பொன் விழாவை கொண்டாட தயாராகும் தில்லி உயர் நீதிமன்றம்!

தில்லி உயர் நீதிமன்றம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைவதை  யொட்டி, பொன் விழா வரும் திங்கள்கிழமை (அக்.31) கொண்டாடப்பட உள்ளது.
பொன் விழாவை கொண்டாட தயாராகும் தில்லி உயர் நீதிமன்றம்!

புது தில்லி, 

தில்லி உயர் நீதிமன்றம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைவதை  யொட்டி, பொன் விழா வரும் திங்கள்கிழமை (அக்.31) கொண்டாடப்பட உள்ளது.

காகித பயன்பாடில்லா நீதிமன்ற நடவடிக்கை என பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி செயல்படுத்தி வரும் தில்லி உயர் நீதிமன்றம் வரும் நாள்களில் சட்ட நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையில் வழக்கு விசாரணைக்கு சம்பந்தப்பட்டவர்கள் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் அவர்களை தொலைக்காட்சி மூலம் நேரடியாக ஆஜர்படுத்தும் (டெலிபிரசன்ஸ்) மற்றும் "3டி' முறையிலும் காட்சியாக கொண்டு வந்து விசாரணை நடத்தும் திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறது.

தில்லி உயர் நீதிமன்றத்தின் பொன் விழா கொண்டாட்டம் தொடர்பாக நீதிபதி பி.டி. அகமது, பிரதீப் நந்தரஜாக், ஹிமா கோலி, சித்தார்த் மிர்துல் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திங்கள்கிழமை நடைபெறும் தில்லி உயர் நீதிமன்ற பொன் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். காகித பயன்பாடின்றி செயல்படும் அளவிற்கு தொழில்நுட்ப ரீதியில் தில்லி உயர் நீதிமன்றம் நவீனமடைந்து வருகிறது. மேலும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் வழக்கு விசாரணையை நேரடியாக இணையதளத்தில் காணும் வசதி விரைவில் செயல்படுத்தப்படும்.

இதன் மூலம் தில்லி உயர் நீதிமன்றத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. வரும் காலங்களில் வழக்கின் விசாரணைக்கு தொடர்புடைய வழக்குரைஞர்களோ, நீதிபதிகளோ வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் கூட, தொலைக்காட்சி மூலம் அவர்களை நேரடியாக கொண்டு வரும் வசதி (டெலிபிரசன்ஸ்) மூலம் விசாரணை நடத்தப்படும் திட்டம் ஓரிரு ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும்.

அதுமட்டுமின்றி, வழக்கு விசாரணைக்கு தொடர்புடையவர்கள் எங்கு இருந்தாலும் அவர்களை 3டி வடிவில் ஆஜர்படுத்தி விசாரணை நடத்தும் தொழில்நுட்பம் செயல்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.

முக்கியமான பொது நல வழக்குகள் இணையதளங்களில் நேரடியாக ஒலிபரப்பச் செய்ய அதிக அகண்ட அலைவரிசை வசதி தேவைப்படுகிறது. நீதிமன்ற விசாரணைகளை பதிவு செய்து பாதுகாப்பதில் சில பிரச்னைகள் உள்ளன. அவற்றை சிலர் தவறாக பயன்படுத்தவும் கூடும். இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுவிட்டால் வழக்கு விசாரணையை அப்படியே பதிவு செய்துவிடலாம்.

தில்லி உயர் நீதிமன்றத்தில் சுமார் 62,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தில்லி உயர் நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட 60 நீதிபதிகளின் எண்ணிக்கையில், தற்போது 34 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். இந்த முழு எண்ணிக்கையிலான நீதிபதிகள் பணியில் அமர்த்தப்பட்டால் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை 20 ஆயிரமாகவே அல்லது 25 ஆயிரமாகவோ குறைய வாய்ப்பு உள்ளது. தில்லி உயர் நீதிமன்றத்தில் ஆண்டுதோறும் சுமார் 45 ஆயிரம் புதிய வழக்குகள் பதிவாகின்றன என்று தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com