பிரணாப் அழைப்பு

புது தில்லி, 

பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கு உலக நாடுகள் ஒன்றுபட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அழைப்பு விடுத்தார்.

தில்லியில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூரின் "உலகளாவிய நிர்வாகம் குறித்த ஆசிய மன்றம்' அமைப்பின் சார்பில் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசியதாவது:

பயங்கரவாதத்துக்கு எந்த சித்தாந்தமும் கிடையாது. மனித நேயத்தை அழிக்க வேண்டும் என்பதே அதன் கோட்பாடு ஆகும். இந்த அச்சுறுத்தலை தனிப்பட்ட நாடுகளால் எதிர்கொள்வது கடினம் ஆகும். எனவே, இந்த அச்சுறுத்தலை உலகில் இருந்து நீக்குவதற்கு உலக நாடுகளும், ஐ.நா. சபை போன்ற உலக மன்றங்களும் ஒன்றுபட வேண்டும். எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான உலகை விட்டுச் செல்வதற்கு பயங்கரவாத அச்சுறுத்தலை நாம் தோற்கடிப்பது அவசியமாகும்.

பயங்கரவாதிகள், கடற்கொள்ளையர்கள் போன்றவர்களால் அறிவிக்கப்பட்ட போர்களும், அறிவிக்கப்படாத போர்களும் நடைபெற்று வருகின்றன. பயங்கரவாதத்தால் இந்தியா நீண்டகாலமாக பாதிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில், பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது எளிதான காரியம் அல்ல. உலகில் எந்த நாடும் தங்களை பாதுகாப்பான நாடு என்று கூறிக்கொள்ளும் நிலை தற்போது இல்லை. இதற்கு பயங்கரவாதமே காரணம் ஆகும். உலகம் முழுவதும் பயங்கரவாதம் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது.

இந்த நூற்றாண்டு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், ஐ.நா. சபை, உலக வர்த்தக அமைப்பு போன்றவை இல்லை. நிகழ்காலத்தை பிரதிபலிக்கும் வகையில், ஐ.நா. சபையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். வளர்ச்சித் தொடர்பான நமது இலக்குகள் போதாது; நிலையான வளர்ச்சியே நமக்குத் தேவைப்படுகிறது.

இந்தியா வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நாடாக இருந்தபோதிலும், 40 கோடி பேர் மின்சார வசதியின்றி உள்ளனர். கடந்த 13 மாதங்களில் நிலையான வளர்ச்சி இலக்குகள், பாரீஸ் பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம் ஆகிய 2 முக்கிய ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது என்றார் பிரணாப்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com